தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்!

கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மூடப்படும். கல்வி பயில மறுபடியும் அவர்களுக்குத் தடை ஏற்படும்...
தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்!

சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது:

அகரம் மூலமாக பல மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அரசுப் பள்ளிகளில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. அரசுப் பள்ளிகளில் சரியாகக் கட்டடம் இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல் பல தடைகளைத் தாண்டி படிக்கும் கிராமப்புற மாணவர்களின் பிரதிநிதியாக, அவர்களுடைய பெற்றோர்களின் பிரதிநிதியாகத்தான் தேசியக் கல்விக் கொள்கையை ஒரு பார்வையாகப் பார்த்துள்ளேன். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு இதுகுறித்த சரியான வெளிச்சம் போய்ச்சேரவில்லை. கல்விக் கொள்கை இந்தியா முழுக்க உள்ள 30 கோடி மாணவர்களின் கல்வியை நிர்ணயம் செய்யவுள்ளது. இதைப் பற்றி ஏன் யாருமே சரியாகப் பேசவில்லை? கோபமாக வருகிறது. 

20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன். எல்லோருடைய கோபம், அச்சம் என்னவென்றால் மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான மாணவர்களுக்காகச் செய்யப்படவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டு. சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? அப்படி என்ன நேரமில்லை, உடனடியாக ஏன் செய்தாகவேண்டும்? ஏன் இங்குள்ள அத்தனை பேரும் இதுகுறித்துப் பேசவில்லை? இதற்காகக் குரல் கொடுத்த கல்வியாளர்களுக்குப் பெரிய மரியாதை. அந்தக் குரலை எழுப்பாமல் இருந்திருந்தால் கடைசித் தேதி ஜூன் 30-லிருந்து ஜூலை 30 ஆக மாறியிருக்காது. இதில் ஏன் மாணவர்களோ, ஆசிரியர்களோ, பெற்றோர்களோ கவனம் செலுத்தவில்லை என்பது கேள்வியாக உள்ளது. இதுதான் நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வியை மாற்றப்போகிறது. 

கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரையில், ஒரு ஆசிரியர் அல்லது 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று சொல்கிறார்கள். அந்த மாணவர்கள் எங்கே போவார்கள்? எங்கே குறை உள்ளதோ அதைச் சரி செய்யாமல் ஓர் ஆசிரியர் பள்ளிகளை மூடிவிட்டு ஒருங்கிணைந்த பள்ளிகளை ஆரம்பிக்கவுள்ளார்கள். கிராமங்களில் படிப்பவர்களின் ஆரம்பப் பள்ளி வாழ்க்கை இனி என்னவாகப் போகிறது? கிட்டத்தட்ட 1800 பள்ளிகளை மூடப்போகிறார்கள். 60 சதவிகித மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வரக்கூடியவர்கள். எங்கள் வீட்டில் மூன்று மொழிப் பேசுபவர்கள் உள்ளார்கள். இருந்தாலும் என் மகனுக்கு, என் மகளுக்கு மூன்றாவது மொழியைச் சொல்லிக் கொடுப்பது சவாலாக உள்ளது. இதனால் முதல்தலைமுறை மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? மூன்றாவது மொழியைத் திணித்தால் அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்? நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தால் இது திணிக்கப்படும். 

பள்ளித் தேர்வுகளில் மூன்றாவது, ஐந்தாவது, எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகளை நடத்தவுள்ளார்கள். ஒரு தேர்வைச் சரியாகச் சந்திக்க முடியாமல் போனால் பள்ளியை விட்டே மாணவர்கள் சென்றுவிடுகிறார்கள். 11-ம் வகுப்புப் படிப்புக்கு முன்பு 40% மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகிவிடுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் எட்டாம் வகுப்பு வரை தேர்வு கிடையாது. 

நாங்கள் 10 வருடங்களாக மாணவர்களைப் பார்த்து வருகிறோம். 10 வருடங்களாக 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 30% +2 மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்? எல்லாத் தேர்வுகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வரும். அதை எழுதினால் தான் எந்த டிகிரியாக இருந்தாலும் போகமுடியும். நீட் தேர்வு சமூகத்தின் சமநிலையை மாற்றுகிறது. தேர்வுப் பயிற்சி மையங்களின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி. எட்டாவதிலிருந்து தேர்வுகளை எழுத பயிற்சி மையங்கள் தேவைப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படிப் படிப்பான்? இவ்வளவு நுழைத்தேர்வுகள் இருந்தால் எங்குச் சென்று படிப்பார்கள்? 

ரூ. 30,000 சம்பாதிப்பவர்களே, ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் கொண்ட பள்ளியில் தங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் எனத் தவியாகத் தவிக்கிறார்கள். பயிற்சி மையங்கள் காளான்களாக முளைத்துள்ளன. நான்கில் ஒரு பங்குக் கல்லூரிகளைக் குறைக்கப் போகிறார்கள். 50,000 கல்லூரிகள் 12,000மாகக் குறைக்கப்படவுள்ளன. இதனால் ஊர்களில், கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மூடப்படும். கல்வி பயில மறுபடியும் அவர்களுக்குத் தடை ஏற்படும். நிறைய நுழைத் தேர்வுகள் நடக்கப்போகின்றன. ஆனால் படிப்பதற்குப் பள்ளிகள், கல்லூரிகள் இருக்கப்போவதில்லை. இதுபற்றிய பயமோ, விழிப்புணர்வோ ஏன் நம்மிடம் இல்லை. இதனால் எனக்குத் தூக்கமில்லை. தூக்கம் இல்லாமல் தான் நான் இவ்வளவு கோவப்பட்டுப் பேசுகிறேனா எனத் தெரியவில்லை. நம் சமுதாயத்தில் 80 லட்சம் ஆசிரியர்கள் உள்ளார்கள். ஆனால் ஒரே ஒரு ஆசிரியர் அமைப்பும் அதே மாதிரி ஒரு ஒரே மாணவர் அமைப்பும் அவர்களுக்குப் பிரதிநிதியாக இருந்துள்ளார்கள். அவர்களிடம் மட்டும் கேட்டுப் பண்ணதாகத் தெரிய வருகிறது. எல்லோரும் தயவு செய்து விழிப்புணர்வுடன் இருங்கள். கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்காகப் போராடும் சங்கங்கள் என அத்தனை பேரும் விழித்துக்கொள்ளவேண்டும். நாம் இங்கு ஏதோ பேசிக்கொண்டுள்ளோம். அங்கிருந்து பார்க்கும்போது நாம் சின்ன சின்ன ஆள்களாக இருப்போம். அனைவரும் ஜூலை 30-க்குள் அதற்கான இணையத்தளத்தில் உங்களுடைய கருத்துகளைத் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இது நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது. நிச்சயமாக, அதில் நிறைய நல்ல விஷயங்களும் உண்டு. ஆனால், அச்சம் கொடுக்கக் கூடிய நிறைய விஷயங்களும் உள்ளன. அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் என்ன மாற்றம் வேண்டுமோ அதை உடனடியாகச் செய்யவும் விழித்திருந்து செய்யவும் அகரம் மூலமாகச் சொல்லவேண்டும் என எண்ணினேன் என்று பேசியுள்ளார். 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. இதற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக, கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அமைச்சகம் வரவேற்றுள்ளது. வரும் 31-ஆம் தேதி வரை இந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com