thegidi
thegidi

சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்த இயக்குனர்கள் எல்லாம் இப்ப எங்கே?

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக கால் பதித்து, ஒன்று அல்லது இரண்டு ஹிட் படங்களைத் தந்துவிட்டு

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக கால் பதித்து, ஒன்று அல்லது இரண்டு ஹிட் படங்களைத் தந்துவிட்டு, பின் ஏதோ ஒரு காரணத்தால் அடுத்தடுத்த படங்கள் இயக்க முடியாமல் போன இயக்குனர்கள் தமிழில் உள்ளனர். அவர்களைப் பற்றி இணையத்தில் தேடியபோது நம்மைப் போல பலரும் அவர்களைத் தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது. யூட்யூப் சானல்கள் முதல் சாமான்ய ரசிகர்கள் வரை கேட்கும் கேள்வி - 'இவ்ளோ நல்ல படம் கொடுத்துட்டு எங்க சார் போனீங்க?’

தெகிடி - ரமேஷ் 

த்ரில்லர் ஜானருக்கு எப்போதுமே தமிழ் திரையுலகில் வரவேற்பு உண்டு. தெகிடி என்ற தரமான படத்தை இயக்கிய ரமேஷ் அடுத்த படம் இன்னும் எடுக்கவில்லை. ஏன் என்ற காரணம் கோலிவுட் வட்டாரத்தில் யாருக்குமே தெரியவில்லை.

லவ் டுடே - பாலசேகரன்

நடிகர் விஜய்யை வைத்து லவ் டுடே என்ற மென்மையான படத்தை எடுத்தவர் பாலசேகரன். அடுத்து அவர் படம் எடுத்தாலும் அது சரியாகப் போகவில்லை. அதன்பின் பாலசேகரன் படம் எதுவும் இயக்கவில்லை.

காலமெல்லாம் காதல் வாழ்க - பாலு

முரளி நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் பரவலான கவனம் பெற்றது. ஆனால் அதன் பின் ஒரு சில படங்களை இயக்கிய பாலசேகரன் தற்போதுவரை எந்தப் படத்தையும் இயக்கவில்லை.

ரட்சகன் - பிரவீண்காந்தி 

ரட்சகன், அதன் பின் ஜோடி, ஸ்டார் போன்ற படங்களை இயக்கிய பிரவீண்காந்தி இப்போது என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. 90-களிலேயே ரட்சகன் என்ற பிரம்மாண்டமான படத்தை இயக்கிய பெருமை பிரவீண்காந்திக்கு இன்றளவும் உண்டு. அதன்பின் பிரசாந்த் நடிப்பில் ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது அவர் கோலிவுட்டில் காணப்படவில்லை.

கண்ணெதிரே தோன்றினாள் - ரவிச்சந்திரன்

கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் அதன்பின் ஏனோ தமிழில் படங்கள் எதுவும் இயக்கவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுக்கக் கூடியவர் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டிசன் - சரவண சுப்பையா

அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் பரபரப்பாக ஓடிய படம்,  இயக்குனர் சரவண சுப்பையா அதற்குப் பிறகு ஏபிஸிடி என்ற படம் எடுத்தார். எதிர்ப்பார்த்த அளவுக்கு படம் ஹிட் அடிக்கவில்லைல். அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் சரவண சுப்பையா.

ஜில்லா - ஆர்.டி.நேசன்

இவரின் முதல் படம் முருகா பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் விஜய்யை வைத்து ஜில்லா படத்தை இயக்கி ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நேசன். ஆனால் அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்கவில்லை.

சுப்ரமணியபுரம் - சசிகுமார்

இயக்குனர் சசிகுமாரின் சுப்ரமணியபுரம் கல்ட் க்ளாஸிக் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம். அதற்குப் பின் அவர் ஈசன் என்ற படத்தை எடுத்தார். இயக்குனராக மிகப் பெரிய வெற்றி பெற்றவர் நடிப்பிலும் கொடி கட்டிப் பறக்கிறார்.  ஆனால் இயக்குனர் சசிகுமாரை எப்போது பார்க்கலாம் என்பதுதான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.

மதயானை கூட்டம் - விக்ரம் சுகுமாரன்

இந்தப் படம் வணிகரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், நல்ல படம் என்று பெயர் வாங்கியது. இயக்குனரின் அடுத்த படம் இன்னும் வெளிவரவில்லை

ராஜா மந்திரி - உஷா

நடுத்தர வயது ஆணின் பிரச்னையை கிராமப் பின்புலத்தில் அழகாக விவரித்த படம் இது. ஓரளவுக்கு நன்றாக ஓடிய படம். ஆனால் அதன் பின் இயக்குனர் இன்னும் படம் எடுக்கவில்லை.

அவள் அப்படித்தான் - ருத்ரையா 

கல்ட் க்ளாசிக் என்று இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் அவள் அப்படித்தான். தமிழ் சினிமாவில் பெண் மையக் கதாபாத்திரங்களை அதிகம் படைத்தவர் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்திரன். அவருக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அந்த இடத்தில் தன் ஒரே படத்தால் நிலைத்தவர் ருத்ரையா. ஆனால் அவர் அடுத்த படம் எடுக்கவில்லை. காலத்தால் அழிக்க முடியாத ஒரு அற்புத படைப்பை விட்டுச் சென்ற ருத்ரையா கடந்த 2016-ம் ஆண்டு மறைந்தார். 

மெளனகுரு - சாந்தகுமார்

மெளனகுரு படம் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம். அதன்பின் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்த நிலையில், மகாமுனி படத்தில் மீண்டும் தமிழ் திரைக்கு வந்தார். இரண்டு படங்களுமே வித்யாசமான கதை மற்றும் மேக்கிங்கினால் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது

ஆரண்ய காண்டம் - தியாகராஜன் குமாரராஜா

இவரது முதல் படம் விமரிசனரீதியாக பெரும் கவனம் பெற்றது. நியோ நாயர் ஜானரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை குமாரராஜாவுக்கு உண்டு. இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் வெற்றி பெற்றது. வித்யாசமான கதை சொல்லும் பாணியைப் பின்பற்றும் அவர, அடுத்து என்ன செய்யவிருக்கிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com