கங்கனா நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: படப்பிடிப்பு நிலவரம் குறித்து தயாரிப்பாளர்!

கங்கனா நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: படப்பிடிப்பு நிலவரம் குறித்து தயாரிப்பாளர்!

தமிழ் உச்சரிப்பு முதல் பரதநாட்டியம் வரை எல்லாமும் கற்றுக்கொண்டிருக்கிறார்...

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட்  நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது. 

புரட்சித்தலைவி என ஜெயலலிதா அழைக்கப்பட்டதால், தமிழில் தலைவி என்றும், ஹிந்தியில் ஜெயா என்ற பெயரிலும் இத்திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ். 

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் சாய்லேஷ் ஆர். சிங் பேட்டியளித்ததாவது: 

விஜயேந்திர பிரசாத் மற்றும் ரஜத் அரோரா உருவாக்கிய கதையைப் பார்த்துவிட்டோம். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள். மணாலி சென்று இப்படத்துக்காகத் தயாராகி வருகிறார் கங்கனா. தமிழ் உச்சரிப்பு முதல் பரதநாட்டியம் வரை எல்லாமும் கற்றுக்கொண்டிருக்கிறார். திறமையான நடிகை. அவரை மக்கள் ஜெயலலிதாவாகப் பார்க்கும்படியாக நிச்சயம் மாறிவிடுவார். அக்டோபர் முதல் வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்கும். மைசூரில் படப்பிடிப்பு தொடங்கி பிறகு சென்னையில் நடைபெறும். ஜெயலலிதாவின் கதையைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே அதில் கற்பனையைக் கலக்க முடியாது. பெயர்களும் சம்பவங்களும் முடிந்தவரை உண்மையாக இருக்கவே மெனக்கெடுகிறோம். 

ஜெயலலிதா வேடத்துக்கு, பேசாமல் தமிழ் நடிகை ஒருவரைத் தேர்வு செய்யலாமா என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனால் கங்கனாவுக்கு இந்தியா முழுக்கப் பேர் உள்ளது. எனவே அவரைத் தேர்வு செய்தோம். சென்னையிலேயே கங்கனாவை ஜெயலலிதாவாகப் பார்க்கப் பலர் ஆர்வமாக உள்ளார்கள். இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் பிரபலம், ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை இந்தியா முழுக்கக் கொண்டாடப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com