களவாணி 2 பட உரிமை என்னிடமே உள்ளது: விமல், இயக்குநர் சற்குணம் மீது புகார் கூறும் தயாரிப்பாளர்

என்னிடம் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குனர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம்...
களவாணி 2 பட உரிமை என்னிடமே உள்ளது: விமல், இயக்குநர் சற்குணம் மீது புகார் கூறும் தயாரிப்பாளர்

ஓவியா, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - களவாணி 2. இது சிலவருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம். நடிகர் விமலின் 25-வது படம். 

ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் களவாணி 2 படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் படத்தைத் தமிழகம் மற்றும் புதுவையில் வெளியிடுவதற்கான திரையரங்க உரிமைகளை ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் வேறு நிறுவனங்களுக்கு உரிமை வழங்கப்பட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 10 வரை களவாணி 2 படத்தை வெளியிடத் தடை விதித்தது. 

இந்நிலையில் இயக்குநர் சற்குணம், தன்னுடைய வர்மன்ஸ் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்ததாகவும் தனக்கும் ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறி விடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த நிறுவனத்துக்கும் நடிகர் விமலுக்கும் பிரச்னை இருந்தால் அதற்கு தன்னுடைய நிறுவனம் பொறுப்பேற்காது என்று கூறினார். 

இதையடுத்து, தயாரிப்பாளர் சிங்காரவேலன் இந்தப் பிரச்னை தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விமல் தனது ஏ3வி சினிமாஸ் சார்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சொந்தமாக தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் ஃபைனான்ஸ் பெற்றிருந்தார். ஆனால் அவரது அனுபவமின்மை காரணமாக நான் கொடுத்த 3 கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை. இன்னும் 2 கோடி ரூபாய் கொடுத்தால் தான் இந்தப் படத்தை முடித்து வெளியிட முடியும் என்றும் இல்லையென்றால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன் என்கிற ரீதியில் ஒரு மறைமுகமான மிரட்டல் விடுத்தார் நடிகர் விமல். ஆனாலும் நான் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த 30.8.2017 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் விமல் எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த விழாவில் இயக்குநர் சற்குணம் உள்பட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். அந்த விழாவின்போது அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் இரண்டு படங்களைத் தயாரிக்க இருப்பதாகவும் அதில் ஒன்றை வெற்றிவேல் பட இயக்குனர் வசந்தமணி இயக்க உள்ளார் என்றும் இன்னொரு படமான களவாணி-2 படத்தை இயக்குநர் சற்குணம் இயக்க உள்ளார் என்றும் அனைவரின் முன்னிலையிலும் அறிவித்தார் விமல்.

பின்னர் சில நாள்கள் கழித்து என்னை அழைத்துப் பேசிய விமல், இந்த களவாணி 2 படத்தைத் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை ஃஃபைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்தத் தொகையை வைத்து  ஏற்கெனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் களவாணி 2 படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார். 

மேலும் நீங்கள் தற்போது ஒரு படத்துக்கே தொடர்ந்து ஃபைனான்ஸ் செய்வதாக எண்ணிப் பணம் கொடுக்க வேண்டாம். 2 படங்களுக்கு ஃபைன்ஸ் செய்கிறீர்கள் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார். 

நானும் அதற்கு ஒப்புக்கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாயைக் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர் 17ம் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

அதன்பின் மன்னர் வகையறா படம் வெளியான பின்பு விமலுக்கு ஏற்கெனவே கடன் கொடுத்திருந்தவர்கள் அவர்களுக்குச் சேர வேண்டிய கடன் தொகையைத் திருப்பித் தரச்சொல்லி நெருக்கடி கொடுத்து, பணத்தை வாங்கிச் சென்றனர். திரையுலகில் மிகப் பெரிய பொறுப்புகளில் இருக்கும் அவர்களுடன் போட்டியிட்டு விமலுக்கு நான் கொடுத்த பணத்தைக் கைப்பற்ற என்னால் முடியாமல் போனது.

இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு ரூ. 4.32 கோடி தரவேண்டி இருக்கிறது. ஆறு மாதத்திற்குள் அந்தத் தொகையைத் தந்து விடுவதாக விமல் கூறினார். ஆனால் கூறியபடி பணத்தை அவர் தரவில்லை. இந்த நிலையில்தான் களவாணி 2 படம் 'வர்மன்ஸ்  புரொடக்சன்ஸ்' சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது. நான் இயக்குநர் சற்குணத்திடமும் விமலிடமும், ஏற்கெனவே காப்பிரைட் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பலமுறை கூறினேன். ஆனால் அதை அவர்கள் இருவரும் காதில் போட்டு கொள்ளவில்லை. 

பட வேலைகள் முடிந்து படத்தைத் தணிக்கைக்கு அனுப்புவதற்கு முன்பு எனக்குச் சேர வேண்டிய பணத்தைத் திருப்பித் தரும்படியும் அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டியிருக்கும் என்றும் கூறி விமலுக்கு மீண்டும் மார்ச் 17-ம் தேதி கடிதம் அனுப்பினேன். அதை பெற்றுக்கொண்ட அவரிடமிருந்து அப்போதும் எந்தப் பதிலும் வரவில்லை.

அதனால் அவர்மீது வழக்கு தொடரப் போகிறேன் எனக் கூறி அதை அவருக்குத் தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் 8-ம் தேதி விமல் மட்டுமல்லாது இயக்குநர் சற்குணம் உள்ளிட்டோருக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.

ஆனால் அதற்கும் அவர்களிடமிருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை. எங்கள் தரப்பு வாதங்களையும் ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், 'களவாணி 2' படத்திற்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி 2 படத்தை வேறு யாரும் வெளியிட கூடாது என 6 வார கால  இடைக்காலத் தடையும் விதித்துள்ளது.

இந்தப் படத்தின் உரிமை எங்களிடம்தான் இருக்கிறது. இயக்குநர் சற்குணம் இந்தப் படத்தை அவர் தயாரித்ததாகச் சொல்வது சுத்தப் பொய். என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குனர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் என்றுதான் நான் இதைக் கருதுகிறேன்.

நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும் என இயக்குனர் சற்குணம் கூறியிருக்கிறார். உண்மையிலேயே நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெற இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com