பழங்குடி என்று எங்களை இனிமேலும் நிராகரிக்காதீர்கள்!

மலைவாழ் மக்கள், பழங்குடியினர் என்றால் எல்லோருக்குமே முதலில் அவர்களை பற்றிய அபிப்பிராயம் ஒரு  மாதிரியாகத்தான் இருந்து வருகிறது.
leela santhosh
leela santhosh

மலைவாழ் மக்கள், பழங்குடியினர் என்றால் எல்லோருக்குமே முதலில் அவர்களை பற்றிய அபிப்பிராயம் ஒரு  மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. ஏன் அப்படி? ஏனென்றால் நாம் பார்த்தவரை திரைப்படங்கள் எல்லாவற்றிலுமே அவர்களை இன்றளவும் எதற்குமே லாயக்கற்றவர்கள் போன்றுதான்  சித்தரித்து வருகிறார்கள். நம்முடைய கற்பனைகளை தகர்த்து இருந்திருக்கிறார், லீலா சந்தோஷ்.

கேரளாவில், வயநாடு என்றவுடன் நம் கண்முன் , விசாலமான மலையும் இயற்கை சூழ்ந்த வளங்களும், அருவியும் ஓடையும் தான் முதலில் நினைவிற்கு வரும். விடுமுறை நாட்களில், ரிசார்ட் போன்ற இவ்விடத்தில் குடும்பத்துடன் நிறைய பேர் தங்கி வருகிறார்கள். யாருமே அவ்விடத்தைப் பற்றியோ, அங்கு வாழும் பழங்குடியினர் பற்றியோ நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். பழங்குடியினர் என்றால் ஏதோ ஒரு வித பயம் , அதாவது நாகரிகமற்றவர்கள் என்று  உள்ளூர பலருக்கும் உண்டு. நாங்கள் அப்படியல்ல .என்று தகர்த்து எறிந்திருக்கிறார் லீலா சந்தோஷ். அப்படி என்ன அவர் சாத்தித்துவிட்டார் என்று கேட்கிறீர்களா? தென்னிந்தியாவில், கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குனர் என்று முத்திரை பதித்து இருக்கிறார்.

'பனியா' பழங்குடி வகுப்பினைச் சேர்ந்த முப்பத்திரண்டு வயதான  லீலா சந்தோஷ் , தனக்கென இருந்த கனவை நனவாக்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 'பழங்குடியினர் என்றால், திருடர்கள், முரடர்கள், நாகரிகமற்றவர்கள் என்று சித்தரிக்கப் படுவதை உடைத்தெறிய வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது' என்று ஒரு செய்தியில் கூறியிருக்கிறார். அவருடைய கனவை நனவாக்க அவரால் இயக்கப் பட்ட படம்தான், "கரிந்தண்டன்" .

ஒரு நிகழ்ச்சியில் அவரே கூறியது. 'பழங்குடியினருக்கு படிப்பு என்பதே ஒரு ஆடம்பர சமாச்சாரமாகத்தான் தோன்றுகிறது. படிப்பு மட்டுமே உலகம் இல்லை.கல்வியைத் தாண்டி வேறு உலகங்களும் இருக்கின்றன என்பதை என் மக்களுக்கு விவரிக்க முயன்றேன். சரியான தருணத்தில், எழுத்தாளரும் இயக்குனருமான கே .ஜே. பேபி இங்கு வருகை புரிந்தார். ஒரு மாற்றுப் பள்ளிக்கூடத்தைத் துவங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். நான் எதிர்பார்த்த கல்வியைத் தாண்டிய கலை உலகினை  எல்லோருக்கும் அறிமுகப் படுத்தினர்..அவர் பனியா மக்களுடைய வாய்வியலை அடிப்படையாகக் கொண்ட, 'நிழலுகள் நஷ்டப்பெட்டுன்ன கோதார பூமி' என்று ஒரு ஆவணப் படத்தை எடுத்தார். அது அவருக்கு பல விருதுகளைப் பெற்று தந்தது. எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. எங்களையும் விட்டு வைக்கவில்லை. 

எனக்குள் இருந்த கனலால், நானும் சில ஆவணப் படங்கள் எடுத்தேன். எங்கள் தலைவர், எங்கள் பண்பாடு, ஆகியவற்றை வெளி உலகிற்கு வெளிச்சம் பூட்டு காட்ட தீவிரமாக எண்ணம் கொண்டேன். அதற்காக நான் உருவாக்கிய படம்தான் 'கரிந்தண்டன் '

வயநாடு பனியா பழங்குடி இனத்தலைவரின் பெயர்தான் கரிந்தண்டன் என்பது. அவரது காலம் 1700 முதல் 1750 வரை என்று நம்பப்படுகிறது. அவரைப்  பற்றி வரலாறில் எழுதி வைக்கப் படவில்லை. என் பெற்றோர்களும் , பணியா இனத்தவரும் கூறியதைக் கேட்டுத்தான் இப்படத்தினை எடுத்தேன். அவர்தான் எங்கள்  குடியினரை வழி நடத்தினார்.வயநாடு பகுதிக்கு பாதை  உண்டாக்க காரணமாய் இருந்தவர் அவர்தான். ஆனால் அவரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவிய கெட்டவனாகத்தான் பலரும் சித்தரிக்கிறார்கள். அந்த தவறான எண்ணத்தை உடைக்கவே அவரைப்பற்றி படம் எடுத்தேன். 

இப்படத்திற்கான முயற்சிக்கு எனக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. இப்படத்தில் முதலில் கலாபவன் மணிதான் நடிப்பதாக இருந்தார். திடீரென்று அகால மரணம் வந்து அவர் இல்லாமல் போய் விட்டார்.அதனால் தமிழ்ப் படங்களின் மூலம் பிரபலமான , 2016ஆம் ஆண்டு மாநில அரசின் விருது பெற்ற நடிகர் விநாயகன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . 

குழந்தைகளின் ஆளுமையை கலைகளின் மூலம் வளர்த்தெடுப்பதற்காக 'கனவு பள்ளி'யில்படித்த நான், அதிலேயே  தன்னார்வலராக இருந்து வருகிறேன்.. என் கணவர் சந்தோஷ் தற்காப்பு கலையை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.எனக்கு இருக்கும் ஆசை என்னவென்றால், நாங்களும் எல்லோரையும் போல சதையும் ரத்தமும் உள்ள ஜீவன்கள்தான் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டால் போதும் "

ஒரு பெண் ஆனவள் ஒரு துறையில் முன்னேறி பாதம் பதிப்பதே அபூர்வமாக இருக்கும் இந்நாட்களில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் அதுவும் சினிமாத்துறையில் பேசப் படுவது என்பது எவ்வளவு கஷ்டமான செயல். Hats off to Leela Santhosh .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com