கஞ்சா பழக்கத்திலிருந்து மீண்டு வந்தது எப்படி?: மேடையில் உண்மையைச் சொன்ன இயக்குநர் கே. பாக்யராஜ்

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற வெறி உள்ளது, இப்படிக் கஞ்சா அடித்துக்கொண்டிருக்கிறோமே என்று தோன்றியது...
கஞ்சா பழக்கத்திலிருந்து மீண்டு வந்தது எப்படி?: மேடையில் உண்மையைச் சொன்ன இயக்குநர் கே. பாக்யராஜ்

களவும் கற்று மற என்பது போல சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு அதை விட்டுவிட்டால் நல்லது என்று இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் பேசியதாவது:

நானே நிறைய தடவை கஞ்சா அடித்துள்ளேன். அது எனக்கு எப்படிப் பழக்கமானது என்றால், கோயம்புத்தூர் குட்டப்பார்க்கில், பின்னாளில் என்னிடம் உதவியாளராக இருந்த விஸ்வம், அப்போது கேரம் போர்டு விளையாட வருவார். என்னுடைய நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க அவரை அழைத்திருந்தேன். கேரம் போர்டு விளையாடும்போது சிகரெட் பாக்கெட் எடுத்து வருவார். சிகரெட்டில் முனை மட்டும் வேறு மாதிரி இருந்தது. அதில் கஞ்சா துகளைப் போட ஒரு உதவியாளரை வைத்திருந்தார். நல்லாருக்கும் சாப்பிட்டு பாரு என்று என்னிடம்  சொன்னார். சிகரெட் குடிப்பேன், ஆனால் இது பயமாக உள்ளது என்று மறுத்தேன். அட, அந்தப் பயமெல்லாம் போறதுக்குத்தான் இது என்றார். 

சரி என்று கஞ்சா கலந்த சிகரெட்டைக் குடித்துப் பார்த்தால் நன்றாகத்தான் இருந்தது. கேரம் போர்டு ஆடும்போதெல்லாம் அந்த சிகரெட்டைக் குடித்துக்கொண்டுதான் இருந்தேன். சில நேரத்தில் அது நன்றாகவே வேலை செய்யும். நமக்கு இல்லாத யோசனைகள் எல்லாம் வரும். அதே பழக்கம் கொண்ட ஒரு நண்பன், ஒருநாள் கேரம் போர்டில் இஷ்டத்துக்கு விளையாடிக் கடைசியில் மீதமுள்ள ஒரு காயினைக்கூடப் போடமுடியாமல் தவித்தான். கஞ்சா அடிக்கும்போது கடலை மிட்டாய், தேன் மிட்டாய் எல்லாம் சேர்த்து உண்போம். ஒருநாள் கஞ்சாவை நன்றாக அடித்த பிறகு சுற்றிலும் பார்த்தேன். எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு அதுதான் தாக்கமே. எதற்குச் சிரிக்கிறோம் என்றே தெரியாது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற வெறி உள்ளது, இப்படிக் கஞ்சா அடித்துக்கொண்டிருக்கிறோமே என்று தோன்றியது. புத்தருக்கு போதி மரத்துக்கு அடியில் ஞானம் வந்ததுபோல எனக்கு போதை மரத்துக்கு அடியில்தான் அது தெரிந்தது. அதற்குப் பிறகுதான் சென்னை சென்று சாதிக்கவேண்டும் என்று நினைத்து கஞ்சாப் பழக்கத்தை விட்டொழித்தேன். 

அதே விஸ்வம் என்னிடம் உதவியாளராகப் பிறகு வந்து சேர்ந்தார். அப்போதும் அவருக்கு அந்தப் பழக்கம் இருந்தது. என் முன்னால் குடிக்காமல் மறைவாகச் சென்று சிகரெட் அடிப்பார். அவரிடம், நான் இதையெல்லாம் விட்டுவிட்டு வந்துதான் நன்றாக இருக்கிறேன். நீங்களும் விட்டுவிடுங்களேன் என்றேன். களவும் கற்று மற என்பது போல சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு அதை விட்டுவிட்டால் நல்லது என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com