சிக்கல்கள் தீர்ந்தன: விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் இன்று வெளியாகின!

ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த  அயோக்யா படம் மே 10-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது...
சிக்கல்கள் தீர்ந்தன: விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் இன்று வெளியாகின!

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த படம் டெம்பர்.  வசூல் ரீதியாக பெரும் சாதனை புரிந்த இப்படத்தின் தமிழ் ரீமேக் பதிவாக விஷாலின் அயோக்யா படம் உருவானது. ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் வெங்கட் மோகன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில்  விஷாலுடன் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், பூஜா தேவாரியா, வம்சி கிருஷ்ணா ஆகியோரும்  நடிக்கின்றனர். 

நீண்ட காலத் தயாரிப்பில் இருந்த இப்படம் முதலில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டது. அந்த நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் பட வெளியீடு தள்ளிப் போகும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் படம் வெள்ளிக்கிழமை வெளியாவதாக  விளம்பரம் செய்யப்பட்டது. பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வெளிவந்தன.  ஆனால் திட்டமிட்டவாறு இப்படம் வெளியாகவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கிய காரணமாக,  70 நாள்கள் நடத்தப்பட வேண்டிய படப்பிடிப்பு 100 நாள்கள் வரை இழுத்தடிக்கப்பட்டதால் தனக்கு ஏற்பட்ட ரூ. 3 கோடி அதிகப்படியான செலவை நடிகர் திருப்பித் தரவேண்டும் எனத் தயாரிப்பாளர் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பணத்தை படத்துக்காக ஃபைனான்ஸ் செய்த ஒருவருக்கு நேரடியாகத் தந்து விடவேண்டும் எனவும், அப்படித் திருப்பி தரவில்லையென்றால் படம் வெளியாவதில் சிக்கல் எனவும் விஷாலிடம் தயாரிப்பாளர் மது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னை காரணமாகவே படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த  அயோக்யா படம் மே 10-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது. இப்போது இந்த தேதியிலும் படத்தை வெளியிடமுடியவில்லை. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்றும் பேச்சுவார்த்தை ஏற்பட்டதில் உடன்பாடு ஏற்பட்டதால் அயோக்யா படத்தின் கேடிஎம் வெளியிடப்பட்டன. தயாரிப்பாளருக்கு விஷால் ரூ. 1 கோடி வரை நிதியுதவி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுக்க அயோக்யா படம் இன்று முதல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அதர்வா  நடித்துள்ள 100 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்தப் படமும் இன்று வெளியானது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 70 எம் எம் எண்டர்டெய்ன்மன்ட் பங்குதாரர் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், சமீபத்தில் வெளியான பலூன் திரைப்படத்தை வெளியிடும் உரிமை எங்களது நிறுவனத்திடம் இருந்தது. இந்த உரிமையை எங்களிடம் இருந்து எம்.ஜி.ஆரா. சினிமாஸ் நிறுவனம் வாங்க ரூ.6 கோடியே 30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி எம் ஜி ஆரா நிறுவனம் ரூ.5 கோடியே 18 லட்சத்தை வழங்கிவிட்டு, எஞ்சிய ரூ.1 கோடியே 12 லட்சத்தை பலூன் திரைப்படம் வெளியாகும் முன் வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், பலூன் திரைப்படம் வெளியான பின்னரும் அந்த தொகையை திரும்ப வழங்கவில்லை. இந்த தொகையை நடிகர் அதர்வா நடித்துள்ள 100 திரைப்படத்தைத் தயாரிக்கச் செலவிட்டுள்ளனர். இந்தத்  திரைப்படம்   மே 3-ஆம் தேதி  வெளியாக இருந்த நிலையில், தங்களுக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையைத் திரும்பத் தராமல்  திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  அந்தத் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த தடையை நீக்க கோரி எம் .ஜி. ஆரா நிறுவனத்தின் சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது   70 எம் எம் நிறுவனத்துக்குத் தர வேண்டிய எஞ்சியத் தொகையை ஒரு மாத காலத்துக்குள்  திருப்பிக் கொடுப்பதாக எம்.ஜி. ஆரா. பட நிறுவனத்தின் சார்பில்  உத்தரவாதம் அளிக்கப் பட்டது.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நூறு படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து விஷாலின் அயோக்யா படத்துடன் இணைந்து 100 படமும் இன்று வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com