யதார்த்தம்... யதார்த்தம்... யதார்த்தம்...:  டுலெட்

100 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று 32 விருதுகள், விருதுக்காக 84 பரிந்துரைகளை (நாமிநேஷன்ஸ்)  பெற்று சர்வதேச அளவில் பரவலான பாராட்டுகளைப் பெற்ற தமிழ் திரைப்படம் "டு லெட்'.
யதார்த்தம்... யதார்த்தம்... யதார்த்தம்...:  டுலெட்

100 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று 32 விருதுகள், விருதுக்காக 84 பரிந்துரைகளை (நாமிநேஷன்ஸ்)  பெற்று சர்வதேச அளவில் பரவலான பாராட்டுகளைப் பெற்ற தமிழ் திரைப்படம் "டு லெட்'. இதற்கு முன் இத்தனை திரைப்பட விழாக்களில் ஒரு தமிழ் திரைப்படம் பங்கேற்றிருக்குமா? என்பது சந்தேகமே.
சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதையும் கடந்த ஆண்டு பெற்ற இந்தத் திரைப்படம், கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படத்துக்கான விருதையும், சர்வதேச மனித உரிமைகள் விருது உள்பட பல விருதுகளையும் அள்ளி தமிழ் திரையுலகை சர்வதேச அளவில் பெருமைப்படுத்தியது.
திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்ற ஆவலை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த இந்தப் படம், கடந்த வியாழக்கிழமை (பிப்.21) வெளியானது.
உலகமயமாக்கலுக்குப் பிறகு அதாவது 2007ஆம் ஆண்டிலிருந்து சென்னை நகரில் தகவல்தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள் அதிகரித்தன. பொறியியல் பட்டதாரிகள் தாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அதிக ஊதியம் பெற்றனர். இதனால், நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளின் வாடகை வீட்டு உரிமையாளர்களால் கணிசமாக உயர்த்தப்பட்டது.
ஏற்கெனவே, வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக இருந்தவர்கள் காலி செய்ய வைக்கப்பட்டனர். பணம் இருந்தவர்கள் வேறு வீடு மாறிச் செல்ல, அன்றாட வாழ்க்கைக்கே போராடியவர்களின் நிலையோ நகரத்தைவிட்டு புறநகரை நோக்கி இடம்பெயர வைத்தது.
அந்தக் காலகட்டத்தில் 5 வயது மகனை வைத்துக் கொண்டு போதிய வருமானம் இல்லாமல் ஒரு குடும்பம் கஷ்டப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்பதன் பதிவு தான் "டு லெட்' திரைப்படம்.
கல்லூரி, ஜோக்கர், பரதேசி என கவனம் ஈர்த்த படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த செழியன், இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் படம் இது.
முதல் படத்திலேயே வணிக ரீதியாக சமரசம் செய்துகொள்ளாமல் சிறந்த படைப்பை கொடுத்துள்ளார் செழியன்!
இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரங்கள் வீடு தேடி அலையும் காட்சிகள் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கடந்த 1988ஆம் ஆண்டில் வெளிவந்த "வீடு' திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது.
செழியனிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த சந்தோஷ்  ஸ்ரீராம் இந்தப் படத்தில் இளங்கோ கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
ஷீலா ராஜ்குமார் (அமுதா), தருண் (சித்தார்த்), ஆதிரா பாண்டிலஷ்மி (வீட்டு உரிமையாளர்) ஆகியோரைச் சுற்றி நகரும் கதைதான் மொத்த படமும்.
ஐடி நிறுவனத்தின் வருகையால் அதிக வாடகையை ஈட்டலாம் என்ற பேராசையுடன் சில ஆண்டுகளாக வாடகைக்கு இருந்துவரும் இளங்கோ குடும்பத்தினரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காலி செய்ய உத்தரவிடுகிறார் வீட்டு உரிமையாளர் ஆதிரா. டு லெட் (வாடகைக்கு) போர்டு இருக்கும் வீடுகளில் எல்லாம் ஏறி இறங்குகிறார் இளங்கோ. அவருக்கு வேறு வீடு கிடைத்ததா? குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேறு வீடு மாறினார்களா? என்பதே மொத்த படமும்.
வீடு இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும். அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பது அச்சு அசலாக இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 வீட்டைத் திறந்து உள்ளே நுழைவது போல் தொடங்கும் திரைப்படம், அதே வீட்டை மூடுவதுடன் முடிவடைவது புத்தகத்தை திறந்து படித்த பின்னர் மூடி வைப்பது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது.
சிறுவன் தருண், அவரது தாயாக வரும் ஷீலா, சந்தோஷ் ஸ்ரீராம் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
"அப்பா இந்த டிவி நமக்கு சொந்தம், இந்த வண்டி நமக்கு சொந்தம். ஆனா ஏன் இந்த வீடு மட்டும் நமக்கு சொந்தம் இல்லை' என்று இளங்கோவிடம் மகன் சித்தார்த் கேட்கும் காட்சி பலரின் சிந்தனைகளை தூண்டி விடும்.
கழிப்பறையில் தண்ணீர் அடைத்துக் கொண்டு செல்லாமல் இருப்பது, தண்ணீர் வராமல் இருப்பது என வாடகை வீட்டில் பலர் படும் சிரமங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார் செழியன்.
திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பதற்காக இளங்கோ வசனம் எழுதி, அதை நடித்துப் பார்ப்பதும், பணத்துக்காக கதையை விற்க முடிவு செய்யும்போது மனைவி நகையை அளித்து அதை விற்க சொல்வதும் ரசனைக்குரிய காட்சிகள்.
ஜாதி, மதம், உணவுப் பழக்கவழக்கம் இதுபோன்ற காரணங்களால் வீடு தராமல் வீட்டு உரிமையாளர்களால் இளங்கோவும், அமுதாவும் திருப்பி அனுப்பப்படும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற எளியவர்களின் வாழ்க்கையில் கொண்டாட்டமான இசை இருக்காது என்பதால், இந்தப் படத்துக்கும் பின்னணி இசையும், பாடல்களும் இல்லை.
ஒரு காட்சியின் உணர்வை ரசிகர்களுக்கு உணர்த்த பிரதானமாக உதவி புரிவது பின்னணி இசைதான். ஆனால், இசையே இல்லாமல் அதுபோன்ற உணர்வுகளை தனது ஒளிப்பதிவு, வசனங்கள் வழியாக ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறார் செழியன்.
இளங்கோ வசிக்கும் வீட்டில் பறவை பறப்பது, கதவு திறக்கும் சப்தம், சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம் என தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவு படத்தை மிகவும் யதார்த்தமாக்கி விடுகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கச்சிதம்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருக்க முடியாத ஏக்கத்தை தருண் பலூன் பறக்கவிடும் காட்சியிலும், ஒரு வீடு இடிக்கப்படும்போது தனது கனவு இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுபோல் இளங்கோ பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியும் சிறப்பு.
இந்தப் படத்தை "ழ' சினிமா என்ற பெயரில் செழியன் மனைவி பிரேமா தயாரித்துள்ளார். குறைந்த செலவில் இப்படி ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்து ஜெயித்துக் காட்ட முடியும் என்பதை நிரூபித்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இயக்குநர் செழியனை தமிழ் திரையுலகம் இருகரம் கூப்பி வரவேற்கிறது.
தமிழ்ப் பெயரை வைத்திருக்கும் இயக்குநர் செழியன், தான் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டியிருப்பதுதான் வியப்பளிக்கிறது. "வாடகைக்கு வீடு', "வீடு வாடகைக்கு' என்று தமிழ்ப் பெயர் வைத்திருந்தால் குறைந்தா போய்விடும்.  ஏன் இந்த ஆங்கில மோகம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com