பிரபல நடிகர் மீது நடிகையின் பகீர் பாலியல் குற்றச்சாட்டு! ஒரு பெண் 'நோ' என்றால் 'நோ'தான்!

பிரசாந்தின் காதல் கவிதை படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை இஷா கோபிகர்.
இஷா கோபிகர்
இஷா கோபிகர்

பிரசாந்த் நடித்த 'காதல் கவிதை' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நடிகை இஷா கோபிகர். அந்தக் காலகட்டத்தில் மும்பையிலிருந்து நிறைய நடிகைகள் கோலிவுட்டை ஆக்கிரமித்திருந்தனர். பாலிவுட் நடிகையான இஷாவும் தொடர்ந்து விஜய்யுடன் 'நெஞ்சினிலே' என்ற படத்திலும், அரவிந்த்சாமியுடன் 'என் சுவாசக் காற்றே' படத்திலும், விஜயகாந்துடன் நரசிம்மாவிலும் நடித்துள்ளார்.

திருமணம், மகப்பேறு போன்ற காரணங்களால் நீண்ட காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இஷா கோபிகர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அண்மையில் பிங்க்வாலா யூட்யூப் சானலில் அவர் அளித்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது, 'ஒரு ரோல் எனக்கு கிடைக்க இருக்கும் சமயம், வேறு யாராவது அதைத் தட்டிப் பறித்துவிடும் சம்பவங்கள் நடந்துள்ளது. பிரபலங்கள் ஃபோன் செய்து அவர்களின் மகள் அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களுக்காக அந்த வாய்ப்பை வாங்கி விடுவார்கள். இல்லாவிட்டால் காதலிக்கு அல்லது தன் பெண் நண்பருக்காக எனக்கு வந்த வாய்ப்பு பறி போய் இருக்கிறது. நிபோடிஸம், காஸ்டிங் க்ரெளச் இதெல்லாம் அன்று முதல் இன்று வரை திரை உலகில் இருந்து வருகிறது. 

ஒரு தடவை ஒரு தயாரிப்பாளர் என்னிடம் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். ஒரு நடிகரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரை நீங்களே அழைத்து பேசுங்கள், ஏனென்றால் அந்த நடிகரிடம் நீங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றார். சரி ஃபோன் தானே செய்யச் சொல்கிறார் என்று நானும் அந்த நடிகருக்கு கால் செய்தேன். ஆனால் அந்த நடிகர், மிகவும் பிஸியாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் வழக்கமாக தினமும் காலை ஜிம் போகும் பழக்கம் உடையவர். டப்பிங் செல்வதற்கும் மற்றொரு வேலைக்கும் இடையே ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு, அந்நேரத்தில் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு கூறினார். நானும் சரியென்று கூற, அதற்கு யாருடன் வரப் போகிறாய் என்று கேட்டார். கார் டிரைவருடன் என்று சொன்னதும், வேண்டாம் தனியாக வா என்றார். எனக்கு ஒன்றும் 15 அல்லது 16 வயது இல்லை, அவரின் மனதில் என்ன இருந்திருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். நான் ஃப்ரீயாக இல்லை, நாளை அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டேன். 

உடனே அந்த தயாரிப்பாளருக்கு ஃபோன் செய்து என்னுடைய திறமைக்கு மதிப்பிருந்தால் மட்டும் படத்தில் நடிக்கிறேன் என்றேன். ஒரு கதாபாத்திரத்துக்காக இப்படி எல்லாம் தனியாக சந்திக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. என்னை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. இதுதான், இந்தப் பிரச்னைதான் இங்கு நிறைய பேருக்கு நடக்கிறது. ஒரு பெண் வேண்டாம் என்று கூறும்போது, அவர்களால் அதை ஒப்புக் கொள்ள முடிவதில்லை. தற்காலிகமாக, உங்களை ஒதுக்கி வைப்பார்கள். நான் ஒருபோதும் அந்த நடிகருடன் பணி புரியவில்லை.' என்றார் மேலும் அவர் கூறுகையில், 'சில நடிகர்களின் செயலாளர்கள் என்னை தகாத முறையில் தொட்டுள்ளனர். அதன் காரணமாக நான் தற்காப்புக் கலையை கற்கத் தொடங்கினேன்’ என்றார்.

இஷா கோபிகர் குற்றம் சாட்டியுள்ள அந்த நடிகர் யாரென்று நெட்டிசன்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஜிம்முக்கு அதிகாலை செல்லும் பழக்கம் உடைய அந்த உச்ச நட்சத்திரம் இவராக இருக்குமோ என்றும் ஒரு உச்ச நட்சத்திரத்தின் பெயரை குறிப்பிடுகிறார்கள். இது போன்ற வற்புறுத்தல்கள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் சினிமா என்று  மட்டுமல்ல இச்சமூகத்தின் சாபக்கேடும்தான்.

நன்றி - பிங்க்வில்லா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com