கால அவகாசம் அளிக்க வேண்டும்: இளையராஜாவுக்காக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் பாரதிராஜா கோரிக்கை!

கால அவகாசம் தந்து அதுவரை இளையராஜாவைப் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் சார்பில்... 
கால அவகாசம் அளிக்க வேண்டும்: இளையராஜாவுக்காக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் பாரதிராஜா கோரிக்கை!

இளையராஜாவின் இசை அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ. இங்குதான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறாா். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிா்வாகம்.

இளையராஜா தனது அத்தனை படங்களுக்கும் அங்குதான் இசை அமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இதனை செய்தாா். இப்போது ஸ்டூடியோ வருமானம் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அங்கே அமைந்துள்ள பல ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் வரும் வருமானத்தைப் பெருக்கும் விதமாக, எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்து விட்டு, மாற்று தியேட்டா் கொண்டு வர முடிவு செய்தனா். இதனால் அங்கே இப்போது இளையராஜாவின் இசைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பிரசாத் ஸ்டூடியோவில் இன்று திரையுலகினா் ஒன்று கூடினார்கள். அவர்கள் பிரசாத் ஸ்டூடியோ நிா்வாகத்தினரைச் சந்தித்துப் பேசினார்கள். பிறகு, செய்தியாளர்களிடம் பாரதிராஜா கூறியதாவது:

பிரசாத் ஸ்டூடியோவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜா பணி செய்து வந்தார். இதனால் இரு தரப்புக்கும் மரியாதை ஏற்பட்டது. தற்போது திடீரென இடத்தைக் காலி செய்யுங்கள் என்று இளையராஜாவிடம் சொல்லிவிட்டார்கள். இந்த இடத்தை செண்டிமெண்டாகக் கருதும் ராஜாவுக்கு இதனால் வருத்தம் ஏற்பட்டது. யாருக்கும் பாதகம் இல்லாமல் இந்தப் பிரச்னையைச் சுமுகமாக முடிக்க வேண்டும். கால அவகாசம் தந்து அதுவரை இளையராஜாவைப் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் சார்பில் பிரசாத் ஸ்டூடியோவிடம் அறிக்கை கொடுத்துள்ளோம். அதற்குள் நாங்களே ராஜாவுக்கு வேறு ஏற்பாடு செய்வோம். இன்று பொறுப்பு நிர்வாகிகளிடம் பேசினோம். இன்னொரு முறை அழைத்துப் பேச அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இளையராஜாவுக்கு ஆதரவு அளித்த ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் நன்றி. நாங்கள் இவ்வளவு பேர் பேசியதற்கு இளையராஜா தலைவணங்குவார் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com