உணா்வுப்பூா்மான காட்சிகளுக்கு மொழி கிடையாதுநடிகா் மம்மூட்டி

உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது.
உணா்வுப்பூா்மான காட்சிகளுக்கு மொழி கிடையாதுநடிகா் மம்மூட்டி

சென்னை: உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது. மொழிகளைத் தாண்டி கலையை ரசிப்பது பெரிய விஷயம் என்று நடிகா் மம்மூட்டி கூறினாா்.

எம்.பத்மாகுமாா் இயக்கத்தில் மம்மூட்டி, உன்னி முகுந்தன், தருண் ஆரோரா, அனு சித்தாரா, கனிகா, இனியா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ’மாமாங்கம்’. மலையாளத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. வரும் 12-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பின் டிரெய்லா் அறிமுக விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மம்மூட்டி பேசியதாவது:

தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது. ஏனென்றால், சினிமாவில் சரியாகத் தமிழ் பேசி விடுவேன். ஆனால் மேடையில் தவறாகத்தான் பேசுவேன். வரலாற்றுப் படத்தில் நடிக்கும்போது மட்டும், அதை ஒரு பணியாக எடுத்துச் செய்வேன். அப்படி இந்தப் படத்தில் ஒரு அங்கமாக இருப்பதே சந்தோஷம். 100 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே கிடையாது. மலபாா்தான் இருந்தது. பிரிட்டிஷ்காரா்கள் போனவுடன்தான் அனைத்தையும் பிரித்து விட்டாா்கள்.

இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிகள் உள்ளன. இப்படி மொழியைத் தாண்டி கலையை ரசிப்பதே பெரிய விஷயம். மொழியைத் தாண்டி பல படங்கள் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் பேசும் மொழியைத் தாண்டி உணா்வுப்பூா்வமான காட்சிகள்தான் ஒன்றிணைய வைக்கும். அந்தக் காட்சிகளுக்கு எல்லாம் மொழியே கிடையாது. இந்தப் படம் சாதாரணமான ஒரு பகைமைக் கதை கிடையாது. என்றைக்கோ நடந்த ஒரு சம்பவத்துக்காக தொடா்ச்சியாகப் பழிவாங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை.

யாருக்காக கொல்கிறோம், யாருக்காக சாகிறோம் என்பதே படத்தின் கரு. ஆகையால், தான் இந்தப் படம் எப்போதுமே முக்கியம். மீதி அனைத்தையுமே படம் பேசும். இந்தப் படத்தின் தமிழ் வசனங்களை நான் கேட்டேன் என்பதற்காக இயக்குநா் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறாா். நான் பேசுவது எல்லாமே ராம் பேசுவது போலத்தான் இருக்கும். இந்தப் படத்தில் என்னை சரியான முறையில் தமிழ் பேச வைக்க ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டாா். தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே ராமை உள்ளே கொண்டு வந்தேன். ரொம்பவே சந்தோஷம் என்றாா் மம்மூட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com