இதெல்லாம் தவறு: 96 படத்தில் இடம்பெற்ற தன்னுடைய பாடல்கள் குறித்து இளையராஜா!

ஜனங்களை என்னுடைய இசையை விட்டுப் பிரிக்கமுடியாது. அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறீர்கள்...
இதெல்லாம் தவறு: 96 படத்தில் இடம்பெற்ற தன்னுடைய பாடல்கள் குறித்து இளையராஜா!

இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2-ம் தேதி சென்னை, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில்  இசை கொண்டாடும் இசை என்ற இளையராஜாவின் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தப் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கச்சேரியில், கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த இளையராஜாவும், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து  ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. மட்டுமல்லாது, கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள்  பங்கேற்று பாடவுள்ளனர். 

இந்த நிகழ்ச்சி தொடர்பாக, சினிமா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துக்கு இளையராஜா பேட்டியளித்துள்ளார். அவரிடம், சமீபத்தில் வெளிவந்த 96 படத்தில் அப்படக் கதாநாயகி ராஜாவின் பாடல்களைப் பாடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு இளையராஜா அளித்த பதில்:  

அதெல்லாம் மிகவும் தவறான விஷயங்கள். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் பாடல்களையே பயன்படுத்தவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்கு அவர்களால் முடியவில்லையோ, அங்கு புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தரமுடியாததுதான். யோதோன் கி பாரத் என்றொரு ஹிந்திப் படம். இசை - ஆர்.டி. பர்மன். அந்தக் கதையில் ஒரு குடும்பத்தில் 3 சகோதரர்கள் உள்ளார்கள். சிறிய வயதில் சந்தோஷமாக ஒரு பாடலைப் பாடுகிறார்கள். அவர்கள் பிரிந்து போய், எங்கெங்கோ சென்று கஷ்டப்படுகிறார்கள். இறுதிக்கட்டக் காட்சியில் அதே பாடலைப் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் மூலம் குடும்பம் ஒன்றாகிறது. 20 வருடங்களுக்கு முன்பு வேறொரு இசையமைப்பாளர் பயன்படுத்திய பாடலை இசையமைப்பாளர் அந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை. அவர் சொந்தமாக கம்போஸ் செய்தார், 20 வருடத்துக்கு முன்பு இந்தப் பாடலைத்தான் பாடினார்கள், அதை மீண்டும் இப்போது பாடுகிறார்கள் என. அதை இசையென்று சொல்வதா?!

இது தன்னுடைய பலவீனத்தைக் காண்பிக்கிறது. இது ஆண்மையில்லாத்தனமாகத் தானே உள்ளது?! ஒரு கதையில் 1980-ல் உள்ள பாடல் என்றால் 80களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலையே இசையமைக்கவேண்டும். ஏன் இசையமைக்க முடியவில்லை? ஜனங்களை என்னுடைய இசையை விட்டுப் பிரிக்கமுடியாது. அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறீர்கள். அது ஆண்மையில்லாத்தனம் என்று பதில் அளித்துள்ளார். 

முழுப்பேட்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com