இந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த சில்லு கருப்பட்டி இனிக்கிறதா?

ஒரு படத்துக்குள் நான்கு கதைகளைச் சொல்லி, அந்த நான்கிலும் இழையோடும் மையப்புள்ளி ஒன்றுதான்
இந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த சில்லு கருப்பட்டி இனிக்கிறதா?

ஒரு படத்துக்குள் நான்கு கதைகளைச் சொல்லி, அந்த நான்கிலும் இழையோடும் மையப்புள்ளி ஒன்றுதான் என தனது சில்லுக் கருப்பட்டி படத்தின் மூலம் உணர வைத்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். மூன்று சிறுவர்களை மையமாக வைத்து வெளியான இவரது முதல் படமான பூவரசம் பீப்பி அனைவரது மத்தியிலும் பெறும் விமரிசனங்களைப் பெற்றது. அந்த வகையில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், நிவேதா சதிஷ், மணிகண்டன் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கியுள்ள இரண்டாவது படம்தான் சில்லுக் கருப்பட்டி. ஆன்தாலஜி வகைமையில் நான்கு குறுங்கதைகளை ஒருங்கிணைத்து இயக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நான்கு ஒளிப்பதிவாளர்கள் ( மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம் , யாமினி யங்னமூர்த்தி, விஜய் கார்த்திக்) பணியாற்றி உள்ளனர். நகர நெரிசலில் மனிதம் நெய்யும் இப்படம் காட்சிரீதியாக மட்டுமின்றி உரையாடல்கள் நிகழ்த்தியும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. பிரதீப் குமாரின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

பிங்க் பேக், காக்கா கடி, டர்ட்டில்ஸ் வாக், ஹே அம்மு என்று அழகழான தலைப்புக்களில் கூறப்பட்டிருக்கும் இக்கதைகள் அன்பையும் காதலையும் பற்றி வேறொரு கோணத்தில் பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடுபவை. பொதுப்புத்தியில் பதிந்து கிடக்கும் பல விஷயங்களுக்கான மாற்றுநிலையை முன் நிறுத்துபவை. எந்தவொரு விஷயத்தையும் கருப்பு வெள்ளையாக பார்க்கும் மனப்பாங்கினை கேள்விக்கு உட்படுத்த முயற்சித்துள்ளவை. வர்க்க வேறுபாடுகள் உடைய இளம் மனங்களில் துளிர்க்கும் அன்பை சமூகம் எப்படி பார்க்கும்? அழகான இந்த சின்னஞ்சிறு வாழ்க்கையை  அவலமாக்கி ஏன் வாழ்ந்து முடித்துப் போய்விடுகிறார்கள். வாழ்க்கையை ரசித்து, உணர்ந்து திளைத்து வாழ்பவர்கள் எத்தனை பேர்? நேசிப்பதில்கூட இத்தனை ஈகோவா என்று இந்தப் படம் பார்த்த பின் பல கேள்விகள் எழும். ஒவ்வொரு கதையிலும் கதாபாத்திரங்கள் வெவ்வேறு வயதினர்.

முதல் கதையான பிங்க் பேக்கில் பதின் வயதில் மனதில் தோன்றும் உணர்வுகளை மெல்லிய கதையுடன் கூறியிருக்கிறார் இயக்குநர். அது அன்பா காதலா என பெயர் தெரியாத உணர்வுக்குள் சிக்கியிருக்கும் சிறுவன் மாஞ்சாவின் கதை. அவன் நேசிக்கும் பெண் அவன் ஒருபோதும் எட்ட முடியாத உயரத்தில் இருப்பவள் என்பது தெரியாது. அவனுக்குத் தெரிந்தது ஒன்றுதான் தான் நேசிக்கும் பெண்ணுக்கு உரிய பொருளை அவளிடம் எவ்வகையிலாவது சேர்த்துவிட வேண்டும் என்ற அறவுணர்வுதான் அவனுக்கு மேலோங்கியிருந்தது. அன்பை வார்த்தைகளில் கூட முழுவதும் சொல்லிவிட முடியாது. ஆனால் செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்தும் போது அது பன்மடங்காகி விடுகிறது. மாஞ்சாவின் செயல் பணக்காரச் சிறுமியான மைத்ரியின் மென்மனதை இளக்குகிறது. பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு பொருள் காணாமலாகி திரும்பக் கிடைத்தால் அந்த உணர்வினைச் சொல்ல வார்த்தைகளே கிடைக்காது. மைத்ரி தொலைத்த மோதிரத்தை மாஞ்சா கண்டெடுத்த கணத்தில் துவங்குகிறது அழகான அன்பின் அத்தியாயம். பிங்க் பேக் என்ற தலைப்பு இக்கதைக்கு நேர்த்தியாகப் பொருந்திப் போகிறது.  குப்பை பையைக் கூட அழகான பிங்க் நிறத்தில் தேர்ந்தெடுக்கும் ஒரு வர்க்கமும்,  வயிற்றுப் பிழைப்புக்காக அந்தப் பையில் மற்றவர் வீசி எறிந்த பொருட்களில் ஏதேனும் தேறுமா என்று அழுக்கில் ஊறி அலசிப் பார்க்கும் இன்னொரு வர்க்கமும் வாழும் சமத்துவமற்ற இந்த பூமியை சமன் படுத்தும் ஒரே ஆயுதம் அன்புதான். தன்னுடைய மோதிரம் கிடைத்த மகிழ்ச்சியில் மைத்ரி விதவிதமான தின்பண்டங்களை அட்டைப்பெட்டியில் அடைத்து குப்பைத் தொட்டியில் போட்டு அனுப்புகிறாள். அதை எடுக்கப் போகும் முகத்தை அவள் அறிய மாட்டாள், ஆனால் அந்த மனம் அவளுக்குத் தெரியும். இருவரும் சந்திப்பார்களா, இத்தகைய நட்பு அல்லது காதல் சாத்தியமா என்ற விஷயங்களைத் தொடர்ந்து இக்கதை பயணிக்கவில்லை. எந்தப் புள்ளியில் நிற்கிறதோ அங்கிருந்து நம் மனங்களில் பயணப்படுகிறது. ஒரு படைப்பின் வேலை அதுவேயன்றி வேறென்ன?

அடுத்தக் கதையான 'காக்கா கடி' எதையும் எதிர்ப்பார்க்காமல் நேசிக்கும் ஒரு இளம் பெண்ணைப் பற்றியது. ஆடை வடிவமைப்பாளரான மது சொந்தமாக ஒரு கடையை நடத்தி வருபவள். எதிர்பாராமல் கார் பயணத்தில் சந்திக்கும் நபரான மணிகண்டனைப் பற்றி மெள்ள தெரிந்து கொள்கிறாள். ஏதேச்சையாக கால் டாக்ஸியில் நிகழும் அவர்கள் சந்திப்பு ஒருகட்டத்தில் சொந்த விஷயங்களை பேசும் அளவுக்கு சகஜமாகிவிடுகிறது. அவனுக்கு வந்திருக்கும் வியாதியைக் கேட்டு அதிர்ச்சி அடையாமல் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு அவனுடன் துணை நிற்கிறாள். அன்பு என்பது ஒருவர் மற்றவருக்கு தரும் கொடை இல்லை. அது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஊறிக் கிடப்பது. இந்த காலகட்டத்தில் அன்பு ஒன்றுதான் அனாதையாகிவிட்டது என்று கூறும் நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கிறது என்றால் அது அத்தகைய மனிதர்களை சார்ந்தது. அன்பை வைத்து பேரம் பேசுவதும், அன்புக்காக ஏங்குவதும், அன்பைப் புறக்கணிப்பதும் என இந்த உணர்வைச் சுற்றித்தான் மனித மனங்கள் பலவிதமான பிரச்னையில் சிக்கிக் கிடக்கிறது. இந்நிலையில் அன்பு ஒரு பண்டமாற்றல்ல, அன்பைக் கொடுத்து அன்பைப் பெற இது சுகம்தான் என்றாலும், அதில் ஒரு நிபந்தனை உள்ளது. நிபந்தனையே இல்லாத அன்பு எத்தனை அழகானது என்பதை காக்கா கடி கவிதையாகப் பேசுகிறது.

இதே போன்று மற்ற இரண்டு கதைகளும் வெவ்வேறு களன்களைக் கொண்டிருந்தாலும் அவை பேசும் விஷயம் மனங்கள் நேராக இருந்தால் வாழ்க்கை ஒருபோதும் கோணலாகிவிடாது என்பதைதான். டர்ட்டில் வாக்கில் வரும் நவநீதனும் யசோதாவும் அன்றாடம் நாம் கண்டும் காணாமல் கடந்து போகும் முதிய தம்பதியர்தான். முதியவர்கள் தங்களுடைய வியாதிகளுடன் மட்டும் போராடுவதில்லை, உணர்வுகளுடனும்தான் என்பதை உறுத்தாமல் கூறுகிறது இக்கதை. அடுத்த கதையில் ஒரு குடும்பத் தலைவியில் கேள்விகளையும் ஏக்கங்களையும் பெண்ணியம் சாயம் பூசாமல் போகிற போக்கில் பொட்டில் அடித்தாற் போல் பெரும்பாலான இந்தியக் கணவர்களிடம் கேட்கிறது. இன்றளவும் பலர் மனைவியை உடமைப் பொருளாகவும், தன் குழந்தைகளின் தாயாகவும்,  சமுதாய மதிப்புக்காகவும், தனக்குத் தேவைப்படும் போது பயன்படுத்தக் கூடிய ஒரு உடலாகவும்தான் பார்க்கிறார்கள். அலுத்துப் போன உறவில் விரிசல்களை இட்டு நிரப்பும் அன்றாடங்களில் ஏற்படும் சலிப்பை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் அமுதா. அவள் பேசும் எந்த விஷயத்தையும் நேரடியாகக் கேட்காமல் வேலையில் அல்லது வேறு ஏதாவது சிந்தனையில் மூழ்கிக் கிடக்கும் கணவன் தனபால். மூன்று குழந்தைகள் இருந்தாலும் மன நெருக்கம் இல்லாமல் இயந்திரத்தனமாக வாழும் இவர்களுக்கு இடையில் ஏற்படும் மன விலகலும், அதன் பின்னான புரிதலையும் மென்னுணர்வுடன் கூறிச் சொல்கிறது ‘ஹே அம்மு’ என்ற குறுங்கதை.

வணிகப் படங்களைப் பார்த்துப் பழகிய திரை ரசிகனுக்கு முழுவதும் வித்தியாசமான ஒரு அனுபவத்தை இத்திரைப்படம் தரும். ஆனால் சில இடங்களில் தேய்வழக்கான வசனங்களும், நீளமான சில காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். ஆனால் கதையின் நீரோட்டத்தில் சின்ன சின்னக் குறைகள் காணாமல் போய்விட்டன என்பது நிஜம். 

சில்லுக்கருப்பட்டியைத் தயாரிக்க கொஞ்சம் பதநீர், சிறிதளவு ஏலக்காய், தேவைக்கேற்ப சுக்கு, அளவான மிளகு இவைதான். வெவ்வேறு தன்மைகளைக் ருசிகளைக் கொண்டிருந்தாலும் இந்தக் கூட்டணியில் உருவாகும் சில்லுக்கருப்பட்டி இனிப்பாகத் தானே இருக்க முடியும்? நான்கு விதமான கதைகளுக்குள் உறவுநிலைகளைப் பற்றியும் காதலைப் பற்றியும் அழகான கதையாடலைத் தொடங்கியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com