சின்ன சின்ன தவறுகளிலிருந்து கூட அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்! நடிகர் ஜெய் பேட்டி!

சின்ன சின்ன தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும்.
சின்ன சின்ன தவறுகளிலிருந்து கூட அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்! நடிகர் ஜெய் பேட்டி!

சின்ன சின்ன தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும். அப்படி ஒட்டு மொத்த அனுபவங்களையும் பெற்று விட, இந்த ஒரு வாழ்க்கை போதாது. என் வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன தவறுகளிலிருந்து கூட, அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  ஏதோ உபதேசம் போல் இருக்கலாம். ஆனால் உண்மை. இதைச் சொல்லி முடிக்கும் போது, ஜெய் முகத்தில் அவ்வளவு பிரகாசம். பல ஆண்டுகளாக மீடியாவிடம் பேசாதவர், இப்போது பேசுகிறார்:

'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்',  'ராஜா ராணி' என அழகான கேரியர்... இருந்தும், சில தடுமாற்றங்கள் ஏன்...?

ஒரே மாதிரி திரும்பத் திரும்ப நடித்துக் கொண்டு இருக்க முடியாதே... நீங்கள் சொன்ன மூன்று படங்களிலுமே என் கதாபாத்திரத்தில்  அப்பாவித்தனம் இருக்கும். அதே மாதிரி எப்போதுமே இருக்க முடியுமா என்ன.... எனக்கும் ஆக்ஷன், கமர்ஷியல் என விதவிதமாக நடிக்க ஆசை இருக்கத்தானே செய்யும். அப்படி வந்த சில படங்களில் தவறுகள் நடந்திருக்கலாம். எல்லா ஹீரோக்களுமே தொடர்ந்து ஹிட் கொடுத்தவர்களா என்ன... சறுக்கல் என்பது எல்லோருக்கும்தான் இருக்கும். "எங்கேயும் எப்போதும்', "ராஜா ராணி' படங்கள் மாதிரி நிறைய வந்தன. விட்டால், அதே முத்திரையைக் குத்தி விடுவார்கள் என அதையெல்லாம் தவிர்த்தேன். 

'பகவதி' படத்துக்குப் பிறகு விஜய் சாரிடம் அடிக்கடி வாய்ப்பு கேட்டு போவேன். 'இப்படி சப்போர்ட்டிங் ரோல் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா உன்னைக் கடைசி வரை அந்த மாதிரிதான் வெச்சிருப்பாங்க...' என்று சொன்னார். அது அவ்வப்போது நினைவுக்கு வரும். நான் எல்லாமுமாக இருக்க விரும்புகிறேன். என்னை இதற்குள்ளும் அடைத்துப் பார்க்க வேண்டாம். 

அதுவுமில்லாமல், எப்போதுமே டபுள் ஹீரோ கதைகளில் அதிகமாக வர்றீங்க...?
'சுப்பிரமணியபுரம்' ஹிட் ஆகும் என்று நினைத்தேன். ஆனால், இந்தளவுக்கு மறக்க முடியாத சினிமாவாக இருக்கும் என்று தெரியாது. என்றைக்குமே அது முக்கிய சினிமா. 'சுப்பிரமணியபுரம் 2' பற்றியும் சசிகுமார் சாரிடம் பேசியிருக்கிறேன். அது தொடங்கி 'ராஜா ராணி', 'எங்கேயும் எப்போதும்', 'சென்னை 28'  எனக் கேரியர் முழுவதுமே டபுள் ஹீரோ கதைதான். அதுவாக அமைந்து வந்ததா... நானாகவே தேடி போனேனோ என்றெல்லாம் தெரியாது. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பாலிவுட் சினிமாக்களில் எல்லாம் இது சர்வ சாதாரணம். இங்கே ஏன் இதைப் பெரிதுப்படுத்துகிறார்கள்.

'நீயா 2', 'கறுப்பர் நகரம்', 'பார்ட்டி', 'மதுர ராஜா'  என அடுத்தடுத்து வரிசையாக படங்கள்... எப்படி இருக்கும்...?

எல்லாமே அழகு.  அழகான ஒரு லைஃப் சைஸ் படம் நடிக்க வேண்டும் என்பது என் எண்ணமாக இருக்கும். அதன் பக்கத்தில் இப்போதுதான் வந்திருக்கிறேன்." சுப்பிரமணியபுரம்', "எங்கேயும் எப்போதும்', "ராஜா ராணி' மாதிரி இதுவும் அடையாளங்களாக இருக்கும். எப்போதுமே மனதில்  தோன்றிய ஸ்க்ரிப்ட்டுக்கு நான் என்னைக் கச்சிதமாகப் பொருத்திப் பார்ப்பேன்.  அப்படித்தான் இந்தப் படங்கள் நிறைவாக வந்திருக்கிறது. 

அன்புப் பரிமாற்றம், சின்னச் சின்னச் சண்டைகள், சமாதானம், செல்லக் கொஞ்சல்கள் எல்லாமும் எல்லோரின் வாழ்க்கையிலும் இருக்கும். அப்படி ஒரு ரீவைண்ட் சினிமாக்களாக இது இருக்கும். . "நீயா', "பார்ட்டி' இரண்டுமே ஜாலி, எமோஷன்ஸ் இன்னும் அழகா இருக்கும். ஆக்ஷன் கலெக்ஷன்களில் "கறுப்பர் நகரம்', 'மதுர ராஜா' இரண்டும் கண்டிப்பாக இடம் பிடிக்கும். "மதுர ராஜா' படத்தில் மம்முட்டி சாரின் தம்பியாக நடிக்கிறேன். மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இது.  

'அறம்' கோபி நயினார் கூட ஒரு படம்... எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கும்...?

ஆமாம். கோபி சார் எந்தளவுக்கு ஒரு கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பதற்கு "அறம்' படமே சாட்சி. அப்படி ஒரு திரைக்கதை இந்தப் படத்திலும் இருக்கிறது. 

அதில் ஒரு பகுதிதான், ஃபுட்பால் கோச்சிங். இந்தக் கதாபாத்திரத்துக்காக மூன்று சிறந்த பயிற்சியாளர்கள் தினமும் பயிற்சி அளிக்கிறார்கள். . உலகத்தின் மற்ற பகுதிகளில் விளையாடும் முறைக்கும் நம் வட சென்னை பகுதியில் விளையாடும் முறைக்கும் நிறைய வித்தியாசம்.  அதை உன்னிப்பாகக் கவனித்து கொண்டு வர இருக்கிறோம். அது பெரிய சவால். தவிர, சிறைக்குள்ளேயே  நடக்கும் ஒரு பகுதியும் இதில் இருக்கிறது.  இதுவரை நீங்கள் தமிழ் சினிமாக்களில் பார்க்காத காட்சிகளாக இருக்கும். 

 உங்களுக்கென ஒரு நட்பு வட்டம்... அடிக்கடி சந்திப்பீர்களா...?

சினிமாவில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ், பஞ்சு சுப்பு தவிர வேறு எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. வெளிப்படையாகப் பழகும் நண்பர்கள் இவர்கள்தான். எல்லோருமே பல வருட நண்பர்கள். 

என் வெற்றியில் சந்தோஷப்படும் தோழமைகள்.  யாருக்கும் கள்ளங்கபடமே கிடையாது. எல்லாமே பாசிட்டிவ்வா நடக்கக் காரணம், எங்களுக்குள் எந்தப் போட்டி, பொறாமையும் இல்லை.

மீடியாக்களிடம் பேசுவது இல்லை... இருந்தாலும் சர்ச்சை, கிசுகிசுக்களுக்குப் பஞ்சம் இல்லை ஏன்...

பக்குவம் இல்லாததுதான் காரணம். நான் யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பேசி விட மாட்டேன். பிடித்திருக்க வேண்டும். அதை விட அவரை அடிக்கடி பார்த்து பேசியிருக்க வேண்டும். அப்போதுதான் போய் பேசுவேன். மீடியாக்களிடம் தள்ளி போய் இருந்ததற்கு எதையும் தேவையில்லாமல் பேசி விடுவமோ, என்ற நடுக்கம்தான். வேறு ஒன்றும் இல்லை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்திருக்கிறேன். இனி எல்லாவற்றையும் பேசுவேன். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி உண்மையாக இருக்க வேண்டும்.

-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com