கவின் குடும்பத்தினருக்கு ஆதரவு அளியுங்கள்: ‘பிக் பாஸ்’ சாக்‌ஷி அகர்வால் கோரிக்கை!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கவினின் குடும்பத்தினர் மூவருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கவின் குடும்பத்தினருக்கு ஆதரவு அளியுங்கள்: ‘பிக் பாஸ்’ சாக்‌ஷி அகர்வால் கோரிக்கை!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கவினின் குடும்பத்தினர் மூவருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த தம்பதி அருணகிரி - தமயந்தி. இவர்களும் இவர்களுடைய மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி, மருமகள் ராணி ஆகிய ஐந்து பேரும் 1998 முதல் 2006-ம் ஆண்டு வரை திருச்சியில் சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளார்கள். ராஜலட்சுமி, பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கவினின் தாய் ஆவார்.

கவின் குடும்பத்தினர் நடத்திய சீட்டு கம்பெனியில் 34 பேர் தவணை முறையில் சீட்டுப்பணம் கட்டி வந்துள்ளார்கள். ஆனால் பணம் கட்டியவர்களுக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் பணம் திருப்பித்தரவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் 2007-ல் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்கள். தங்களுக்கு ரூ. 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயைத் திருப்பித் தரவேண்டும் எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்கள். 

இந்த வழக்கு திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அருணகிரி, சொர்ண ராஜன் ஆகியோர் இறந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தமயந்தி, ராணி, ராஜலட்சுமி ஆகியோருக்குப் பண மோசடி வழக்கில் 5 வருடங்கள் சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் சீட்டு நிதியங்கள் சட்டப்படி இரண்டு வருடச் சிறைத்தண்டனை, இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் ஏகக் காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என ரூ. 29 லட்சம் வழங்கவேண்டும் எனத் திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். 

இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். கவினின் குடும்பத்துக்கு எதிராகப் பேசுவதற்கு மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் சாக்‌ஷி அகர்வால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் மக்களிடம் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார். 

ட்விட்டரில் சாக்‌ஷி அகர்வால் கூறியதாவது: இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரைக் கிண்டலடிக்க வேண்டாம் என என் ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களைக் கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com