Enable Javscript for better performance
Senior Journalist Tipparaju Ramesh Babu Sensational Comments On NTR Family- Dinamani

சுடச்சுட

  

  என் டி ஆருக்கு ஒருவேளை உணவு தராமல் புறக்கணித்தவர்கள் தான் அவரது மகன்கள்: பத்திரிகையாளர் பரபரப்பு புகார்!

  By சரோஜினி  |   Published on : 23rd February 2019 12:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ntr_mahanayakkudu

   

   

  ஜனவரியில் வெளிவந்த ‘என் டி ஆர் கதாநாயகுடு’ சினிமாவின் அடுத்த பாகமான  ‘என் டி ஆர் மகாநாயகுடு’ ஃபிப்ரவரி 14 அன்று ரிலீஸ் ஆனது. இந்தத் திரைப்படத்தில் என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரம் என்று சொல்லொ விளம்பரப்படுத்தினார்களே தவிர படம் என் டி ஆரைச் சித்தரிக்கவே இல்லை. அவருடன் அருகில் இருந்து அவரது செயல்பாடுகளை கவனித்தவன், அவருடனே இயங்கியவன் என்ற உரிமையில் சொல்கிறேன். நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்து வெளியிட்டிருப்பது மேம்போக்கான என் டி ஆரின் வாழ்க்கை. அதில் என் டி ஆரின் ஒரிஜினாலிட்டி கொஞ்சமும் இல்லை. அவர் பட்ட கஷ்டங்கள் எதுவும் அதில் காட்டப்படவில்லை. நந்தமூரி மற்றும் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரை நல்லவர்களாக்கிக் காட்டும் முயற்சி தான் தெரிகிறது. ஒருவேளை அடுத்ததாக இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிடவிருக்கும் லக்‌ஷ்மியின் என் டி ஆர் திரைப்படத்தில் வேண்டுமானால் நாம் நிஜமான என் டி ஆரை தரிசிக்க முடியுமோ என்னவோ? 

  என் டி ஆர் அவரது பிள்ளைகளின் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். எப்போதும் தனது மகன்களை, மகள்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். அவர் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நீங்கள் அவரைப் பார்க்க நேர்ந்து 1 கிலோ இனிப்பு வாங்கித் தந்திருந்தீர்கள் என்றால் அதை தனது குழந்தைகள் அத்தனை பேருக்கும் சரிசமமாகப் பங்கிட்டு அப்படியே தனித்தனிக் காரில் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கெல்லாம் அனுப்பி தந்து அழகு பார்க்கும் அளவுக்கு பிள்ளைகளின் மேல் பைத்தியக்காரத்தனமான பாசம் அவருக்கு இருந்தது. ஆனால், அந்தப் பிள்ளைகள் என் டி ஆரின் மனைவி பசவதாரகம் அவர்களின் மறைவுக்குப் பின் அவரைக் கவனித்துக் கொள்ள விரும்பாமல் புறக்கணித்து விட்டார்கள்.

  என் டி ஆர் தீவிரமான உணவு ப்ரியர். இட்லி என்றால் ரொம்ப ஆசையாக உண்பார். பசவதாரகம் இறந்த பின் ஒருவேளை உணவு தர பிள்ளைகளால் முடியவில்லை. அப்பா சம்பாதித்து வைத்த சொத்துக்களைப் பங்கிட்டுக் கொண்ட அவர்கள் தந்தையின் தேவை என்ன என்று யோசிக்க விரும்பாத சுயநலமிகளாகவே இருந்தனர். இதைப்பற்றியெல்லாம் திரைப்படத்தில் காட்சிகள் இருந்திருக்க வேண்டுமில்லையா?

  தெலுங்கு திரையுலகில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் சம்பாதித்த சொத்துக்களோடு அவர் மகன்களும் பின்னர் நிறைய சொத்துக்களைச் சேர்த்தனர். நடிகர் கிருஷ்ணாவை அடுத்து அவரது மகன் நடிகர் மகேஷ் பாபுவும் அவரது அண்ணனும் சேர்ந்து அவர்களது அப்பா சம்பாதித்ததையும் பத்திரப்படுத்தி தாங்களும் அதைக் காட்டிலும் மேலாக சம்பாதித்து வருகின்றனர். ஆனால் என் டி ஆர் குடும்பத்தை எடுத்துக் கொண்டால்... எந்த மகன் அப்பா சம்பாதித்த சொத்துக்களை மேலும் பெருக்கி இருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஏதோ... பாலகிருஷ்ணா நடிகரானதால், அவரது திரைப்படங்களில் பல தோல்வி கண்டாலும் சில நன்றாக ஓடியதில் அவரொரு பிரபல நடிகராக இன்றும் டோலிவுட்டில் காணாமல் போகாமல் என் டி ஆர் வாரிசாக மிஞ்சியிருக்கிறார். அவரது பிற மகன்கள் எல்லோரும் என்ன ஆனார்கள்? எப்படி வாழ்ந்தார்கள் என்று விசாரித்துப் பாருங்கள். ஒருவருக்கும் தனது தந்தையின் புகழை நிலைநாட்டவோ அல்லது அவரைக் காட்டிலும் அதிகமாக சம்பாதித்துக் காட்டவோ விருப்பமிருந்ததில்லை. அவர்கள் தங்களது தந்தை சம்பாதித்ததை பங்கிட்டுக் கொண்டு அவற்றையும் கட்டிக் காக்க இயலாமல் விற்று விட்டார்கள். எங்கே பாலகிருஷ்ணாவை இல்லையென்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். அதையெல்லாம் விட கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?

  என் டி ஆர் மகா நடிகர். அவரது நடிப்புத் திறமையை அங்கீகரித்து அவரது மருமகனான சந்திரபாபு நாயுடு ஏன் பாரதரத்னா விருது பெற்றுத்தர முயற்சிக்கவேயில்லை. இதைப் பற்றி பாலகிருஷ்ணா தனது படத்தில் ஏன் ஒரு வார்த்தை கூட கேள்வி எழுப்பவில்லையே அது ஏன்?

  ஒன்று மட்டும் நிஜம். பாலகிருஷ்ணா இந்த திரைப்படத்தை எடுத்து என் டி ஆருக்கு அவப்பெயரைத் தேடித் தந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai