1300 நடன கலைஞர்களின் எழுச்சிமிகு நடனம்!

மிகத் திறமை வாய்ந்த நடிகர்களை வைத்து உருவாகியிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம்
panipat film crew
panipat film crew

மிகத் திறமை வாய்ந்த நடிகர்களை வைத்து உருவாகியிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம், திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் அஷுதோஷ் கோவர்கரின் போர்ப்படம் என்றால் அது மிகையில்லை. 

வரலாற்று பின்புலத்தில், பிரம்மாண்டமான செட்டுகளில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘மர்த் மராத்தா’ விரைவில் வெளியாக இருக்கிறது.

‘மர்த் மராத்தா’ எனத் துவங்கும் இப்பாடல், கலை இயக்குனர் நிதின் தேசாயின் பிரம்மாண்டமான வடிவமைப்பில், அழகான இயற்கை சூழலில், மிகப் பெரிய கணபதி சிலையினை பின்னணியாகக் கொண்டு, அபாரமாக நடனமாடும் 1300 நடன கலைஞர்களின் பங்களிப்போடும், புனே நகரின் பாரம்பரிய மற்றும் நாட்டுபுற நடன கலைஞர்களின் நடன பங்களிப்போடும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் 13 நாட்களில் படமாக்கபட்டிருக்கிறது. இந்தப் பாடலில், முக்கிய கதாப்பாத்திரங்களான அர்ஜுன் கபூர், கிரிதி சாணன், மோனிஸ் பாஹ்ல், பத்மினி கோலாபுரே ஆகியோர் நடிக்க, இசை இரட்டையர்கள் அஜய்-அதுல் இசையில் உருவாகியிருக்கிறது.

எழுச்சிமிக்க இந்தப் பாடலை குறித்து அஜய்-அதுல் கூறும் போது, ‘இந்தப் பாடல் மராத்தா பேரரசின் செழுமையைக் கொண்டாடுகிறது. பாரம்பரிய சுவையுடன் அதே சமயம் அனைத்து தரப்பு ரசிகர்களும் வயது வித்தியாசமின்றி, ரசனை பேதமின்றி ரசிக்கும் வகையில் இந்த பாடலை உருவாக்க விரும்பினோம். இதனை மனதில் வைத்தே, ‘மர்த் மராத்தா’ என்ற இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம். அது அனைவரையும் கவரும் என நம்புகிறோம்’.

மேலும், ‘இந்த எழுச்சிமிக்க பாடலை, மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் இயக்குனர் அஷுதோஷ் படமாக்கி இருக்கும் விதம், மறந்துப் போன மராத்தா சாம்ராஜ்யத்தின் பெருமைகளை நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது’என்றார்.

இந்த பாடல் குறித்து இயக்குனர் அஷுதோஷ், ‘மர்த் மராத்தா பாடல் ஒரு எழுச்சிமிக்க பாடல். அது மராத்தா சாம்ராஜ்யத்தின் செழுமையை, அழகாய் எடுத்துரைக்கும் அதே நேரம், வீரமும் எழுச்சியுமிக்க பேஷ்வா மற்றும் மராத்தா சர்தார்களை பற்றியும், இன்னபிற ராணுவ படைப் பிரிவுகளை பற்றியும், இந்துக்கள், முகமதியர்கள் பிற இன-மத மக்களைப் பற்றியும் பேசுகிறது. இசை இரட்டையர்கள் இந்த பாடலை மிகவும் அருமையாக, நேர்த்தியாக பாரம்பரிய ரசனை மாறாமல், அதே சமயம் உலகளாவிய வரவேற்பு கிடைக்கும் வண்ணம் அழகாக படைத்திருக்கிறார்கள். ராஜு கானின் நடன அமைப்பும் மிகவும் பிரம்மாதமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது’என்றார்.

இந்தப் படம் 14 ஜனவரி 1761-ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் யுத்தத்தை, மையக்கருவாக கொண்டு உருவாகியிருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படம்.

அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த வரலாற்றுப்படத்தை சுனிதா கோவர்கர் மற்றும் விஷன் வேர்ல்ட் சார்பாக ரோஹித் ஷேலட்கரும் இணைந்து தயாரிக்க, சஞ்சய் தத், அர்ஜுன் கபூர், கிரிதி சாணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் உலகமெங்கும் வெளியிடவிருக்கிறது. அஷுதோஷ் கோவர்கரின் எண்ணத்தில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com