தேர்தலில் போட்டியிடாமல், வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த நடிகை சன்னி லியோன்!

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தேர்தல் முடிவுகள் குறித்த நேரலை ஒளிபரப்பில் சன்னி லியோன் 7500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக...
தேர்தலில் போட்டியிடாமல், வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த நடிகை சன்னி லியோன்!

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மக்களவையில் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 பேர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். எஞ்சிய 543 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதில் மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. 

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் ஹிந்தி திரைப்பட நடிகரும், பாஜக வேட்பாளருமான சன்னி தியோல். குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் கடந்த 1998, 1999, 2004 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில்  பாஜக சார்பில் பிரபல நடிகர் வினோத் கன்னா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மரணமடைந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. சுனில் ஜாக்கர் வெற்றி பெற்றார். சமீபத்தில், பாஜகவில் இணைந்த சன்னி தியோல், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. சுனில் ஜாக்கருக்கு எதிராகப் போட்டியிட்டார். 

தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிற சூழலில்,  குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில், தற்போதைய நிலவரப்படி 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார் சன்னி தியோல். இதனால் அவருடைய வெற்றி உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தேர்தல் முடிவுகள் குறித்த நேரலை ஒளிபரப்பில் சன்னி லியோன் 7500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக ஒரு குண்டை வீசினார் பிரபல ஊடகவியலாளர் அர்னாப்.

அதாவது, குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி நிலவரம் குறித்து அவசரமாகப் பேசிய அர்னாப், சன்னி தியோல் என்று சொல்வதற்குப் பதிலாக சன்னி லியோன் என்று தவறாகக் கூறிவிட்டார்.

சன்னி லியோன், பிரபல பாலிவுட் நடிகை என்பதால் அர்னாப் செய்த இந்தத் தவறு உடனடியாக அதிகக் கவனம் பெற்றது. சமூகவலைத்தளங்களில் இதன் காணொளியைப் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இதற்கு நடிகை சன்னி லியோனும் எதிர்வினையாற்றிவிட்டார்.  நான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளேன் என்று கிண்டலாக ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com