இருந்த சிரிப்பும் இறந்து விட்டது! கிரேஸி மோகன் நினைவலைகள்! 

இப்படியொரு மரணச் செய்தியை யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது.
இருந்த சிரிப்பும் இறந்து விட்டது! கிரேஸி மோகன் நினைவலைகள்! 

இப்படியொரு மரணச் செய்தியை யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. எப்படி எப்போ என்ற அதிர்ச்சியை தாண்டியதும், ஏன் என்று கேட்காமல் இருக்க முடியாது. பிறந்த உயிர்கள் மரிப்பது இயற்கையே என்றாலும், சிலர் இந்த உலகில் நீண்ட காலம் இருந்திருக்கலாமே என்று மற்றவர்களை நினைக்கச் செய்யும் விதமாக வாழ்ந்திருக்கும் போது அவர்களின் மறைவு சொல்லொண்ணாத் துயரை விளைவித்துவிடும். அத்தகைய நிகழ்வுதான் நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேஸி மோகனின் மறைவு ஏற்படுத்தியுள்ளது.

மேடை நாடகத்தில் பலவகை உண்டு. அதில் தனக்கென தனித்துவமான பாதை அமைத்துக் கொண்டவர் மோகன். கிரேஸி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான அவருடைய பல நாடகங்கள் மக்களிடையே பிரபலமாகி, அவருக்கான ரசிகர்கள் பெருகத் தொடங்கினர். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, யார் மனதையும் புண்படுத்தாத, முக்கியமாக வன்முறை இல்லாத காமெடி அவருடையது என்றால் மிகையில்லை. ஒரு காலகட்டத்தையே தன்னுடைய நகைச்சுவை பேச்சால் மயக்கி வைத்திருந்தவர் அவர். 

எழுத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் நகைச்சுவையை அள்ளித் தர முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் கிரேஸி மோகன். கல்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த சக பத்திரிகையாளர் மு.மாறன், கிரேஸி மோகனை பேட்டி எடுக்க போகிறேன், உடன் வர முடியுமா என்று கேட்டார். உடனே சரியென்று கிளம்பினேன். அதற்கு முன் அவரிடம் ஒரிரு முறை தொலைபேசியில் பேசி bytes வாங்கியிருக்கிறேன். மற்றபடி பரிச்சயமில்லை. அன்று அவர் வீட்டுக்குச் சென்ற போது அன்புடன் வரவேற்று உபசரித்தார். மாறன் அவரிடம், இவங்க உமா பார்வதி என்று அறிமுகப்படுத்திய போது ஒரே ஆள் ரெண்டு பேர் என்று இன்ஸ்டென்டாக நகைச்சுவை கமெண்ட் அடித்தார். அதன்பின் மாறன் சரமாரியாகக் கேள்விகள் கேட்க, சளைக்காமல் தன் பாணியில் பதில்களை சொன்னார். எங்களிடம் கலகலப்பாக பேசி வழியனுப்பினார். அன்று பேசிய அத்தனை விஷயங்களும் நினைவில் இல்லை. ஆனால் நிறைய சிரித்தோம் என்பது மட்டும் நீங்காமல் நினைவில் நிலைக்கிறது. Off the record-ஆக மாறன் திரைத்துறைக்குச் செல்ல விருப்பம் வழிகாட்ட முடியுமா என்று தயங்கிக் கேட்க, தைரியமாக மனசுக்குப் பிடிச்ச வேலையைப் பாரு, ஜெயிப்பே என்று வாழ்த்தினார். அது மட்டுமல்ல தக்க நேரத்தில் திரைத்துறையில் உதவி இயக்குநராக சில உதவிகளைச் செய்தார் என்று மாறன் கூறியிருக்கிறார். அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து மாறன் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற படத்தை இயக்கி ஜெயித்தற்கு முக்கிய காரணம் உள்ளன்புடன் வாழ்த்திய கிரேஸி மோகனின் மாசற்ற நேசம். சக மனிதர் மீதான அவரது அக்கறையை நேரடியாகப் பார்த்து மகிழ்ந்தேன்.

அடுத்த முறை அவரை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். விசாரிப்புக்கள் முடிந்து வேலை பற்றிக் கேட்டார். இப்போது எங்கே வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார். பத்திரிகை பெயர் சொன்னேன். குட் குட் என்று வாழ்த்தினார். அன்று அதற்கு மேல் அவரிடம் சரியாக பேச முடியவில்லை. அதன் பிறகு சில முறை அவரை வெவ்வேறு தருணங்களில் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவருடைய அன்பான விசாரிப்புக்களை மறக்க முடியாதவை. சினிமா எக்ஸ்பிரஸ் யூட்யூப் சானலில் அவருடைய பேட்டி வெளியானதும், ஃபோனில் அழைத்து நன்றாக இருந்தது ரசித்தேன் என்று கூறினேன். இப்போது தினமணி டாட் காமில் என் பணி என்றதும் வாழ்த்தினார். எப்போதும் மனம் நிறைந்து பாராட்டும் மனிதர்கள் மிகவும் குறைவு. அவருடன் அலுவலக நிமித்தமாக சில முறை மட்டுமே பேசியிருக்கும், என்னைப் பற்றி கூட தன் நினைவடுக்கில் ஓரிடம் கொடுத்திருந்தார் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

அண்மையில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க முடியுமா என்று கேட்பதற்காக அவரது மொபைல் போனுக்கு அழைத்தேன். ரிங் போனது ஆனால் எடுக்கப்படவில்லை. அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருக்கவே ஃபோனை சைலைண்ட் மோடில் வைத்துவிட்டு மீட்டிங்கில் பங்கேற்றேன். அப்போது கிரேஸி காலிங் மோகன் காலிங் என்று மொபைல் மெளனமாக அழைத்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இரண்டொரு முறை அடித்து நிறுத்தியபின், நான் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். ஸாரி உங்கள் காலை தற்போது ஏற்க முடியவில்லை சிறிது நேரத்தில் அழைக்கிறேன் என்பதுதான் அது. மீட்டிங் முடிந்தபின் அவசரமாக அவர் நம்பருக்கு அழைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு பேசினேன். இதுல என்ன இருக்கு? உங்க வேலை டைம்ல அதானே முக்கியம். என்ன விஷயமா ஃபோன் பண்ணீங்க என்று கேட்டார். நான் சொன்னதும், அந்தத் தேதியில் அவருக்கு ஒரு திருமண அழைப்பு இருக்கவே, மென்மையாக மறுத்தார். இன்னொரு விஷயம் எங்க தினமணி யூட்யூப் சானலுக்காக உங்களை சந்திக்கணும், நிறைய பேசணும் என்றேன். பேஷா ஃப்ரீயானதும் கூப்பிடறேன் உமா என்றார். இன்று அவரில்லை, அந்தக் குரலும், அந்த அழைப்பும் மனதை நெருடியபடி உள்ளது...

அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் மனமுருகி வேண்டுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com