நடிகர் சங்கத் தேர்தலை மட்டுமல்லாமல் இதர விஷயங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: ஊடகங்களுக்கு நடிகர் விவேக் கோரிக்கை

நடிகர் சங்கம் என்பது இரண்டாயிரத்துச் சொச்சம் பேர் உள்ள சின்ன அமைப்புதான். இருந்தாலும்...
நடிகர் சங்கத் தேர்தலை மட்டுமல்லாமல் இதர விஷயங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: ஊடகங்களுக்கு நடிகர் விவேக் கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகத்துக்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. ஏற்கெனவே தலைவர் பதவி வகித்து வந்த நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இரு அணிகளிலும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குத் தலா 24 பேர் வீதம், 48 பேர் களத்தில் உள்ளனர். இதைத் தவிர செயற்குழுவுக்கு சுயேச்சைகளாக 11 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 69 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.  தேர்தலில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், நாடக நடிகர்களும் வாக்களித்தனர். உரிய நேரத்தில் தபால் படிவம் போய் சேராத காரணத்தால் மும்பையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை. மாலை 5 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 3,171 வாக்குகளில் 2,504 வாக்குகள் பதிவாகின. தபாலில் வந்த சுமார் 900 வாக்குகளைத் தவிர 1, 604 பேர் நேரடியாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. 

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விவேக், ஊடகங்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அவர் கூறியதாவது:

நடிகர் சங்கத்தின் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஊடகங்கள் இந்தளவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள். சந்தோஷம் தான். கலைஞர்களைப் போற்றுகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இதே நேரத்தில் தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் வேறு விஷயங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதையும் நீங்கள் ஒளிபரப்பி, மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை. பல இடங்களில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சிட்லப்பாக்கம், மனப்பாக்கம் பகுதிகளில் பொதுமக்களே ஏரிகளைத் தூர் வாருகிறார்கள். அதேபோல நிறைய பேர் வீட்டில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை செய்வதை விடியோ எல்லாம் போடுகிறார்கள். அதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

நடிகர் சங்கம் என்பது இரண்டாயிரத்துச் சொச்சம் பேர் உள்ள சின்ன அமைப்புதான். இருந்தாலும் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் கலந்துகொண்டு வாக்களிப்பதால் இதை மக்கள் பார்க்க ஆசைப்படுவார்கள் என்று நீங்கள் இதை மக்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுடைய அந்த ஊடகக் கடமையையும் பாராட்டுகிறேன். அதே போல மக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற குளம் தூர் வாருதல், மரம் நடுதல், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை வீடுகளில் பலர் அறிமுகப்படுத்துதல்... என இதையெல்லாம் கூட மக்களுக்கு எடுத்துச்சென்று பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com