வியாதி வந்தோ, கஷ்டப்பட்டோ ‘கிரேஸி’ மோகன் இறக்கவில்லை: மாது பாலாஜி விளக்கம்

அவருக்கு சுகர், பிபி இருந்தது, அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று இதுபோன்ற செய்திகளை யாரும் பரப்பவேண்டாம்...
வியாதி வந்தோ, கஷ்டப்பட்டோ ‘கிரேஸி’ மோகன் இறக்கவில்லை: மாது பாலாஜி விளக்கம்

நடிகர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்களைக் கொண்ட ‘கிரேஸி' மோகன் (66) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள் அன்று காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி' மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரேஸி மோகனுக்கு மனைவி நளினி, மகன்கள் அஜய், அர்ஜுன் உள்ளனர். நேற்று, கிரேஸி மோகனின் உடல் ஊர்வலமாக மயிலாப்பூரிலிருந்து பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மயானத்துக்கு வந்த நடிகர் கமல்ஹாசன், கிரேஸி மோகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். 1.30 மணியளவில் கிரேஸி மோகனின் உடல் எரியூட்டப்பட்டது.

இந்நிலையில் கிரேஸி மோகனின் மரணம் தொடர்பாக வெளியாகியுள்ள தவறான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அவருடைய சகோதரர் மாது பாலாஜி, விடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

என்னுடைய சகோதரர் கிரேஸி மோகன் ஜூன் 10 அன்று மதியம் 2 மணிக்குக் காலமானார். நேரிலும் சமூகவலைத்தளங்கள் வழியாகவும் எங்களுக்கு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த விடியோவை வெளியிடுவதற்குக் காரணம் - முதலில் நாங்கள் எல்லோரும் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம். ஏனெனில் அவர் வியாதி வந்தோ கஷ்டப்பட்டோ சாகவில்லை. இந்த மரணம் உடனடியாக நிகழ்ந்த ஒன்று. இதனால் எங்களுக்கே பேரதிர்ச்சி. அன்றைய தினம், காலை 7.30 மணிக்கு மோகனைச் சந்தித்தேன். எப்போதும் போல மிகவும் சந்தோஷமாகப் பேசினார். அவருக்கு சுகர், பிபி எதுவும் கிடையாது. எல்லோரும் தவறான தகவல்களை எழுதுகிறார்கள். மூன்று மாதத்துக்கு முன்புகூட உடல் பரிசோதனை செய்தோம். அவருக்கு சுகரோ பிபியோ கிடையாது. காலையில் அவரைச் சந்தித்தபோது நகைச்சுவையாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். 

வழக்கமாக, காலை 9.15 மணிக்கு காலை உணவை மேற்கொள்வார். அதை அன்று அதே நேரத்தில் முடித்துள்ளார். பிறகு காலை 9.45 மணிக்கு என்னை அழைத்தார். பாலாஜி மூச்சு முட்டுவது போல உள்ளது. அடிவயிற்றில் லேசாக வலிக்கிறது. கொஞ்சம் வரமுடியுமா என்று கேட்டார். உடனே அவருடைய வீட்டுக்கு விரைந்தேன். அவரால் மூச்சு விட முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். உடனடியாக காரை எடுத்துக்கொண்டு காவேரி மருத்துவமனைக்குச் சென்றோம். அந்த மருத்துமனையின் சுரேஷ் குமார் தலைமையிலான மருத்துவர்கள் அவருக்கு அற்புதமான சிகிச்சை அளித்து மீட்டுக்கொண்டு வர முயன்றார்கள். காலை 10 மணி முதல் மதியம் 2 வரை அவர்கள் மிகவும் போராடினார்கள். ஆனால் என்ன செய்வது, மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. விதி அதுபோல முடிவெடுத்துவிட்டது. நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 

நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அவர் வியாதி வந்து இறந்துவிட்டார், அவருக்கு சுகர், பிபி இருந்தது, அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று இதுபோன்ற செய்திகளை யாரும் பரப்பவேண்டாம். எல்லாமே தவறான செய்திகள். இறப்பதற்கு முந்தைய நாள் இரவில் பெருமாள் பெயரில் 12 கவிதைகள் எழுதிவிட்டுத்தான் இறந்துள்ளார். அதனால் அவருக்கு எந்தவிதமான வியாதியும் கிடையாது. திடீரென்று நிகழ்ந்த சம்பவம் இது. என்ன செய்வது, நம் தலையெழுத்து. நம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டு அவர் சந்தோஷமாகக் கிளம்பிவிட்டார். திடீரென ஏற்பட்ட, இயற்கையான மரணம் காரணமாகவே அவர் இறந்துள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார். 

இதேபோல கிரேஸி கிரியேஷன்ஸின் இயக்குநர் எஸ். பி. காந்தன், மாது பாலாஜியின் விடியோவைப் பகிர்ந்து, கிரேஸி மோகன் எந்தவொரு தருணத்திலும் மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com