தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம்: இயக்குநர் வசந்த பாலன் கோபம்!

தமிழ் உச்ச நட்சத்திரங்களும் திரை ஆளுமைகளும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்...
தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம்: இயக்குநர் வசந்த பாலன் கோபம்!

66-வது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.  மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. விருதுக்குத் தேர்வான திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் குறித்த அறிவிப்பை  விருது  நடுவர் குழுத் தலைவர் ராகுல் ரவய்ல் வெளியிட்டார். இந்த வருடம் ஹிந்திப் படங்கள் அதிகபட்சமாக 14 தேசிய விருதுகளை அள்ளியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் கன்னட மொழிப் படங்கள், 10 விருதுகள். முக்கியமான திரையுலகங்களில் சுத்தமாக எந்த விருதுமே பெறாத திரையுலகம் என்று கோலிவுட்டைத்தான் சொல்லவேண்டும். சிறந்த தமிழ்ப் படத்தைத் தவிர வேறெந்த தேசிய விருதும் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் தேசிய விருது தேர்வுகள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:

தேசிய விருது வழங்குவதில் தமிழ்த் திரைப்படங்களும், தமிழ்க் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு, பரியேறும் பெருமாள், வடசென்னை, ராட்சசன், 96 உள்ளிட்ட நிறைய நல்ல, திறமையான, தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா? பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி , சாதனா தன் உயிரைக் கொடுத்து அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தார்கள். யுவனின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு... என்ன குறை கண்டீர்கள்? கேள்விப்பட்டபோதுதான் தெரிந்தது, தமிழில் இருந்து நல்ல நடுவர்களும் தேர்வுக் குழுவுக்கு அழைக்கப்படவில்லை. கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள். முப்பது நாள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன? இந்த நிலை மாறவேண்டும். தமிழ் உச்ச நட்சத்திரங்களும் திரை ஆளுமைகளும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com