இயக்குநர் சேரனின் ‘திருமணம்’ திரை விமரிசனம்!

பாரதி கண்ணம்மாவில் தொடங்கி பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து
இயக்குநர் சேரனின் ‘திருமணம்’ திரை விமரிசனம்!

பாரதி கண்ணம்மாவில் தொடங்கி பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் என பல நல்ல திரைப்படங்களை தந்த இயக்குநர் சேரன், கடைசியாக ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை கடந்த 2015-ம் ஆண்டில் எடுத்திருந்தார். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு குடும்பக் கதையுடன் திருமணம் (சில திருத்தங்களுடன்) என்ற படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க வந்திருக்கிறார். 

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைவதும் திருமணம்தான். அதன் பிறகே ஒருவரின் வாழ்க்கை முழுமையாக அர்த்தப்படுகிறது. இந்தக் காலத்திலும் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இருக்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட காதலர்களாக இந்தப் படத்தில் உமாபதியும், காவ்யா சுரேஷும் நடித்திருக்கிறார்கள்.

காவ்யாவின் அண்ணனாக சேரனும், உமாபதியின் அக்காவாக சுகன்யாவும் வருகிறார்கள். உமாபதி, காவ்யாவின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்கின்றனர் .அதன் பிறகு, திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் அனைத்திலும் ஆடம்பரத்தை எதிர்பார்க்க, பெண்ணின் அண்ணனான சேரன், செலவுகளை குறைக்க போராடுகிறார். இதனால், இருவீட்டாருக்கும் மனக்கசப்பு ஏற்பட திருமணம் நடைபெறுவதில் சிக்கல் எழுகிறது. முடிவில் என்ன ஆகிறது என்பதே மீதி படம்.

இன்றைக்கும் நடுத்தர குடும்பத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டுமானால், லட்சங்களில் கடன் வாங்குவதும், சொத்துகளை விற்பதும் நடக்கவே செய்கிறது. அக்கம் பக்கத்தினருக்காகவும், உறவினர்கள் தலை நிமர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காகவும் கடன் வாங்கி, ஆடம்பர செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்து வைப்பவர்களும் இருக்கிறார்கள். எளிமையான திருமணமே இனிமை என்பதை பதிவு செய்கிறது திருமணம் படம். 

நேர்மையான அரசு அதிகாரியாகவும், நல்ல அண்ணன், சிறந்த மகன் என்று தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார் சேரன். தம்பி ராமையாவின் மகன் உமாபதியும், காவ்யா சுரேஷும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காவ்யா சுரேஷின் பரதநாட்டிய நடனமும் அருமை! சுகன்யா, தம்பி மீது பாசத்தை பொழியும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா ஆகியோர் படத்துக்கு பக்க பலமாக உள்ளனர். இருவரும், சேரன், சுகன்யா கதாபாத்திரங்களின் முந்தைய வாழ்க்கை குறித்து பேசும் ஒரு காட்சி மனதை பிசைகிறது. சுகன்யாவின் கார் ஓட்டுநராக வரும் பாலசரவணன் நகைச்சுவை விருந்து படைக்கிறார்.

பின்னணி இசை சபேஷ்-முரளி. தலைப்புக்கு ஏற்ப மேளம், நாதஸ்வரம் ஆகிய வாத்தியங்களை பயன்படுத்தி பின்னணி இசை அமைக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு இசையமைத்துள்ள சிதார்த் விபின் இன்னமும் கூட மெனக்கெட்டிருக்கலாம். ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு ரசிக்கும் வகையில் உள்ளது. இந்தக் கதையில், இயற்கை விவசாயத்தை உயர்த்தி பிடிப்பதுடன், லஞ்சம் கொடுப்பதை எதிர்ப்பதையும் பதிவு செய்திருப்பது சேரனின் சமூக அக்கறைக்கு சாட்சி!

திருமணத்தை எளிமையாக நடத்தாலாமே எனும் கருத்தை படமாக்கிய இயக்குநர் சேரனின் முயற்சியை பாராட்டலாம். ஆனால், திரைக்கதை மெதுவாக நகர்வதால் மொத்த படமும் ஒருகட்டத்தில் தள்ளாடுகிறது. தேவையில்லாத இடங்களில் பாடல்கள் வருவதையும் தவிர்த்திருக்கலாம். ரசிகர்களை சோர்வடைய வைக்காத வகையில் திரைக்கதையில் இன்னும் சில திருப்பங்களை சேர்த்திருக்கலாம். இயக்குநர் சேரன் படங்களில் இருக்கும் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் இல்லாததும் குறை. கலாசாரத்தை சீரழிப்பதற்கு என்றே சில படங்கள் உருவாக்கப்பட்டு வரும் வேளையில் குடும்பக் கதையுடன் ஒரு படத்தை உருவாக்கியதற்காக இயக்குநர் சேரனுக்குப் பாராட்டுகள். ஆனால், நல்லக் கருத்தை சொல்ல வேண்டும் என்ற நினைத்த இயக்குநர் சேரன், அதை சொல்லும் விதத்தில் தோல்வி அடைந்துவிட்டார்.

திருமணம் (சில திருத்தங்களுடன்) திரைப்படத்தை நடுத்திர குடும்பத்தினர் கொண்டாடுவார்கள் என்றாலும், ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களைப் பார்த்து சேரனின் ரசிகர்களானவர்களை இந்தப் படம் ஏமாற்றிவிடும். பழைய புத்துணர்ச்சியை மீட்டெடுத்து இனி வரும் காலங்களில் சிறந்த பல திரைப்படங்களை சேரன் உருவாக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமும் கூட.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com