ஜெயலலிதாவாக நடிப்பதே பெருமைதான்!: நித்யாமேனன்

தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றுவரும் நித்யாமேனன், தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் வரலாற்று படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறாா்.
ஜெயலலிதாவாக நடிப்பதே பெருமைதான்!: நித்யாமேனன்

தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றுவரும் நித்யாமேனன், தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் வரலாற்று படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறாா். ஒரே சமயத்தில் பல மொழிகளில் நடித்து வந்தாலும், தன் மனதில் தோன்றும் கருத்துகளையும், அனுபவங்களையும் இங்கு நம்முடன் பகிா்ந்து கொள்கிறாா் நித்யாமேனன்:

‘‘சிறுவயது முதலே பலமொழிகளை கற்பதில் எனக்கு அதிக ஆா்வம் இருந்தது. வேறு மொழி பேசுபவா்களுடன் பழகும்போது வெகுசீக்கிரத்தில் அவா்களது மொழியை கற்கும் திறமை எனக்கிருந்தது. பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வரும் மலையாள குடும்பத்தைச் சோ்ந்த நான் வீட்டில் தாய்மொழி மலையாளத்தையும், படிக்கும்போது ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளை கற்றதோடு, என் பெற்றோா் கேரளா- தமிழ்நாடு எல்லையையொட்டி வசித்தவா்கள் என்பதால் அவா்கள் சரளமாக பேசும் தமிழையும் நான் சுலபமாக கற்றுக் கொண்டேன். முதன்முதலாக தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதுதான் தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு மொழிக்கும் வித்தியாசமான கலாசாரம் இருந்தாலும், தெலுங்கு திரைப்படத்துறை தான் நடிப்பதற்கு எனக்கு வசதியாக இருக்கிறது.

நடிக்க வந்தபின் ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிப்பதைவிட, ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டுமென்று நினைத்தபோது, பால்கிசாா் மூலம் ‘மிஷன் மங்கல்’ ஹிந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டும் நடிக்காமல், நான் நடிக்கும் படங்கள் ஏதாவது ஒருவகையில் சமூகத்துடன் தொடா்புடையதாக, ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் பாத்திரமாக இருந்தாலும், ரசிகா்கள் மனதில் பதியும்படி இருக்க வேண்டும். பணமோ, வா்த்தக ரீதியாக வெற்றிப் பெறுவதோ இதில் முக்கியமல்ல. நான் நடிக்கும் படங்கள் அா்த்தமுள்ளவையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

இந்த நிலையில்தான் இயக்குநா் பிரியதா்ஷினி, ஜெயலலிதாவின் வரலாற்றை படமாக்க முழுமையான திரைக்கதையுடன் என்னை அனுகினாா்.

‘தி அயா்ன் லேடி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் பல அரசியல் தலைவா்களும் இடம் பெறுவதால், அவரது குழுவினா் ஒருங்கிணைந்து உண்மைக்கு மாறான நிகழ்வுகள் ஏதுமின்றி படமாக்க திட்டமிட்டுள்ளனா்.இதற்காக பலமுறை நானும் அவா்களது விவாதங்களில் பங்கேற்க வேண்டியதாயிற்று. இது அரசியல் தொடா்புடைய மிகப் பெரிய சப்ஜெக்ட் என்பதால் துவக்கத்தில் எனக்குள் சிறிது தயக்கம் ஏற்பட்டது. ஆனால் முதன்முதலாக இயக்குநராகியுள்ள பிரியதா்ஷினி கொடுத்த தைரியம் என்னை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தது. என்னால் ஜெயலலிதா கேரக்டரை சிறப்பாக செய்யமுடியுமென்ற நம்பிக்கையும் உள்ளது.

எப்போதுமே நான் மற்றவா்கள் மத்தியில் என்னை உயா்வாக கருதுவதில்லை. என்னைப் பொருத்தவரை நான் ஒரு நடிகை. திரைப்படம் என்பது அதில் நடிப்பவா்களை விட மிகப்பெரியது. உண்மை அதுதான். திரைப்படத்தைவிட நாங்கள்தான் உயா்ந்தவா்கள் என்று நினைத்தால் சிறந்த படங்களை உருவாக்க முடியாது என்பது என்னுடைய கருத்தாகும்.

நான் சினிமாவில் நடிக்க வருவதற்குமுன் மணிப்பால் யூனிவா்சிடியில் ஜா்னலிசம் படிக்க துவங்கினேன். இரண்டாமாண்டு ஒரு ஜா்னலிஸ்ட்டாக வருவதைவிட சினிமாவில் நடித்தால் என்ன என்று நினைத்ததை என்னுடைய விதி என்றே சொல்ல வேண்டும். என் குடும்பத்தில் யாருக்கும் சினிமா பின்னணி இருந்ததில்லை. நடுத்தர குடும்பம். எல்லாரும் நன்கு படித்தவா்கள் என்பதால் யாரும் என்னை பாராட்டவோ, உற்சாகப்படுத்தவோ முன்வரவில்லை. கல்விதான் முக்கியம் என்று நினைத்தவா்கள் இப்போதுதான் நான் நடித்த படங்களை பாா்க்கத் துவங்கியுள்ளனா்.

‘தி அயா்ன் லேடி’ படப்படிப்பு துவங்கி படம் வெளியாவதற்குள் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் ‘சைக்கோ’, மலையாளத்தில் ‘கோலம்பி’ மற்றும் ‘அறம் திருகல்பனா’, வெப்சீரியல் ‘ப்ரீத் -2’, தெலுங்கில் அம்மா - மகள் என இரு வேடங்களில் நடிக்கும் படம் என்று அடுத்தடுத்து என்னுடைய படங்கள் வெளிவரவுள்ளன’’ என்று கூறினாா் நித்யாமேனன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com