பிக் பாஸ் சர்ச்சை தொடர்பாக நடிகை மதுமிதா பதில்!

மீதிப் பணம் கேட்டேன். அவர்களும் விரைவில் பணத்தைக் கொடுத்துவிடுவதாகச் சொன்னார்கள்.
பிக் பாஸ் சர்ச்சை தொடர்பாக நடிகை மதுமிதா பதில்!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. ஆனால் நடிகை மதுமிதா இதை மறுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த காரணத்துக்காகக் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. நடிகை ஷெரின் மற்றும் இதர போட்டியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக தன் கையைத் தானே அறுத்துக்கொண்டார் மதுமிதா. இதனால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் சென்னை - கிண்டி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. விஜய் டிவி நிறுவனத்தின் சட்டத்துறை மேலாளர் பிரசாத் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக மதுமிதா ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். பிறகு, ஒரு நாளைக்கு ரூ. 80,000 வீதம் மீதமுள்ள 42 நாள்களுக்கான பணத்தைத் திருப்பித் தருவதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனாவுக்கு அளித்த குறுஞ்செய்தியில், பணத்தை இரு நாள்களில் தராவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த நடிகை மதுமிதா கூறியதாவது:

திரைத்துறையில் என் மீது எந்தப் புகாரும் வந்ததில்லை. நான் தனியார் தொலைக்காட்சிக்குத் தற்கொலை மிரட்டல் கொடுக்கவில்லை. மீதிப் பணம் கேட்டேன். அவர்களும் விரைவில் பணத்தைக் கொடுத்துவிடுவதாகச் சொன்னார்கள். ஆனால் எதற்காகத் தற்போது புகார் அளித்தார்கள் எனத் தெரியவில்லை. இதற்காக அந்தத் தொலைக்காட்சி நிர்வாகமும் கமல் ஹாசன் சாரும் பேசித்தான் தீர்வு காணவேண்டும். டீனா என்பவருக்கு நான் தனிப்பட்ட முறையில் நிறைய மெசேஜ்களை அனுப்பியுள்ளேன். அதற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. இந்த விஷயத்தால் நான் மன அழுத்தத்தில் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com