இந்த ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் தமிழ் படங்கள் என்னென்ன?

இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெறுகிறது.
Goa IFFI 2019
Goa IFFI 2019


இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெறுகிறது. 2013-ம் ஆண்டு கோவாவில் 44-வது சர்வதேச விழாவை கோவாவில் நடத்த திட்டமிட்டனர். அதன்பின் தற்போது 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரை கோவா இவ்விழாவிற்கான இடமாகிவிட்டது. 1952-ம் ஆண்டு தொடங்கிய இந்திய சர்வதேச திரைப்பட விழா, முதன் முதலில் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் நடந்துள்ளது.

இந்த ஆண்டு 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

சா்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞா்களை கெளரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகா், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞா்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பிரபல ஹிந்தி நடிகா் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கோவா சா்வதேச திரைப்பட விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சாா்பில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.  50-ஆவது ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் கெளரவ விருதை நடிகா் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகா் ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கெளரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 

நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் ரஜினியும் அமிதாப் பச்சனும் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவான 20-ம் தேதியன்று ரஜினிக்குச் சிறப்பு விருது வழங்கப்படும்.  கோவா திரைப்பட விழாவை அமிதாப் பச்சன் தொடங்கி வைக்கிறார். பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியும் தொடக்க விழாவில் நடைபெறவுள்ளது. 

இந்த ஆண்டு இவ்விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்தியன் பனோரமா வரிசையில் 26 இந்திய மொழி படங்கள், 16 குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.

ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய இரண்டு தமிழ் படங்கள் இந்தியன் பனோரமாவுக்காகத் தேர்வாகி திரையிடப்படவுள்ளன. ஹிந்தியில் கல்லி பாய், சூப்பர் 30, உரி:சர்ஜிகல் ஸ்டரைக், பதாய் ஹோ உள்ளிட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன. 

விழாவில் ஒரு அங்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஃபிலிம் பஜார் என்னும் ஒரு நிகழ்வு நடைபெறும். இந்திய பிராந்திய மொழியில் எடுக்கப்பட்ட படங்களை வெளிநாட்டு திரைப்பட விழாவிற்கு, தயாரிப்பாளர், வினியோகஸ்தர் ஆகிய அனைவருக்கும் ஒரு பாலமாக இருந்து படைப்பாளர்களுக்கு உதவும் ஒரு உந்துதலாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு film Bazaar-ல் மொத்தம் 128 படங்கள் தேர்வாகி இருக்கிறது. அதில் வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் என்ற தமிழ்ப்படம் திரையிடப்படவுள்ளது.

பார்வையற்றவர்களுக்காக திரையில் வசனங்களுக்கு இடையில் வரும் காட்சிகளை விளக்கி கூறும்விதமாக ஒரு சிறப்பு திரைப்படம் திரையிட விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com