இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று...
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு, செலவு கணக்குகளைக் கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 2, 3-ஆம் தேதிகளில்  நடைபெறவுள்ள "இளையராஜா 75' பாராட்டு விழாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக, நிகழ்ச்சி நடத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா தயாரிப்பாளரான ஜே.எஸ். சதீஸ்குமார் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் வரும் பிப்ரவரி 2, 3-ஆம் தேதிகளில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற முடிவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக பெரும் தொகை செலவு செய்துள்ளனர். தற்போது பதவியில் உள்ள சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே, அவர்கள் கையாடல் செய்த சங்கத்தின் வைப்புத் தொகை  ரூ.7 கோடியை செலுத்த உத்தரவிட வேண்டும். இந்தத் தொகையை செலுத்தாத பட்சத்தில் நிகழ்ச்சியை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு கடைசி நேரத்தில் தொடரப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, "இளையராஜா 75'  நிகழ்ச்சிக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் சதீஷ்குமார் மேல் முறையீடு செய்தார். வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். இந்த மனு இரு நீதிபதிகள் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இசையமைப்பாளர் இளையராஜா தமிழகத்தின் பெருமை. ஹிந்தி பாடல் கேட்டுக் கொண்டிருந்தவர்களை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் இளையராஜா என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை 2 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com