பாயாமல் பதுங்கிய தோட்டா!

ஒரு கதையை எப்படி சொல்லலாம் என்பதை கதைசொல்லிதான் தீர்மானிக்க வேண்டும்.
ENPT
ENPT

ஒரு கதையை எப்படி சொல்லலாம் என்பதை கதைசொல்லிதான் தீர்மானிக்க வேண்டும். கெளதம் வாசுதேவ் மேனன் தன் முந்தைய படங்களில் தனக்கென ஒரு தனிவகை கதை சொல்லும் பாணியை உருவாக்கியதுடன், அதீத கவனத்துடன் சுவாரஸ்யம் குறையாமல் சொல்வார். கதாபாத்திரங்களின் உளவியலையும் அவர்கள் வாழ்வியல் சூழ்நிலையையும் மிகக் கச்சிதமாகப் படமாக்கம் செய்வதில் விற்பன்னர். மின்னலே படம் தொடங்கி அச்சம் என்பது மடமையடா வரை அவரது கதாபாத்திரச் சித்தரிப்புக்கள் ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக அவரது பெண் கதாபாத்திரங்கள் சுயமாகச் சிந்திக்கக் கூடியவர்கள், தற்கால நவீனப் பெண்களின் பிரதிபலிப்பாகத் திரையில் உலா வருபவர்கள். அவர்களுடைய பெயர், தோற்றம், உடைகள் என எல்லாமும் அழகுற இருக்கும்.  ஹேமானிகா, லேகா என்ற பெயருடைய அவர்கள் எல்லாம் சிந்தனை செயல் என எல்லாவற்றிலும் தனித்துவமாக இருப்பவர்கள். சூழலுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தாலும் சுதந்திரமாக சிந்திக்க கூடியவர்கள்.  கெளதம் வாசுதேவ் மேனனின் படங்களில் கதைக் களம் என்னவாக இருந்தாலும் சரி, அதில் காதல், காமம், பிரிவு, மரணம் போன்றவை மையப்புள்ளியாக இருக்கும். இப்படி மனித வாழ்வின் முக்கிய அம்சங்களை தம் கதை மாந்தர்கள் மூலம் பேசும் திரைக்கலைஞரான அவர், அண்மைக் காலங்களில் சில சிக்கல்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கியது சோகம். ஒரு படைப்பாளியின் மனநிலை, பொருளாதாரச் சிக்கல்கள், வியாபார பிரச்னைகளில்  பாதிக்கப்பட்டால் அது அவரது படைப்பிலும் எதிரொலிக்கும் என்பதற்கு உதாரணமாக மாறிவிட்டது நேற்று (29 நவம்பர்) திரைக்கு வந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’. குழப்பான மனநிலை படமா

இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க வேண்டிய முக்கிய விஷயம் கதாபாத்திரத் தேர்வு. தனுஷ், மேகா ஆகாஷ் இருவரும் திரையை அழகாக்குகிறார்கள். ஒரு கல்லூரி மாணவரான ரகு (தனுஷ்), நடிகையான லேகாவை (மேகா ஆகாஷ்) சந்தித்து, நட்பாகி, மெள்ள காதலில் விழுகிறார். தன்னை வளர்த்து ஆளாக்கிய குபேரன் (செந்தில் வீராச்சாமி) என்பவருக்காக நடிக்க மனமின்றி ஒரே ஒரு படத்தில் வெளியேற முடிவு செய்திருக்கும் நிலையில்தான் ரகுவை சந்திக்கிறார் லேகா. அதன்பின் தன் காதலிக்காக ரகு எதிர்நோக்கும் பல பிரச்னைகளிலிருந்து தப்பி எப்படி மீள்கிறார் என்பதே கதையின் ஒற்றை சரடு. இதற்கிடையில் இன்னொரு பக்கம் தனுஷின் அண்ணன் திரு (சசி குமார்) பதின் வயதில் வீட்டை விட்டுப் பிரிந்திருப்பார். அவரை மீண்டும் ரகு எப்படி சந்தித்தான், லேகாவுக்கும் திருவுக்கும் என்ன சம்மந்தம் என்பதையெல்லாம் நான் லீனியர் கதை சொல்லல் முறையில் படமாக்கியிருக்கிறார்கள். அருமையான நடிகர்கள், நல்ல கதை, எதிர்பாராத திருப்பங்கள் என ஒரு படத்தை சுவாரஸ்யமாக்கக் கூடிய எல்லா விஷயங்கள் இதில் இருந்தும், ஒரு சில கவனச் சிதறல்களால் இந்தப் படம் தன் நோக்கத்தை எட்டவில்லை என்று தோன்றுகிறது.

கதையில் லாஜிக் மீறல்களைக் கூட மன்னித்துவிடலாம், ஆனால் கதையோட்டத்தில் தொடர் தொய்வும், வாய்ஸ் ஓவரில் அதிகபட்சமான காட்சிகளை சித்திரிப்பதும் ஒரு கட்டத்தில் பார்வையாளனை சோர்வடையச் செய்துவிடுகிறது. குரல் வழி கதை சொல்லும் உத்தி படத்தின் தொடக்கக் காட்சியில் இருந்தால் அதிகமாக ரசிக்கப்படும், அவ்வப்போது வாய்ஸ் ஓவர் வந்தாலும் கூட ரசிக்கலாம். சில படங்களில் இறுதியில் வாய்ஸ் ஓவர் வரும். ஹாலிவுட் திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் உத்தி இது. தமிழில் ஒருசில இயக்குனர்கள் மட்டுமே இந்த உத்தியை மிகச் சிறப்பாக தங்கள் படங்களில் பயன்படுத்தியுள்ளனர்.  இயக்குனர் வினோத், தனது தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இந்த குரல் வழி கதை சொல்லும் உத்தியை மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருப்பார். இந்த வகைமைக்கான ட்ரெண்ட் செட்டராக விளங்கியவர் கெளதம் வாசுதேவ் மேனன் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வாய்ஸ் ஓவரை ஒரு முக்கிய அங்கமாக தன் படங்களில் இடம்பெறச் செய்திருப்பார். ஆனால் எனை நோக்கி பாயும் தோட்டாவைப் பொருத்தவரையில் கதையே மிக மெதுவாக நகரும் தருணத்தில், அதன் ஓட்டத்துக்கு சற்றும் பொருந்தாத வகையில் பல இடங்களில் வாய்ஸ் ஓவர் வருகிறது.  ஒரு இயக்குனரின் பலமாக விளங்கிய ஒரு விஷயமே பலவீனமாக மாறியது அதன் மிகைப் பயன்பாட்டால் என்பதை மறுக்க முடியாது.

மேலும், இந்தப் படத்தில் தனுஷ் ஒரு முறை அல்ல, இரண்டு முறையும் அல்ல மூன்று தடவை மரணத் தருவாயில் இருந்து மீண்டு வருவார். முதல் முறை தோட்டா, அதன் பிறகு கத்தி, மீண்டுமொரு தோட்டா. இத்தனையையும் தாங்கி மீண்டெழுவது சினிமாவில் சூப்பர் ஹீரோக்களுக்கு மட்டுமே சாத்தியம். புறவயமாக தோட்டா மற்றும் கத்தியால் ஆழமான காயம் பட்டிருக்கும் ரகு, அகவயமாக அண்ணன் மற்றும் காதலியால் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்.  எதையும் தாங்கும் இதயமாக அவர் இருப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து ஒருவழியாக சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு வெற்றி வாகை சூடி வருகிறார். சுபம். 

சசிகுமார் மற்றும் சுனைனாவின் கதாபாத்திரங்களில் அழுத்தம் இல்லாவிட்டாலும், கதையை ஒரு கட்டத்தில் நகர்த்துகிறார்கள் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். அச்சம் என்பது மடமையடாவில் கொல்கத்தா போலீஸ் மிரட்டியது போல, இந்தப் படத்தில் அதே பணியை மும்பை போலீஸ் செய்துள்ளார்கள்.  நல்ல போலீஸ் மற்றும் கெட்ட போலீஸுக்கு இடையே ஒரு அரைகுறை யுத்தம் நடக்கிறது. காட்சிக் குழப்பமாக இருந்தாலும் பரவாயில்லை, கதையில் தொய்வு இருப்பது கண்கூடு.

இப்படம் முழுவதும் மரணம் ஒரு தொடர் சங்கிலியைப் போலவே வருகிறது. திருவின் காதலியின் மரணத்தால்தான் அவன் குடும்பத்தை விட்டு பிரிகிறான். பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும் தம்பியை பார்த்த எட்டு நிமிஷத்தில் அவனும் மரணிக்கிறான். உணர்ச்சிமயமாக இருக்க வேண்டிய இக்காட்சிகள் வெறுமனே ஒரு கதையாக திரையில் நிழலாடுகிறது. அண்ணன் தம்பி பாசம், ஆயுத கடத்தல், நடிகை ரசிகன் காதல் என மூன்று திசைகளில் கதை பயணிக்கையில், என்னதான் நான் லீனியர் முறையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் பல இடங்களில் குழப்பமே மிஞ்சியுள்ளது.

இந்தப் படத்தில் மேக்கிங் கை கொடுக்காவிட்டாலும் தொழில்நுட்பக் குழுவினர் தங்கள் பங்கை நிறைவாகச் செய்துள்ளார்கள். பாடல்களும், பின்னணி இசையும் விடுபட்ட சிலவற்றை இட்டு நிரப்புகிறது.  முதல் படத்தில் அருமையாக ஸ்கோர் செய்துள்ளார் இசையமைப்பாளர் தர்புகா சிவா. ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா, எஸ்.ஆர்.கதிர் என மூவர் அணி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். இருளும் ஒளியும், துரத்தலும், பாய்ச்சலுமான அவர்களின் கேமரா கவினுற காட்சிப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய இந்தப் படத்தை மிகத் திறமையாக எடிட் செய்துள்ளார் ஆண்டனி.  இவ்வளவு நேர்மறை விஷயங்கள் இருந்தாலும் பாய மறுத்த தோட்டாவை ரசிகர்கள் மெச்சவே செய்கிறார்கள். காரணம் அவர்கள் நம்பும் ஒரு கலைஞன். யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல், ரசனைமிகுந்த படங்களை இயக்கிக் கொண்டிருந்த கெளதம் வாசுதேவன் மேனன் இந்தப் படத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் முதலில் சொன்னது போல் ஒரு படைப்பாளி தன்னுடைய கிரியேட்டிவ் ஏரியாவுக்குள் மட்டும் செயல்படும் போது அவனால் உச்சத்தை தொட முடியும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் மனம் சிதறும் போது அது வீணடிக்கப்பட்ட தோட்டாவாக மாறிவிடும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com