வீட்டிலேயே FDFS படக் காட்சி: சவாலை எதிர்கொள்ளத் தயாராகும் பிவிஆர் சினிமாஸ்!

திரையரங்குகளில் கிடைக்கும் வசூல் குறித்து நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இதன்மூலம்...
வீட்டிலேயே FDFS படக் காட்சி: சவாலை எதிர்கொள்ளத் தயாராகும் பிவிஆர் சினிமாஸ்!

ஜியோ ஜிகா ஃபைபர் சேவைத் திட்டம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபரும், மேலாண் இயக்குநருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி, ஜியோ ஜிகா ஃபைபர் சேவைத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 

வீடுகளுக்கு ஃபைபர் கேபிள்கள் மூலம் பிராட்பேண்ட் சேவை வழங்கும் இத்திட்டத்தில் குறைந்தபட்ச வாடகை ரூ.700 ஆகவும் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச அழைப்புகள், அதிவேகமான 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தளம், வாழ்நாள் சந்தாதாரராக இணைபவர்களுக்கு எல்இடி டிவி போன்றவையும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்துக்காக இதுவரை 1.50 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளார்கள். பிராண்ட்பேட் இணையத்தள வேகம் 100 எம்பிபிஎஸ் ஆகவும் பிறகு 1 ஜிபிபிஎஸ் ஆகவும் மாறும். 

இத்திட்டத்தில் உள்ள இந்த அம்சம்தான் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. ஜியோ ஜிகா ஃபைபர் சேவைத் திட்டத்தில் புதிய படங்களை வீட்டிலேயே பார்க்கும் வசதி கிடைக்கவுள்ளது. திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்களை அன்றைய தினமே முதல் காட்சியிலேயே இதன் ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் பார்க்கமுடியும். 

ரிலையன்ஸின் இந்த அறிவிப்புக்கு பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எஃப்ஐசிசிஐ அறிக்கையின்படி, மார்ச் 2019 இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் கிடைத்த ரூ. 174.5 பில்லியன் வருமானத்தில் (உள்ளூர் மற்றும் வெளிநாடு) 75% வருமானம் திரையரங்குகளின் மூலமாகக் கிடைக்கிறது. அடுத்த வருடங்களில் பார்வையாளர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் 2018, திரைப்படத்துறைக்குச் சாதனை வருடம். அமெரிக்கா/கனடா, சீனா ஆகிய நாடுகளில் படங்களுக்குக் கிடைத்த வசூல், முறையே 11.9 பில்லியன் டாலர் மற்றும் 7.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளன.

பல வருடங்களாகப் படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதே விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சரியான நடைமுறையாக உள்ளது. இந்தியாவிலும் உலகளவிலும் சரியான இடைவெளியில் திரையரங்குகளிலும் ஸ்டீரிமிங் தளங்களிலும் படங்களை வெளியிடுகிறார்கள். திரையரங்குகள் ரசிகர்களை ஒன்றுசேர்த்து மறக்கமுடியாத அனுபவங்களைத் தருகின்றன. இதன்மூலம் திரைத்துறை வியாபாரத்தில், வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற திரையரங்கு வியாபாரம் வளர்ந்த பகுதிகளிலும் அமோக வசூலைப் படங்கள் குவிக்கின்றன.

ஒரு படத்தைத் திரையரங்கிலும் வீட்டிலும் பார்ப்பது என்பது இரண்டுமே தனித்தனியான அனுபவத்தைத் தருபவை. இரண்டுக்கும் வியாபாரத்தில் இடமுண்டு. இரண்டுமே வருங்காலத்திலும் நிலைத்து நிற்கும். திரையரங்குகளில் கிடைக்கும் வசூல் குறித்து நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இதன்மூலம் பிவிஆர் திரையரங்குகளை நாடெங்கும் விரிவுபடுத்த முனைப்புடன் உள்ளோம். இதன்மூலம் ரசிகர்களுக்கு எதனாலும் வழங்கமுடியாத அனுபவத்தைத் திரையரங்குகளின் வழியாகத் தரவுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com