இந்தியாவின் முதல்  திரைப்பட  அருங்காட்சியகம் இதுதான்!

இந்திய திரைப்படத்தின் வரலாறு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் திரைப்படத்துறையில்  அறிமுகம் செய்யப்பட்ட நவீன விஞ்ஞான யுக்திகளுடன் தயாரிக்கப்பட்ட
இந்தியாவின் முதல்  திரைப்பட  அருங்காட்சியகம் இதுதான்!

இந்திய திரைப்படத்தின் வரலாறு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் திரைப்படத்துறையில்  அறிமுகம் செய்யப்பட்ட நவீன விஞ்ஞான யுக்திகளுடன் தயாரிக்கப்பட்ட படங்களின் வரலாற்றுடன் இணைந்தது. அதனால்தான் இந்தியப் படங்கள்  குறிப்பாக இந்தி, வங்காள, தமிழ்ப் படங்கள் கதைக்காகவும், நடிப்பிற்காகவும், இசைக்காகவும், பாடல்களுக்காகவும் உலகின்  பல நாடுகளில் கொண்டாடப்பட்டன. 

ஊமைப் படத்தில் தொடங்கி, பேசும் படமாக மாறி.. இன்று தொழில் நுட்பத்தில் ஹாலிவுட் படங்களுக்குச் சவால்விடுகிற  அளவுக்கு  இந்தியத்  திரைப்படம் உயர்ந்துள்ளது.  இந்த  வெள்ளித் திரையின்  வெளிச்ச  யாத்திரை குறித்து அநேக  நூல்கள்  ஆவணப்படுத்தியிருந்தாலும்,  வாழும்  ஆவணமாக இந்திய திரைப்பட உலகம் குறித்த ஒர் அருங்காட்சியகம் உருவாகவில்லை என்பது பெருங்குறையாக  இருந்து வந்தது.  

அந்தக் குறையைப் போக்க  இந்திய சினிமாவின் தலைநகரான  மும்பையில் "இந்தியாவின் முதல்  திரைப்பட  அருங்காட்சியகம்' உருவாகி இருக்கிறது. அண்மையில் இதனைத் திறந்து வைத்தவர் பிரதமர் மோடி. 

இந்தக்  கனவு  நனவாவதற்கு  முக்கியக் காரணமாக  அமைந்திருப்பது  மத்திய அரசின்  தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ்  இயங்கும்  திரைப்படப் பிரிவுதான். .  "குல்ஷன் மஹால்', என்னும் புராதன கட்டத்தைப் புதுப்பித்து இந்த அருங்காட்சியகம் சுமார் நூற்றி நாற்பது கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 

முகேஷ் அம்பானி வசிக்கும்  வீட்டிற்கு அருகில் பெட்டர் சாலையில் அமைந்திருந்தாலும், "குல்ஷன் மஹால்', "சினிமா மியூசியம்' என்று விசாரித்தால் யாருக்கும் தெரியவில்லை.  பலமுறை அலைந்து  திரிந்து கடைசியில்  இந்திய அரசின்  திரைப்படப் பிரிவின்  பெயர் பலகையைப் பார்த்து அங்கே விசாரித்த போதுதான்,    "குல்ஷன் மஹால்'  அந்த வளாகத்தின்  உள்ளே அமைந்திருப்பது  தெரிய வந்தது.  இன்னமும்  அருங்காட்சியகம் அந்தப் பகுதியில் பிரபலமாகவில்லை.   

அன்றைய காமிராக்கள் பிரமாண்ட விளக்குகள்.. என்று காட்சிபடுத்தப்பட்டுள்ளதில்  நேர்த்தி தெரிகிறது.  இந்தியாவின் முதல் பேசும் படமான "ராஜா ஹரிச்சந்திரா'வை நினைவு கூறும்  விதமாக  ஒரு "செட்டைப் போட்டு பின்னணியில்  படமும் ஓடுகிறது.  "பராசக்தி'  படமும்  இடைவேளை இல்லாமல்  தமிழ் பகுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது.  

எஸ். எஸ். வாசனின்  "சந்திரலேகா'  படம்  ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க... ஹிந்தி சந்திரலேகாவின் படத்தின் போஸ்டர்  சுவரை அலங்கரிக்கிறது.  தமிழ் படத்தின் முன்னணி நாயகர்களான எம்ஜிஆர், சிவாஜிக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். கமல், ரஜினி நடித்த  படங்களின் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. 

பின்னணிப் பாடகர்கள் வரிசையில் டி.எம் செளந்தராஜன்  இல்லையென்றாலும், யேசுதாஸ்,  ஜானகி பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.  "குல்ஷன் மஹால்'  பல அடுக்கு மாளிகை என்றாலும்,  இந்திய  திரைப்படத்தின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கு   அந்த  இடம் போதவில்லை என்பது நிதர்சனம்.  

காந்திஜிக்கு என  ஒரு பெரிய அறையை ஒதுக்கியுள்ளார்கள். காந்திஜிக்குத் திரைப்படம்  குறித்த  புரிதல், ஆர்வம் இருந்தாலும்,  அவர் பார்த்த ஒரே படம் "ராம ராஜ்ஜியம்'.  அந்தப் படம்   சின்னத்திரையில்  ஓட, நாற்காலியில் அமர்ந்து காந்திஜி  படத்தைப் பார்ப்பது போன்று காந்தி  சிலையை அமைத்திருக்கிறார்கள். பக்கத்தில் உள்ள நாற்காலி காலியாக இருப்பதால், பார்வையாளர்கள்  அதில் அமர்ந்து  படம் பிடித்துக் கொள்கிறார்கள். பிரதமர் மோடியும்  அப்படி  அமர்ந்து படம் எடுத்துக் கொண்டார். தாதா சாஹேப் பால்கே   சிலை  நுழைவாயிலை அலங்கரிக்க,  உள்ளே ராஜ்கபூர் அட்டகாசமாக  நிற்கிறார். 

குழந்தைகள்  படங்களுக்கான   பிரிவும் ஒதுக்கியுள்ளார்கள். 

"குல்ஷன் மஹால்'  கி. பி. 1800-இல், குஜராத்தைச் சேர்ந்த  இஸ்லாமிய வர்த்தகர் பீர்பாயினால் கட்டப்பட்டதாம்.  நாட்டு பிரிவினையைத்   தொடர்ந்து  பீர்பாய் பாகிஸ்தான் செல்ல.. மாளிகை இந்திய அரசுக்கு சொந்தமானது. இந்த மாளிகையில் சஞ்சய் தத்  நடித்த "முன்னாபாய் எம்பிபிஎஸ்' படத்தின் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. 

இந்திய திரைப்படம்  குறித்த  எல்லாத் தகவல்களையும்  தொகுத்து, வழங்கியிருக்கும் இந்த  அருங்காட்சியகத்தில்,  இடம் பெறாமல் விட்டுப் போன தகவல்கள் மற்றும் நிறுவனங்கள், பிரமுகர்கள் இனி இடம் பெறலாம். திரைப்படம் குறித்து  ஆய்வு  செய்பவர்களுக்குப்  பல புதிய செய்திகளின் தேன்கூடாக  இந்த  அருங்காட்சியகம் அமைந்துள்ளது. நுழைவுக் கட்டணம் இருபது ரூபாய் மட்டுமே. தமிழகத்திலும், இது போன்ற  திரைப்பட அருங்காட்சியகம்  உருவாக்க  வேண்டும். தமிழக அரசும், நடிகர் சங்கம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும்   இணைந்தால்  நிச்சயம்  தமிழ் திரைப்பட அருங்காட்சியகம் அமையலாம்..!


"80' ஆண்டுகளுக்குப்பிறகு... "கான் வித் த விண்ட்'

1939-ஆம் ஆண்டுத் திரையிடப்பட்டு உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்ற ஹாலிவுட் படமான "கான் வித் தவிண்ட்" வெளியாகி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி மற்றும் மார்ச் 3-ஆம் தேதிகளில் அமெரிக்கா முழுவதும் உள்ள தியேட்டர்களில் பகல் 1 மணி மற்றும் 6 மணி காட்சிகளாக இப்படத்தைத் திரையிட ஏற்பாடுகள் செய்துள்ளனர். விக்டர் பிளெமிங் இயக்கிய இத்திரைப்படம் இரண்டு சிறப்பு அகாதெமி விருதுகள் உள்பட 8 ஆஸ்கர் விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

-அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com