காதல்தான் ஆதாரம்!

என் நிலம், என் காற்று, என் வெப்பம், என் மனிதர்கள்
காதல்தான் ஆதாரம்!

'என் நிலம், என் காற்று, என் வெப்பம், என் மனிதர்கள்.... இதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக்கதை.' புத்தகங்கள் குவிந்து கிடக்கும் அறைக்குள்ளிலிருந்து சிரிக்கிறார் மு.களஞ்சியம். அரசியல் களம், போராட்டம் என பரபரப்பாக இயங்கி வந்தவர் சிறு இடைவெளிக்குப் பின் சினிமா பக்கம் வந்திருக்கிறார். 'முந்திரிகாடு' இவர் இயக்கத்தில் அடுத்து வருகிற படம். இமையம் எழுதிய 'பெத்தவன்' நாவல் படித்திருக்கிறீர்களா....? அதன் தழுவல்தான் இந்தப் படம். தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் எளிய மக்களிடம் நுணுக்கமாக பரவி கொண்டிருக்கும் பிரிவினை படி நிலைகளையும், அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பேசுகிற படம். அன்பை, அக்கறையை முன் வைக்கிற காதல். உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். ஆனால் உண்மையேதான்.'  

காதல்தான் கதையின் ஆதாரம் என புரிந்து கொள்ள முடிகிறது....

காதலைப் பேசாத... காதலை எழுதாத... காதலைக் கொண்டாடாத கவிஞர்கள் இல்லை; படைப்பாளிகள் இல்லை. காதலைக் கடக்காத... காதலுடன் கைகோர்க்காத மனிதர்களும் இல்லை...காதல்தான்... காதல்மட்டும்தான் அனைத்துக்கும் கிரியா ஊக்கி. 

உள்ளடக்கம் புரிய வருகிறது.... .

நவீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வகையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் நிறைய படிக்கிறார்கள். வேலைக்கு செல்கிறார்கள். மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பழகுகிற, நட்பு பாராட்டுகிற, காதலிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், நவீன வாழ்க்கை அளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்கிற மனம், புறவிளைவான காதல் திருமணங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உற்று நோக்கினால் இதுதான் பக்குவப்பட்ட சமூகமா என்ற கேள்வி எழுகிறது. தீவிரவாதத்தால் மாண்டவர்களைவிடக் காதலால்,  காதலின் பெயரால் இறந்தவர்கள்தான் அதிகம் என ஒரு புள்ளி விவரம் குருதி சொட்டப் புலம்புகிறது. 

கடந்த 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதே காலகட்டத்தில் தீவிரவாதச் செயல்களால்  இறந்தவர்கள் 20 ஆயிரம் பேர். இதே ஆண்டுகளில்தான் காதலுக்காக, காதலின் பெயரால் கடத்தப்பட்டவர்கள் 2.6 லட்சம் பேர்.  காதல் தற்கொலைகளில்,  மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த 15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்துக்கு மேல் தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்கிறது அந்தப் புள்ளி விவரம். இந்த ரத்தக்கறையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பிற மாநிலங்கள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம்,  ஒடிசா, அசாம். காதலும்தான் அவசியம் என இந்த மானிடர்கள் புரிந்துக் கொள்ளவேயில்லை. அதை இந்தக் கதையில் கடந்து போகிற சிலருக்கான அனுபவங்களும், துயரங்களும்தான் கதை.

சமரசங்கள் இல்லாமல் இந்த கதைக்கு முழு வடிவம் கொடுத்திருக்க முடியாது....

நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கைதான் இந்தப் படத்துக்கான வடிவம். நீங்கள் எப்படி நினைத்தாலும் கதை, அப்படியே அதை பேசும். ஒரு சினிமா 2 மணி நேரம்தான், ஆனால் ஒவ்வொரு வாழ்க்கையும் 24 மணி நேரம். வாழ்க்கைதான் இங்கே யோசிக்கவே முடியாத சினிமா. உங்களை கடந்து போகிற ஒவ்வொரு எளிய மனிதனும் இந்த சினிமாவில் தென்படுவான். ஒரு காதல், ஒரு சம்பவம், ஒரு பிரச்னை.. என எதையும் இந்தக் கதையில் முன்னிலைப்படுத்தி பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் அதை சுற்றியிருக்கிற மனிதர்களை விட்டும் அகல முடியாது. எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பது சந்தோஷத்துக்காக மட்டுமேதான். சக மனிதர்களின் அன்பும், அரசியலும்தான் இங்கே மூலதனம். சில சமானியர்களின் குறிப்புகள் என்று கூட இதைச் சொல்லலாம். நானே தயாரிப்பாளர் என்பதால் பிரச்னை இல்லை. 

சீமான் இருப்பதால், இன்னும் அரசியல் வெளிச்சம் விழுமே....

தினமும் ஒரு போராட்டம் என்று களத்தில் இருக்கிறவர் அண்ணன் சீமான். நடிப்பதற்கு அழைத்து வந்தால், இதையும் போராட்ட களமாகவே பார்த்தார். கதையில் இருந்த வீச்சு அப்படி. 'மேடையில் பேசுவது மாதிரியே பேசுங்கள்' என்றேன். அது மேடை. இது சினிமா என மாறுபட்ட கோணம் தந்தார். நானே எதிர்பார்க்காத ஒன்று. தோழர் சி. மகேந்திரனின் மகன் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சுப பிரியா கதாநாயகி. என் படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதுவும் அது போலவே வந்திருக்கிறது.

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com