பெண்களுக்கு எதிராக மேடையில் பேசினேனா?: விமரிசனங்களுக்கு பாக்யராஜ் பதில்!

பெண்கள் நெருப்பு போல இருந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து ஓர் இடைவெளியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிராக மேடையில்  பேசினேனா?: விமரிசனங்களுக்கு பாக்யராஜ் பதில்!

கருத்துகளை பதிவு செய் என்கிற படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாக்யராஜ் பேசியதாவது: ஒரு பட்டிமன்றத்தில், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று பேசி, விவாதம் செய்தேன். பெண்கள் நீங்கள் இடம் கொடுப்பதால் தான் தவறு நடப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஆண்கள் தவறு செய்தால் அது போகிறபோக்கில் சென்றுவிடும். பெண்கள் தவறு செய்தால் அது பெரிய தப்பாகிவிடும். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திற்கு ஆண்கள் மட்டும் காரணமில்லை. அவர்கள் செய்தது தவறு என்றால், அதற்கான வாய்ப்புகளை பெண்கள் நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். மகளின் பாதுகாப்புக்காகத்தான் ஒரு தந்தை செல்போன் வாங்கித் தருகிறார். ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் தனியாகச் சென்று ரகசியமாக யாருடனோ பேசுவது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றார். 

தன்னுடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு பாக்யராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

என் பேச்சுக்குச் சில விமரிசனங்கள் இருந்தாலும் நிறைய பேர் சரியான கருத்தைச் சொன்னதாக எண்ணியுள்ளார்கள். முன்பு, பெண்கள் தங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். பொது இடங்களில் ஆண்களிடம் பேசத் தயங்கினார்கள். ஆனால் தற்போது ஸ்மார்ட் போன்களின் வரவால் சுதந்தரப் பறவை போல பேசுகிறார்கள். இது குற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

பொள்ளாச்சி விவகாரத்தில் ஆண்கள் செய்தது தவறுதான். ஆனால் பெண்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், அவர்கள் இடத்துக்குச் சென்றிருக்க மாட்டார்கள். சுதந்தரமாகப் பேசி ஏமாற்றப்பட்டுள்ளார்கள். எனவே பெண்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. ஆனால் நான் பெண்களை மட்டும் என்னுடைய பேச்சில் குறை சொன்னதாகச் சொல்லப்பட்டுள்ளது. 

படிப்பு, வேலைகளில் ஆண்களுடன் பெண்களால் போட்டி போட முடியும். கல்பனா சாவ்லா போல விண்வெளியில் பறக்க முடியும். ஆண்கள் போல அவர்களால் எல்லாவற்றையும் செய்துவிடமுடியும். ஆனால் ஆண்கள் தண்ணி, தம் அடிக்கிறான் என்பதற்காக அவர்களும் அதைச் செய்தால் எங்களிடம் மரியாதையை இழக்கிறார்கள். இதை ஆணாதிக்கம் என்கிறார்கள். நாங்கள் பெண்களை அடிமை போல நடத்தவில்லை. அவர்களுக்குத் தேவையான எல்லாச் சுதந்தரங்களையும் அளித்துள்ளோம். சதியை ஒழித்து, கைம்பெண் திருமணங்களுக்கு அனுமதியளித்துள்ளோம். 

மனைவியைத் தவிர அனைத்து பெண்களையும் தாயாக, அத்தையாக, தங்கையாக எண்ண ஆண்களுக்கு நம் கலாசாரம் கற்றுக்கொடுத்துள்ளது. கணவர் என்பவர் தன் மனைவிக்கு இன்னொரு தந்தையாக, நண்பராக இருக்க எதிர்பார்க்கப்படுகிறார். இதுபோன்ற மதிப்புகள் நம் குடும்ப அமைப்பைக் காப்பாற்றுகின்றன. 

பெண்கள் நெருப்பு போல இருந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து ஓர் இடைவெளியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். காலம் மாறிவிட்டது. லைக்குகளுக்காக டிக்டாக்கில் ஆடிப் பாடி விடியோக்களை வெளியிடுகிறார்கள். ஓர் ஆண் அதைப் பாராட்டினால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்தப் புது தொழில்நுட்பங்களிடமிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com