துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை: 'வர்மா' விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாலா 

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை என்று 'வர்மா' பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை: 'வர்மா' விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாலா 

சென்னை: நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை என்று 'வர்மா' பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.

இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. E4என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்திற்காக, தனது B ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலமாக 'முதல் காப்பி' அடிப்படையில் பிரபல இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தில் அறிமுகமாகிறார்.  வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார்.  ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியானநிலையில் துருவ் நடித்துள்ள 'வர்மா' படம் வெளியாகாது என்று E4 என்டர்டெய்ன்மெண்ட்  நிறுவனம் வெள்ளியன்று அறிவித்தது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தாவது:

தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தை 'வர்மா' என்ற பெயரில் தமிழில் எடுப்பதற்காக, B ஸ்டூடியோஸ் நிறுவனத்தை அவர்களது வேண்டுகோளின் படி E4 என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால் படைப்புத்திறன் மற்றும் பல்வேறு ரீதியான வேறுபாடுகளின் காரணமாக எங்களுக்கு அளிக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவத்தில் எங்களுக்கு துளியும் திருப்தி இல்லை.

எனவே துருவ்-வை கதாநாயகனாக வைத்து மூலப் படத்தின் ஆன்மா சிதையாமல் அதே படத்தை மீண்டும் தயாரிப்பது என்று முடிவு செய்துள்ளளோம். படத்தின் இயக்குநர் உட்பட பிற விபரங்கள் அனைத்தையும் விரைவில் அறிவிப்போம்,

கடுமையான பொருளாதார ரீதியிலான நஷ்டங்கள் இருந்தபோதிலும், சிறப்பானதொரு படத்தை தமிழில் உருவாக்கும் எங்களது ஆர்வம் குறையவில்லை. எனவே தளராமல் உழைத்து அப்படத்தை ஜூன் - 2019 இல் வெளியிடுவதற்காக உழைக்கிறோம்.

இந்த பயணத்திற்கு உங்களனைவரின் ஆசிகளையும் கோருகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை என்று 'வர்மா' பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் பாலா சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'வர்மா' படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

படைப்பு சுதந்திரம் கருதி, 'வர்மா' படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.  கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதியே தயாரிப்பாளருடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டேன்.

துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com