யுகத்திற்கு மரணம், முடிவு உண்டா?

நாடகத்  தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், வெள்ளித்திரை நடிகர், பட இயக்குநர், தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை வழங்குபவர், சின்னத்திரை  நடிகர், அறிவு ஜீவி என பன்முகம் கொண்டவர் தான் கிரிஷ்.
யுகத்திற்கு மரணம், முடிவு உண்டா?


நாடகத்  தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பல இந்திய மொழிகளின் வெள்ளித்திரை நடிகர், பட இயக்குநர், தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை வழங்குபவர், சின்னத்திரை  நடிகர், அறிவு ஜீவி என்று பன்முகம் கொண்ட கிரிஷ் கர்னார்டு நம்மிடம் இல்லை.

கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் பாண்டித்தியம்  உள்ள  கிரிஷ் கர்னார்டு தனது கன்னட நாடகங்களை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வார். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில் அவரது நாடகங்கள் மராத்தி, ஹிந்தி, அஸ்ஸாம், வங்காள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. 

'யயாதி', 'ஹயவதனா', 'துக்ளக்', 'நாகமண்டலா', 'தலெதண்டெ' போன்றவை   கன்னடத்தில் வெற்றி பெற்ற கிரிஷ்  நாடகங்கள். இவற்றில் பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 'துக்ளக்'  நாடகம், இந்தியாவை ஐந்து ஆண்டுகள் ஆண்ட  முகமது பின் துக்ளக்  மன்னனின் உண்மையான  முகத்தைக் காட்ட எழுதப்பட்ட நாடகம்  என்று கிரிஷ்  சொல்லியிருந்தார்.   

சிலர் அப்படித்தான். எதைச்  செய்தாலும் அதில் அவர்களது முத்திரை பதிந்துவிடும். கிரிஷும் அப்படியே. எழுத்தில் நடிப்பில், பேச்சில்  நிர்வாகத்தில் தனது ஆளுமையை நிலை நிறுத்தியதால் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகளைத் தொடர்ந்து ஞானபீட  விருதும் அவரிடம் வந்து சேர்ந்தது. விருது வாங்குவதற்காக  மட்டுமே தயாரிக்கப்படும் படங்கள், புதிய அலை படங்கள், மாற்று (alternate)  திரைப்படங்கள்,  ஏன்  வியாபார ரீதியிலான  கமர்ஷியல் படங்களாக  இருக்கட்டும் அத்தனை படங்களிலும்  நடித்தவர் கிரிஷ் கர்னார்டு. அதுவும் கமர்ஷியல் படங்களில்  வில்லனாக  பெரும்பாலும் நடித்திருப்பார். 

"கமர்ஷியல் படங்களில்  கிரிஷ்  நடிக்க  ஒத்துக் கொண்டது பொருளாதாரத்திற்காகத்தான்.   "என்னை ஏன் இந்த  (வில்லன்) கதாபாத்திரங்களில்  நடிக்க  அழைக்கிறார்கள்' என்று  எனக்குப் புரியவில்லை. ஆனால் வாய்ப்புகள்  வருகின்றன.. என்ன செய்வது.." என்பார்.  கிரிஷ் நடித்து இனியும் வெளிவர  ஐந்து படங்கள் உள்ளன. இந்த ஆண்டு அவை வெளியாகுமாம். கிரிஷின் குரலில் ஆண்மைத்தனம் அப்பட்டமாக இருக்கும். கிரிஷின் கவர்ச்சியும் அதுதான். 

கிரிஷ் கர்னார்டு  கொங்கணி மொழி பேசும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்மா ஒரு ஆண் குழந்தையுடன் விதவையானவர். செவிலியாக பயிற்சி பெற்றதால் நர்ஸாக சேவை செய்து வந்தவர். கிரிஷின்  தந்தை மருத்துவ டாக்டர்.  இருவரும்  திருமணம் செய்து கொள்ள  விருப்பப்பட்டாலும் மணமகள் விதவை என்பதால்  வீட்டிலும்  எதிர்ப்பு. சமூகத்திலும் எதிர்ப்பு. கடைசியில் 'ஆர்ய சமாஜ்'  ஆதரவில்  திருமணம் செய்து கொண்டார்கள். மூத்த சகோதரரை  சொந்த அண்ணன் என்றுதான்  கிரிஷ்  நினைத்து வந்தாராம். வளர்ந்த பிறகுதான் உண்மையை ,  தாய் சொல்லி கிரிஷுக்குத்  தெரிய வந்ததாம். 

கிரிஷ்  மூன்றாவதாகப் பிறந்தவர். இவர்  கருவானதும், 'மூன்று குழந்தைகள் வேண்டாம்'   என்று கரு கலைப்பிற்காக   கிரிஷின் தாய்  பெண் மருத்துவரைப் பார்க்கப்போக .. அன்றைக்கு  என்று பார்த்து அந்த மருத்துவர்  கிளினிக்கிற்கு வராததால், காத்திருந்து  காத்திருந்து  வெறுத்துப் போனவர் வீடு திரும்பினார். அந்த வெறுப்பில் மீண்டும் டாக்டரைப் பார்க்க போகவில்லை. அந்தக் கரு வளர்ந்து  கிரிஷாக  மாறியது. இந்த சம்பவத்தையும், கிரிஷிடம்  அவர் தாய் சொல்ல .." ஐயோ.. நீங்க அப்படி செய்திருந்தா.. நான் இந்த உலகத்தையே பார்க்க முடிந்திருக்காதே.." என்று  ஒரு கணம் திடுக்கிட்டுப் போனார். தான் கருகி கலைப்பிலிருந்து தப்ப கிளினிக்கிற்கு வராமல் இருந்து உதவிய அந்தப் பெண் டாக்டருக்கு மானசீகமாக நன்றி செலுத்தினார்.   
அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம்  சுதாரித்துக் கொண்டு,  'மூன்றாவதாக  நான் வேண்டாம்'  என்று  சொன்னவர்கள்.. நான்காவதாக  தங்கையை ஏன் பெற்றுக் கொண்டீர்கள்.." என்று  கிரிஷ் கேட்க.."கூடுதல் குழந்தைகளை பெற்றுக் கொண்டால் வளர்ப்பதில் பிரச்சினை  இல்லை" என்று  எங்களுக்குத் தோன்றியதால்  பெற்றுக் கொண்டோம்  என்றாராம். கிரிஷ்  இந்த சம்பவத்தை தனது மகன், மகளிடம் சொல்ல.. ."பாட்டி உங்களைக் கருவில் கலைத்திருந்தால்  நாங்கள் எப்படி பிறந்திருப்போம்.. இந்த  உலகை எப்படி பார்த்திருப்போம்.... அந்த  டாக்டருக்கு நாங்களும் நன்றி சொல்லணும்   " என்றார்களாம்.

கிரிஷ்     குடும்பம்  தார்வாருக்கு  இடம் மாறியதால்   கிரிஷுக்கு  கன்னட இலக்கியத்தில் குறிப்பாக  நாடகத்தில்,  தெருக் கூத்துகளில் ரசனை வளர்ந்தது. பெற்றோர்களும்  நாடகங்களை விரும்பிப்  பார்த்து  வந்ததால் , அவர்களுடன் நாடகங்கள் பார்த்து வந்ததும்,  வீட்டில் நடித்துப் பார்க்க ஆரம்பித்தார். எல்லாரையும் போலவே  கிரிஷும் லண்டன் சென்று படிக்க  ஆசைப்பட்டார். ஆனால் லண்டன் சென்று படிக்க போதிய பண வசதியில்லை. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்வு பெற்றால் கல்வி உதவித் தொகை கிடைக்கும். அதிக மதிப்பெண்கள் வாங்க கணக்கு பாடத்தில் மட்டுமே முடியும். இதர பாடங்களில் தலைகீழாக படித்தாலும்  அதிக மதிப்பெண்கள்  எடுக்க முடியாது. அதனால் கணக்கு பிடிக்காது என்றாலும், பாடமாக எடுத்துப் படித்து பல்கலைக்கழகத்தில்  முதல் மாணவனாக  கிரிஷ்  தேறினார்.  அதன் காரணமாக ஸ்காலர்ஷிப் கிடைக்கவே கிரிஷ் லண்டன் புறப்பட்டார். 

லண்டனுக்கு  விமானத்தில் போக  தேவையான  பண வசதி கிரிஷ் குடும்பத்திடம் இல்லை. கப்பலில் இந்தியாவிலிருந்து லண்டன் போக அப்போது மூன்று  வாரம் பிடிக்கும். லண்டன் சென்றால் வெள்ளைக்காரியை கிரிஷ் திருமணம் செய்து கொள்ளலாம் ... மூன்று ஆண்டுகள் கழித்துதான் கிரிஷ்  இந்தியா  திரும்ப முடியும். அதுவரை மகன் முகத்தைப் பார்க்க முடியாது. மகன் எதிர்காலம் எப்படி இருக்குமோ  என்ற பயத்தில்  கிரிஷின் அம்மா அப்பா கலங்கினார்கள்.  

'எங்களை விட்டு விட்டு  அங்கே என்ன செய்யப் போகிறாய்.. திரும்ப இந்தியா வந்துவிடு'   என்று அரற்றினார்கள். கிரிஷுக்கோ மனதுக்குள் பெரிய போராட்டம். "லண்டன் படிப்பு வேணுமா? வேண்டாமா..". அந்த மனக் குழப்பத்தில் கிரிஷ் எழுதியதுதான் "யயாதி" நாடகம்.  

ஆரம்பத்தில்  எலியட்  போன்று ஆங்கிலக் கவியாக  வேண்டும்  என்று தான் கிரிஷ் கனவு கண்டார். 'யயாதி' நாடகம் பிரமாதம்...  பிரசுரம்  செய்யலாம்' என்று பதிப்பாளர் சொன்னதும்  கிரிஷ்  நாடக ஆசிரியனாகத் தீர்மானித்தார். கவிஞர் கனவை தொலைத்துவிட்டு  நாடகங்கள்  எழுத  லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார். 

கிரிஷை  "யயாதி' நாடகம்  எழுத  வைத்தது  ஒருவிதத்தில்  ராஜாஜிதான். "நான் ராஜாஜிக்கு  நன்றி சொல்ல வேண்டும்" என்று பலமுறை கிரிஷ் பதிவு செய்துள்ளார். ராஜாஜி எழுதிய ஆங்கில  'மகாபாரதம்'  நூலை வாசித்தபோதுதான்  யயாதியின் கதை கிரிஷுக்குத்  தெரிய வந்தது.  கிரிஷின் கண்முன்னே  யயாதியின் கதை  நாடகமாக  நடப்பது போல உணர்ந்தார். நாடக  வசனங்களை இயந்திர கதியில்  விறுவிறுவென்று  தாள்களில் எழுத ஆரம்பித்தார்.  அது கிரிஷுக்கு மட்டுமல்ல  அதனை வாசித்த  நாடக நண்பர்களுக்கும் திருப்தியைத் தந்தது. ராஜாஜியின் 'மகாபாரதம்', கிரிஷின் "தீயும் மழையும்" என்ற நாடகத்திற்கு கருவையம் அன்பளிப்பு செய்தது. 

நாடக உலகம்  கிரிஷை வளைத்துப் போட்டுக் கொண்டுவிட்டாலும், திரைப்பட உலகிற்கு கிரிஷ் வந்தது ஒரு விபத்து போலத்தான். அந்தப் பயணம் 'ஸம்ஸ்காரா' படம் மூலம் தொடங்கியது. கிரிஷுக்குத் திரைப்படங்களின்பால் ஈர்ப்பில்லை. படிக்க லண்டன் சென்ற போது கூட பிரபல இயக்குநர்களின்  ஒரு படத்தைக் கூட கிரிஷ் பார்த்ததில்லை. 

1965 வாக்கில் கிரிஷின் பதிப்பாளர், கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி எழுதிய 'ஸம்ஸ்காரா'  நாவலை கிரிஷிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அதை வாசித்து முடித்ததும் அந்த நாவல் கிரிஷைப் புரட்டிப் போட்டது. கிரிஷ் நாவலின் தாக்கத்தில் தன்னை இழந்தார்.  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்  மனமுண்டு என்று நம்பிய கிரிஷ், அந்த நாவலைத் திரைப்படமாக  தயாரிக்கலாம் என்று தீர்மானித்து நண்பர்களுடன் தயாரிப்பு வேலைகளில்  இறங்கினார்.  

படத்தில் கிரிஷும்  நடித்தார். மாநில படங்களைத் தயாரிப்பதில் அப்போது செலவு மிகக் குறைவு.  ஒன்றரை லட்சத்தில் முழுப் படமும் தயாராகிவிடும். படம் வெளியாகி பாராட்டுகளை விருதுகளைப் பெற கிரிஷின் வெள்ளித்திரை பயணம் வெற்றிகரமாகத் தொடங்கியது. 

இரண்டாம் படமான "வம்சவிருக்ஷா" படத்தில் விஷ்ணுவர்தன்  நடிகராக அறிமுகமானார். கணக்கு படித்ததால்  தன்னால்  எதையும் துல்லியமாக திட்டமிட முடிந்தது என்று கிரிஷ் நம்பினார். அது நாடமானாலும் சரி.. திரைப்படமாக இருந்தாலும் சரி... கதையின் கட்டுமானம் இப்படித்தான் இருக்க வேண்டும்  என்று தீர்மானிப்பதற்கு   கிரிஷுக்கு  அவர் படித்த  கணக்கு  உதவியதாம்.
   
கிரிஷ், 'சரஸ்வதி கணபதி' என்பவரை ஒரு பார்ட்டியில் சந்தித்தார். சரஸ்வதி மருத்துவ டாக்டர். கிரிஷ், சரஸ்வதி திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தாலும்  திருமணம் பத்தாண்டுகள் தள்ளிப் போனது. அதற்கு சரஸ்வதியின் தாய் 'பார்சி' இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணம். கிரிஷ் திருமணம் செய்து கொள்ளும் போது வயது 42.
 
மனைவி சரஸ்வதி குறித்து  கிரிஷ்  பதிவு செய்திருந்தது இவைதான்: 

'சரஸ் எனக்கு மனைவியாக அமைந்தது எனது அதிர்ஷ்டம். "நீங்கள் ஒரு பிரபலமாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. நீங்கள் அமிதாப் பச்சனாக ஆகவும் வேண்டாம். உங்களுக்கு எது தெரியுமோ... எது நன்றாக வருமோ அதை செய்யுங்கள்" என்று வெளிப்படையாக சரஸ்வதி என்னிடம்  சொல்லிவிட்டார்.   

அமெரிக்காவில் மருத்துவராக இருந்து  வேண்டியதை சரஸ்வதி சம்பாதித்திருக்கிறார். நாங்கள் திருமணமாக முடிவு செய்து பத்தாண்டுகள் காத்திருந்தோம். அந்த காத்திருப்பின் முடிவில் சரஸ்வதி சொன்னார். 

"நீங்கள் ஒரு நட்சத்திரமாகப் போகிறீர்கள் என்பதற்காக உங்களை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனக்கு அர்த்தமுள்ள திருமண வாழ்க்கை வேண்டும்  என்பதற்காகத்தான்".  சரஸ் சொன்னது எனக்குப் புரிந்தது."

உடன் பிறந்த தங்கை, 'தங்கை' முறையில் ஒரு பெண்,  மூன்று  மாமாக்களின் நான்கு பெண்கள் ஆக ஆறு பெண்கள் மத்தியில் வளர்ந்த கிரிஷ்பெண்ணின் மனதை புரிந்து கொண்டதில்...  பெண்ணை மதிக்க  மனம் பண்பட்டதில் வியப்பில்லை.  

கிரிஷின் மகன் ரகு கர்னார்ட்  ஒரு பத்திரிகையாளர்.  மகள் பிறந்ததும், "எதற்கு எங்கோ பாய்கிற  நதிகளான யமுனா, கங்கா, காவிரி, நர்மதா  என்று  பெயர் வைக்க வேண்டும் ? நான் வளர்ந்த இடத்தில் பாயும் 'ஷல்மலா' ஆற்றின் பெயரை மகளுக்கு பெயராக சூட்டினேன்" என்று பருமைபட்டுக் கொண்டவர்,    கன்னட மண்ணின் மைந்தனான  கிரிஷ். 
   
சில ஆண்டுகளாக சுவாசிப்பதில் சிக்கல் இருந்ததால், எங்கு சென்றாலும் அது படப்பிடிப்பாக இருந்தாலும், கிரிஷ்  கையுடன் ஆக்சிஜன் சிலிண்டரையும்   ஒரு பிளாஸ்டிக்  குழாயையும் கொண்டு போவார். 'ஏன் இப்படி' என்று கேட்டால் "எப்படி மூக்கு கண்ணாடி  உடலின்  ஒரு பாகமாக மாறிவிட்டதோ, அப்படி எனக்கு மூக்கு கண்ணாடியுடன்  சுவாசிக்க உதவும் ஆக்சிஜன் சிலிண்டரும் ஒரு அவயவமாகிவிட்டது" என்று  கிரிஷ் சொல்வார்.  

இல்லை...!  உடல் உபாதை அவரை அப்படி சொல்லச் செய்தது. உடல் நிலைமை இன்னும் சீர்கெட ஆரம்பித்த போது கிரிஷ்பேசவும் சிரமப்பட்டார். நரேந்திர தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்றோர் கொல்லப்பட்ட போது அந்தக் கொலைகளை உரத்த குரலில் உறுதியுடன் கிரிஷ் கண்டித்தார். 
கௌரி லங்கேஷ்  கொல்லப்பட்டு ஓராண்டு நினைவு விழாவில் கிரிஷ் தனது சுகவீனத்தையும் மீறி கலந்து கொண்டார். பேச இயலாத கிரிஷ் மௌனமாக சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அதே சமயம்,  கௌரி லங்கேஷுக்கு  ஆதரவு தெரிவிக்கும் விதமாக "நானும் நகர்புற நக்சல்தான்" என்று எழுதப்பட்ட அட்டையை  கழுத்தில்  தொங்கவிட்டிருந்தார். 

அவர் சொல்ல வந்ததை  வாயால்  சொல்ல முடியாதலால், எழுதி காண்பித்துவிட்டிருந்தார். கிரிஷும்  'கொல்லப்பட வேண்டியவர்கள்' பட்டியலில்  இருப்பதாகச் சொல்லப்பட்டது. தாங்கள் செய்ய வேண்டிய வேலையை நோய் செய்து முடிக்கும் என்று கொலைகாரர்கள் கிரிஷைக் கொல்லாமல் விட்டுவிட்டார்களோ என்னமோ!
 
கன்னட  நாடகங்களை அகில இந்திய அளவில் கௌரவம், அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்த கிரிஷ் கர்னார்டு அதற்கான காரணிகளை, தரவுகளை தனது நாடக ஆசான்களிடம் கடன் வாங்கியிருந்தார். மாற்று திரைப்படங்களை கன்னட, ஹிந்தி படவுலகுக்கு பங்களிப்பு செய்த கிரிஷ் கன்னட திரைப்படங்களையும் அகில இந்திய செய்தியாக்கினார். கன்னட நாடக மற்றும் திரைப்பட  உலகங்களின் ஒரு 'யுகம்' மறைந்துவிட்டது என்று பலரும் கிரிஷின் மறைவு குறித்து அஞ்சலி செலுத்துகிறார்கள். 

'யுக'த்திற்கு மரணம், முடிவு உண்டா என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com