நான் ஒரு சூப்பர் மாடல் என நிரூபிக்கவா?: மீரா மிதுன் சவால்!

நான் வளர்த்துவிட்ட பெண்களே என்னைத் தவறாகப் பேசுகிறார்கள். நான் சாதித்தவற்றில் 10% சாதிக்கமுடியுமா எனப் பாருங்கள்...
நான் ஒரு சூப்பர் மாடல் என நிரூபிக்கவா?: மீரா மிதுன் சவால்!

கொலை மிரட்டல் விடுத்ததாக, நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தொழிலதிபர் ஜோ மைக்கேல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கும் நடிகை மீரா மிதுனுக்கும் இடையே பணப்பிரச்னை உள்ளது. தற்போது என் மீதும் என் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளார். இதனால் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை மீரா மிதுன் தன் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்ததாவது:

சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரவி, ஜோ மைக்கேல் ஆகிய இருவர் மீதும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தேன். அவர்கள் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அழகிப் போட்டி நடத்த விடவில்லை என்று கூறியிருந்தேன். நான் இந்தப் புகாரை முதலில் அளித்தேன். அதற்கு முன்னால் என் மீது எந்த வழக்கும் தொடுக்கவில்லை. நான் புகார் அளித்தவுடன் என் மீது ஆயிரத்தெட்டு புகார்கள் கொடுக்கிறார்கள். புகார் அளித்த சில நாள்களில் என்னுடைய அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது. இதை எல்லாம் செய்தது அஜித் ரவி தான். இப்போது ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது, என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள் எனச் சொல்கிறார்கள். ஏற்கெனவே எனக்கு எதிரான வழக்கில் அவர்கள் தோற்றுள்ளார்கள். நான் நிரபராதி என நிரூபணம் ஆகிவிட்டது. அடுத்ததாக என் மீது எந்த வழக்கும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்து இந்தப் புகாரை அளித்துள்ளார்கள். 

பிக் பாஸ் முடித்துவிட்டு வெளியே வந்துப் பார்த்தால் யூடியூப் விடியோக்களில் என்னைப் பற்றி மோசமாகப் பேசியுள்ளார் ஜோ மைக்கேல். இது ஒரு பெண்ணுக்குத் தொல்லை அளிப்பதாகும். அதைப் பார்த்து நான் மனத்தளவில் பாதிக்கப்பட்டேன். என் பெயரை மிகவும் கெடுத்துள்ளார்கள். கோபத்தில் தோன்றியதை எல்லாம் பேசுவோம் இல்லையா, அதுபோல நான் என் மேலாளரிடம் கோபத்தில் பேசிய வார்த்தைகள் அவை. யார் இவன், என்னைப் பற்றி அசிங்கம் அசிங்கமாகப் பேசியுள்ளான். அவனைத் தூக்கலாமா எனக் கோபத்தில் பேசிய ஆடியோ அது. நான் கூலிப்படையினரிடமோ ஒரு கொலைகாரனிடமோ ஜோவை என்ன செய்யலாம் எனப் பேசவில்லை. என் மேலாளரிடம் பேசியுள்ளேன். என்னுடைய மேலாளர் எதற்காக ஜோவிடம் போய்ச் சேர்ந்தார்?

நான் ஒரு நடிகை. டப்பிங்குக்காக பல ஆடியோக்களை அனுப்புவேன். என்னுடைய மொபைலை எடுத்து அதை ஹேக் செய்ததே தவறான காரியம். அதை வைத்து ஜோவிடம் வழங்கியது இரண்டாவது தவறு. இந்த மேலாளரையே ஜோ தான் அனுப்பினாரோ என எனக்குச் சந்தேகமாக உள்ளது. நான் யாருடைய தொலைப்பேசி அழைப்பையும் பதிவு செய்வதில்லை. எனக்கு அந்தப் பழக்கம் இல்லை. இப்போது கூடச் சொல்கிறேன். என் மீது கை வையுங்கள், ஆனால் என் குடும்பத்தின் மீது கை வைத்தால் அசிங்கமாகப் பேசுவேன். ஜோ மைக்கேலும் மேலாளரும் என் அம்மாவுக்கு போன் செய்து பணம் கேட்கிறார்கள். ஒரு அழகிப் போட்டி பட்டம் எடுத்ததற்கு எனக்கு இவ்வளவு பிரச்னையா? நான் வளர்த்துவிட்ட மாடல்களே என்னிடம் நன்றியுடன் இருப்பதில்லை. இனிமேல் என் தொழிலில் நான் கவனம் செலுத்தப் போகிறேன். 

ஜோ மைக்கேலைக் கூட மன்னித்து விட்டுவிடுவேன். ஆனால் கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி மீது தான் முதலில் புகார் அளித்தேன். ஆனால் இந்த விவகாரத்தில் அவருடைய பெயர் எங்கேயும் வருவதில்லை. இருவரும் என்ன சொல்கிறார்கள் என்றால், இருவர் பேச்சையும் கேட்டு நான் தலையாட்ட வேண்டும் என்கிறார்கள். அவர்கள் நிறுவனத்திலிருந்து நான் வெளியே வந்ததால், பாருங்கள், மீராவுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் என மற்ற மாடல்களுக்கும் வலியுறுத்துகிறார்கள். இந்த நிலையை எதிர்த்து நான் போராடிக்கொண்டிருக்கிறேன். மாட்டிக்கொண்டிருக்கும் மாடல்களை நான் காப்பாற்றுவேன். மற்ற மாடல்களைக் காப்பாற்றுவதற்காக நான் சிறைக்குச் செல்லத் தயார். நான் தான் ஜோ மைக்கேல் மீது முதலில் புகார் அளித்தேன். அதற்குக் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? என்னைப் பற்றி எவ்வளவு மோசமாகப் பேட்டியளிக்கிறார்கள்! ஒரு பெண்ணைப் பற்றி இப்படித்தான் பேசுவார்களா? மன உளைச்சலில் நான் தற்கொலை செய்துகொண்டால் என்ன செய்வீர்கள்? ஆனால் ஜோ மைக்கேல் மீது எந்த வழக்கும் இல்லை. அந்த ஆடியோவில் நான் பேசியதுகூட அவருக்காகப் பேசியதா அல்லது டப்பிங்குக்காகப் பேசியதா என எனக்குத் தெரியவில்லை. 

நான் ஜோ மைக்கேலைத் தொலைப்பேசியில் அழைத்து மிரட்டினேனா? கூலிப்படையினரிடமும் ரெளடியிடமும் போன் செய்து மிரட்டினேனா? என்னைப் பார்த்தால் கொலை பண்ணுவது போலவா தெரிகிறது? நான் முதலில் புகார் அளித்த பிறகுதான் அடுக்கடுக்கான புகார்கள் என் மீது வந்துள்ளன. அதற்கு முன்பு எல்லோரும் எங்கிருந்தார்கள்? இனிமேல் என்னைப் பற்றி பேசினால் வழக்கு தொடுப்பேன். உங்களுக்குப் புகழ் வேண்டுமென்றால் என்னைப் பற்றி நல்லவிதமாகப் பேசி புகழைத் தேடிக்கொள்ளுங்கள். தமிழ்ப் பெண்களுக்கான ஒரு அழகிப் போட்டி, அங்கிருந்துதான் இது எல்லாம் தொடங்கியது. நான் ஒரு சூப்பர் மாடலா எனக் கேட்கிறார் ஜோ மைக்கேல். நான் நிரூபிக்கவா? என் சாதனைகளைச் சொல்லவா? நான் தான் சென்னையின் ஒரே சூப்பர் மாடல் என பத்திரிகையில் எழுதியதைக் காண்பிக்கவா? வாழ்க்கையில் ஜெயித்து நிற்கும் ஒருவரைப் பற்றிப் பேசாமல் என்னைப் பற்றி பேசுபவர்கள் ஏதாவது சாதித்துக் காண்பிக்கச் சொல்லுங்கள். நான் வளர்த்துவிட்ட பெண்களே என்னைத் தவறாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் சொல்கிறேன், நான் சாதித்தவற்றில் 10% சாதிக்கமுடியுமா எனப் பாருங்கள். அதற்குப் பிறகு என்னைப் பற்றிப் பேசுங்கள். 

இரண்டு பேர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். துன்புறுத்துகிறார்கள் என்று சொன்னதற்கு ஒரு நடவடிக்கையும் இல்லை. எதுவுமே இல்லாத ஒரு குரல் பதிவை வைத்து எப்படி என் மீது வழக்குப் பதிவு செய்யலாம்? முதலில் விசாரணை தானே செய்யவேண்டும்! நான் அப்படி என்ன கொலைக்குற்றம் செய்தேன்? என் மீது வழக்குப் பதிவு செய்துகொண்டே இருப்பீர்களா என்று பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com