உன்னவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல! இளையராஜாவின் இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சியின் நெகிழ்வான தருணங்கள்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் 'இசை கொண்டாடும் இசை' என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் அவரது பிறந்த நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நடைபெற்றது.
உன்னவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல! இளையராஜாவின் இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சியின் நெகிழ்வான தருணங்கள்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் 'இசை கொண்டாடும் இசை' என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் அவரது பிறந்த நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நடைபெற்றது. தனது 76-ஆவது பிறந்த நாளை எட்டுத் திக்கிலும் இசை முழங்க, ரசிகர்கள் புடை சூழ, நண்பர்கள் வாழ்த்த நெகிழ்வுடன் கொண்டாடினார் இளையராஜா.  'தினமணி' மற்றும் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மீடியா பார்ட்னர்களாக இருந்தனர்.

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி, சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற்றது. பல்வேறு கால கட்டங்களில் தாம் இசையமைத்த பாடல்களை மேடையில் அரங்கேற்றி ரசிகர்களின் செவிகளுக்கு விருந்து படைத்தார் இளையராஜா. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து  பல நினைவுகளையும், நிகழ்வுகளையும் மிக சுவாரஸ்யமாக பகிர்ந்தார் இளையராஜா. 

மெர்குரி சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கண் கவர் அரங்கு, வெளிச்ச வெள்ளமோ என வியக்கத்தக்க சர விளக்குகள், மேடைக்கு வலது பக்கம் இரண்டு, இடது பக்கம் இரண்டு என நான்கு எல்.ஈ.டி பெரிய திரைகள் என வடிவமைக்கப்பட்டிருந்தது. சினிமா, அரசியல் என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு இசைஞானி இளையராஜாவிற்கு மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாம்பலம் என்.கே.எஸ். நடராஜன் தலைமையில் 76 பேர் கலந்து கொண்ட மங்கல இசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன் ஊரான பண்ணைபுரம் கிராமம், தந்தை ராமசாமி, தாய் சின்னத்தாய், சகோதரர்கள் பாவலர், பாஸ்கர், சகோதரி கமலம், இசை குருமார்கள் தன்ராஜ் மாஸ்டர், ஜி.கே.வெங்கடேஷ், டி.வி.கோபாலகிருஷ்ணன், தெட்சிணாமூர்த்தி சுவாமி, திரை இசையில் அவரை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம், தான் வணங்கி வரும் ரமண மகரிஷி ஆகியோரை காணொளியில் காண்பித்தார்.

வழக்கமாக இசை நிகழ்ச்சிகளில் முதலாவதாகப் பாடும் 'ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ' என்ற பாடலையே இங்கும் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினார்.  அதன் பின் இரண்டாவதாக 'நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற 'ஓம் சிவோஹம்' பாடல் ரசிகர்களின் பெருத்த கரகோஷத்திற்கிடையே பாடப்பட்டது.

பின்னணிப் பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ,  உஷா உதுப், மனோ, பவதாரணி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மறக்க முடியாத பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். குறிப்பாக பாம்பே ஜெயஸ்ரீ இளையராஜாவை முதன் முதலாக சந்தித்த தருணத்தை நெகிழ்ச்சியுடன் கூறினார். போலவே உஷா உதுப், இளையராஜாவே மறந்த பாடலை பாடி அசத்தினார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கூட்டணியைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இளையராஜாவுக்கு ரமண மகரிஷியின் படத்தை பரிசாக வழங்கி ஆரத் தழுவினார் எஸ்.பி.பி. பிரிந்த நண்பர்கள் ஒன்றுகூடினால் பாட்டுக்குப் பஞ்சம் இருக்குமா? மடை திறந்து'.... பாடலை பாடி அனைவரையும் உற்சாக வெள்ளத்தில் நனைய வைத்தவர், தொடர்ந்து, 'பாடு நிலாவே', 'ஓ பட்டர்ஃப்ளை' உள்ளிட்ட தன் எவர்க்ரீன் பாடல்களைப் பாடினார் எஸ்.பி.பி. 

வெண்ணிற ஆடை, வெண்ணிற தாடி என ஒரு இசைச் சித்தர் போல மேடையில் பிரவேசித்தார் கே.ஜே.ஜேசுதாஸ். 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாடலை தனது முதல் பாடலாக பாடினார். 'கண்ணே கலைமானே', 'என் இனிய பொன் நிலாவே' உள்ளிட்ட பாடல்கள் அனைவரின் செவிகளுக்கும் விருந்து படைத்தன. கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பி இருவரும் இணைந்து 'காட்டுக்குயிலு மனசுக்குள்ளே'  பாடலைப் பாடிய போது ரசிகர்களின் கைதட்டல் அரங்கை அதிரச் செய்தது. 

சர்ப்ரைஸ் விசிட்டராக நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசன் இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி 'ஹேராம்' படக் காட்சிகளுக்கிடையே, அவர் இசையமைத்துக் கொடுத்த பாடலான 'இசையில் தொடங்குதம்மா' பாடல் மற்றும் பின்னணி இசை உருவாக்கம் பற்றி கூறி நெகிழ்ந்தார். பின்னர் ஒத்திகை எதுவும் செய்யவில்லை ஆனாலும் பாடுகிறேன் என்று விருமாண்டி' படத்தில் வரும் 'உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல' பாடலை பாடி ரசிகர்களை பரவசப்படுத்தினார் நம்மவர். இந்தப் பாடலின் முதல் வரியைக் கொடுத்ததும் இன்றி, என்னை முழுப் பாடலையும் எழுத வைத்த பெருமை அண்ணன் இளையராஜாவையே சேரும் என்று நினைவுகூர்ந்தார் கமல்.

நிகழ்ச்சியின் இடையே, ரசிகர்ளை உற்சாகப்படுத்தும்விதமாக, பின்னணி இசை இல்லாமல் பாடலை கற்றுக் கொள்ளலாம் என்றார் இளையராஜா. அந்தப் பாடல், ‘ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா, கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா’ ரசிகர்கள் பாட இளையராஜா கைகளையே வாத்தியமாக மாற்றி, தட்ட ரசிகர்கள் அவரைத் தொடர, என ஒரு இசை ஜுகல்பந்தி அரங்கேறியது.

இந்நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இதுவரை இல்லாத புதுவிதமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடலாம். ஹேராம், மெளனராகம் படங்களின் குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு பின்னணி இசை சேர்த்தபின்னர் அக்காட்சி எவ்வாறு உயிரூட்டப்பட்டது என்பதை இளையராஜாவே விளக்கிச் சொன்னார். AV-ல் படக் காட்சிகள் காண்பிக்கப்பட, நேரலையில் அதற்கு மேடையிலிருந்த இசைக்குழு இசைத்துக் காட்டினர்.  இது ரசிகர்களுக்கு  முற்றிலும் புது அனுபவத்தைத் தந்தது.

இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட வருமானம் அனைத்தையும் சினிமா இசையமைப்பாளர் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக வழங்கினார் இளையராஜா. மேலும் நிதி திரட்டும் விதமாக பல இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சங்க உறுப்பினர்களின் நலனுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக இளையராஜா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி தன் சொந்த செலவில் இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன் என்ற உறுதிமொழியை மேடையில் அனைத்து ரசிகர்கள் மீடியா முன்னிலையில் அளித்தார் இளையராஜா. மேலும், அந்தக் கட்டடத்தின் மாதிரியை  தினா, ஹம்சலேகா, தேவி ஸ்ரீபிரசாத், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட இசைக் கலைஞர்களிடம் ஒப்படைத்தார் இளையராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com