சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படக்கதை சர்ச்சை: உதவி இயக்குநருக்கு கே. பாக்யராஜ் எழுதிய கடிதம்!

சங்கத்து உறுப்பினர்கள் இரண்டு கதைகளும் ஒன்றே எனக் கூறியதை சாட்சிக் கடிதமாக இதைத் தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வாழ்த்துகிறோம்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படக்கதை சர்ச்சை: உதவி இயக்குநருக்கு கே. பாக்யராஜ் எழுதிய கடிதம்!

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - ஹீரோ. 

சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, அபே தியோல், இவானா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா. இந்தப் படம் கடந்த வார வெளியான நிலையில் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் மித்ரன். 

தன்னிடமுள்ள கதையைத் திருடி ஹீரோ படம் எடுக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் அட்லியுடன் உதவியாளராக இருக்கும் போஸ்கோ பிரபு, நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் தலைமையிலான தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து பாஸ்கோ பிரபுவுக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கே. பாக்யராஜ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த அக்டோபர் 29 அன்று நமது சங்கத்தில் ஒரு புகார் அளித்தீர்கள். எழுத்தாளர் சங்கத்தில் 2017-ல் நீங்கள் பதிவு செய்துள்ள கதை தான் ஹீரோ படமாக எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினீர்கள். மித்ரனிடம் ஹீரோ கதைச் சுருக்கத்தை வாங்கி இரு படங்களின் கதைச் சுருக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். இந்த ஒப்பீட்டுப் பணியை நான் மட்டுமல்லாமல் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 18 பேரும் சேர்ந்து செய்தோம். கடைசியில் தங்கள் கதையும் மித்ரனின் ஹீரோ படக் கதையும் ஒன்றுதான் என்று எல்லோரும் ஒரே முடிவாகக் கூறினார்கள். 

இதையடுத்து இயக்குநர் மித்ரனை எனது அலுவலகத்துக்கு அழைத்தேன். ஆரம்பம் முதல் கடைசி வரை கதையில் பல ஒற்றுமைகள் உள்ளதாக மொத்த உறுப்பினர்களும் கருதுவதாக அவரிடம் கூறினேன். அவர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பிட்டுப் பார்த்த 18 செயற்குழு உறுப்பினர்களிடம் விவாதித்து, அவர்களின் விளக்கத்தைக் கூறவேண்டும் என்று கூறினார் மித்ரன். அதன்படி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மித்ரனின் கருத்தை ஏற்க மறுத்து இரண்டு கதைகளும் ஒன்றுதான் என அனைவரும் கூறினார்கள். தங்களுக்கு கதைக்கான பெயரும் இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுத் தர என்னை அனைவரும் வலியுறுத்தினார்கள். நவம்பர் 22 அன்று மித்ரனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஆனால் 20 நாள்களுக்கு மேலாகியும் மித்ரன் பொறுப்பான பதில் அளிக்காமல், நீதிமன்றத்தின் மூலம் தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருக்க உங்கள் மீது கேவியட் எடுத்து, எங்களுக்கு அதன் பிரதியை அனுப்பியிருந்தார்.     

இதனை சங்கத்தின் மீதான பெரிய அவமதிப்பாகக் கருதி மித்ரன் மீது நடவடிக்கை எடுக்க சங்கத்துப் பொறுப்பாளர்கள் கூறினார்கள். அதற்குள் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதால், நீதிமன்றத்தை நாடுவதாக நீங்கள் கூறினீர்கள். சங்கத்து உறுப்பினர்கள் இரண்டு கதைகளும் ஒன்றே எனக் கூறியதை சாட்சிக் கடிதமாக இதைத் தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வாழ்த்துகிறோம் என்று எழுதியுள்ளார். 

இயக்குநர் மித்ரன்
இயக்குநர் மித்ரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com