இது முற்றிலும் ஒரு ரொமான்ஸ் காமெடி! நிலா  நிலா ஓடி வா

இது முற்றிலும் ஒரு ரொமான்ஸ் காமெடி! நிலா  நிலா ஓடி வா

‘நிலா  நிலா ஓடி வா…. நில்லாமல் என்னை தேடி வா’ இந்த பாடல் இப்போது மிகவும் பிரபலம்

வேண்ஹெல்சிங், ட்வைலைட், ஹோட்டல் ட்ரான்சில்வேனியா இந்த மாதிரியான ஹாலிவுட் ரத்தக்காட்டேரி படங்களை பார்த்து பார்த்து தமிழ்ல ஒரு படம் எடுக்கமாட்டாங்களான்னு சிலர் நினைச்சிருக்கலாம். அதையெல்லாம் சரி செய்யிற மாதிரி இந்த சீரீஸை இயக்கியிருக்காங்க  டைரக்டர் ஜே.எஸ். நந்தினி. இது இவங்களோட இரண்டாவது சீரீஸ், கடந்த  2009-ஆம் ஆண்டில் வெளியான  படம்  ‘திரு திரு துரு துரு’  இதை தொடர்ந்து இப்போது இந்த அருமையான சீரீச மக்களுக்கு வியு ஆப்ல தந்திருக்காங்க. அமானுஷ்ய விரும்பிகள் எல்லாம் இதை ரசிச்சு பாத்துகிட்டு இருக்காங்க. குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் இந்த சீரீஸ் மிகவும் பிரபலமாக உள்ளது.

இது இப்படி அமோகமா ஸ்க்ரீன் ஆவதற்கான பல காரணங்களுள் ஒன்று இதோட காஸ்டிங்ன்னு சொல்லலாம். நம்ம  ஹீரோ, ஜீரோ படத்தின் கதாநாயகன் அஸ்வின், ஹீரோயின் காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமான சுனைனா. இதுல இவுங்க ரெண்டுபேருக்கும் கெமிஸ்ட்ரி பயங்கரம். கெமிஸ்ட்ரியை பற்றி பேசும்போது கதையின் முக்கிய சாராம்சத்தைப் பற்றி பார்க்க வேண்டாமா? வழக்கம் போல ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் ரத்தக்காட்டேரியாக இருப்பதும் அதை மத்தவுங்க  அக்செப்ட் பண்ணிக்கிட்டு காலப்போக்குல காதலிக்கிறதும் நாம 2008-ஆம் ஆண்டு வெளியான ஐந்து பாகங்கள் கொண்ட ட்வைலைட் என்கிற ஹாலிவுட் படத்துலயே திகட்ட திகட்ட பார்த்தாகிவிட்டது.

அதனால் இதில் புதுசாக என்ன இருக்கிறது என்று கேட்டால் நிறையவே இருக்கிறது என்று சொல்லலாம். முதலில் நம்ம ஹீரோ டாட்டூ ஆர்ட்டிஸ்ட், ஹீரோயின்தான் ரத்தக்காட்டேரி, இருவரும் ஓரே கல்லூரியில் படித்தவர்கள். சில காரணங்களுக்காக இருவராலும் அவர்களின் நட்பை தொடர முடியவில்லை (ஹீரோ, ஹீரோயினை கல்லூரியிலிருந்தே ஒன் சைட் லவ் பண்ணிருக்காரு). இருவரும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும்போது ஹீரோயின் ரத்தக்காட்டேரியாக மாறியிருக்கிறாள். இந்த சந்திப்புலதான் த்ரில்லே! எப்படி நிகழ்கிறது என்றால், அஸ்வின் புதுசாக வாங்கியிருக்கும் தனது டாட்டூ ஸ்டுடியோவை சுத்தம் செய்வதற்காக தன்னுடைய ஹெல்பர்சுடன்  வருகிறார் அங்கேதான் சுனைனா யாருக்கும் தெரியாமல் ரத்தக்காட்டேரியாக வாழ்ந்து வருகிறார். ரத்தத்தை குடிப்பதற்காக ஹீரோவின் அருகில் வரும்போது தான் ஷாக் கொடுத்துவிட்டு  "ஓம்' என்று கூறுகிறாள், (ஹீரோவும் பெயர் ஓம் பிரகாஷ்) அதைக் கண்டு ஓமும் "நிலா நீயா...?" (சுனைனாவின் பெயர் நிலா) என்று கூறுகிறார். தான் காதலித்த பெண் வேம்பயர் என்று தெரிந்தபின் ஓமிற்கு சற்று உடல் நடுங்கியினாலுமே போகப் போக  இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ஓமும் நிலாவும் மனதார ஒருவழியாக (!) டபிள் சைடாக காதலிக்க தொடங்குகிறார்கள்.

இவர்களின் காதல் கதையில் ஒரு ட்விஸ்ட் வருகிறது, என்னவென்றால் ஓமின் தந்தை இறந்த பின்னர், அவர் வாங்காத கடனிற்காக கடனை திரும்பக் கேட்டு வழக்கம் போல் கடன்காரர் (ரௌடி- வில்லன்) வந்து நிற்கிறார். ஓமும் மிரட்டி அனுப்பி விடுகிறார். ஒரு கட்டத்தில் தன் காதலுனுக்கு ரொம்பவும் தொல்லை கொடுப்பதை உணர்ந்த நிலா அந்த வில்லனை கொன்று விடுகிறாள். பின்னர் ஓம் அவளை மிருகமென்று திட்ட, சில சோக கீதங்கள் முழங்க பின்னர் இவளை நார்மலாக மாற்ற ஓம் துடிக்கிறான். அவன் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாக போவதை அறிந்த நிலாவின் தோழி மீரா (அவளும் வேம்பயர்) தேவியை பற்றி கூறுகிறாள். அதற்கு ஒரு ஹிஸ்டரியும் இருக்கிறது. பொதுவாக வேம்பயர்கள் கடித்தால் எந்த மனிதனும் வேம்பயராகவே மாறி விடுவான். ஆனால் ஒரு வேம்பயர் தேவியை கடிக்கும் போது அவர்களுக்கு அந்த விஷம் பரவாமல் அவர்கள் நலம் பெருவார்களாம்! அவளை தேடிய ஓமின் பயணம் தோல்வியில் முடிய (தேவிக்கு அந்த சக்தி போய்விடும்) அவன் சோகத்தில் ஆழ்ந்து போவான்.

இன்னொரு பக்கம், வேம்பயர் கேங்குக்கு ஒரு ஹெட் இருக்கிறான் அவன் பெயர் அலெக்ஸ். எல்லா வேம்பயர்களும் இவனுக்கு கீழ்தான் இயங்குகின்றன. அதுல நிலாவும் ஒன்னு. கெட்டவங்கன்னு இருந்தா நல்லவங்க இருக்கணுமில்ல? இந்த நல்ல கேங் நான்கு பேர் கொண்ட குழு கால்டு "ஸ்லெயர்ஸ்", இவர்களின் வேலை சாதாரண மக்களை வேம்பயர்களிடமிருந்து காப்பாற்றுவது. இதனுடைய ஹெட் ஜமால் மற்றும் இதர உறுப்பினர்கள் ஆனந்த், பேட் என்னும் பெட்ரீஷியா, விக்கி என்னும் விக்ரம். ஒரு கட்டத்தில் இவர்கள்தான் ஓமின் துணையோடு வேம்பயர்களின் தலைவனான அலெக்ஸை கொல்வார்கள். இந்த ஸ்லெயர்ஸ் ரத்தக்காட்டேரி என்று தெரிந்தாலே அவர்களை கொன்று விடுவார்கள்.

நிலாவும் ரத்தக்காட்டேரிதான் என்று இவர்களுக்கு முதல் சீசன் முடியும் போதுதான் தெரிய வரும். அவர்கள் மீராவை துரத்த, மீரா ஓமுக்கு போன் செய்து நிலாவை காப்பாற்ற சொல்ல, ஸ்லேயர்ஸ் நிலாவை கொல்லும் முன்பு ஓம் அவளை காப்பாற்றி, தேவியின் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறான். அங்கேதான் ஓமைப்பற்றிய அந்த அபூர்வத் தகவல் தேவிக்கு தெரிய வருகிறது. ஓமை எந்த ரத்தக்காட்டேறியினாலும் வசியம் செய்ய முடியாது என்று. நிலாவை தொடர்ந்து ஜமால் வரவே அவளை அம்பை எய்து கொல்ல முயற்சிக்கும் போது ஓம் குறுக்கே வந்து அதை பெற்றுக் கொள்வான். பின்பு தேவியின் ட்ரிக்கை அவனும் உபயோகப்படுத்தி நிலாவை தன்னை கடிக்க வைப்பான். கடைசியில் நிலாவை காப்பாற்றி அவனும் காட்டேரியாக மாறிவிடுவான். இத்துடன் முதல் பாகம் முடிந்தது.

இது முற்றிலும் ஒரு ரொமான்ஸ் காமெடி சீரீசாகும் அதனால் டைரக்டர் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். நிலா வெளியே செல்லும் போது தோல் கருகாமலிருக்க (ரத்தக்காட்டேரியின் உடல் வெயிலில் பட்டால் கருகிவிடும்) சன்ஸ்க்ரீன் லோஷன் அப்ளை செய்வது, குடை எடுத்துச் செல்வது, வவ்வாலாக மாறுவது, பிரிட்ஜில் ரத்தத்தை பாட்டில் பாட்டிலாக அடுக்கி வைத்து பசி தீர குடிப்பது, போட்டோவிற்கு போஸ் கொடுக்காமல் சமாளிப்பது (போட்டோவில் ரத்தக்காட்டேரியின் உடல் தெரியாது), நினைத்தால் சிங்கப்பற்கள் தோன்றுவது, வேகமாக ஓடுவது, போன்ற காட்சிகள் வியூவர்ஸை என்ஜாய் செய்ய வைக்கிறது. ஒரு சீசனில் பதிமூன்று எபிசோடுகள், இப்போது சீசன் ஒன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது கூடிய விரைவில் மற்ற சீசன்களும் வெளியாகும் என்று வேம்பயர் விசிறிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com