படிப்பை மட்டும்தான் யாரும் திருட முடியாது! அசுரன் திரை விமரிசனம்​

இந்தப் படத்தின் கதை என்னவென்று ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. ஏன் ஓராயிரம், லட்சம் வரிகளிலும் சொல்லிவிட முடியாது.
Dhanush in Asuran
Dhanush in Asuran

இந்தப் படத்தின் கதை என்னவென்று ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. ஏன் ஓராயிரம், லட்சம் வரிகளிலும் சொல்லிவிட முடியாது. காரணம் நம் கண்களைத் திறந்து பார்த்தால் போதும் இந்தக் கதைதான் இன்னமும் இன்னமும் இந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சக மனிதனை வெறுக்கும் கலாச்சாரத்தை எந்தப் புள்ளியிலிருந்து மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதையும் அதை எந்தப் புள்ளியில் முடித்து வைக்க வேண்டும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக 'அசுரன்' எடுத்துரைத்துள்ளது. இது சராசரி படமல்ல இன்னும் தங்கள் ரத்தத்தில் சாதியெனும் கரையானை ஒட்ட வைத்திருக்கும், எந்தவொரு மனிதனுக்கும் நெற்றிப்பொட்டில் அடிக்கும் பாடம்.

வீடு குடும்பம், என தன் வாழ்க்கையை மூன்று பிள்ளைகளுடனும், அன்பான மனைவியுடனும் வாழ்கிறான் ஒரு எளிய சம்சாரி (தனுஷ்). எதிர்பாராமல் அவனுடைய வாழ்க்கையில் பணத் திமிரும், சாதிவெறியும் நுழைய, அந்த பாதிப்பினால் அவன் குடும்பம் திசைக்கொருவராய் சிதற, அதன்பின் அவன் என்ன ஆனான்? சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டானா அல்லது பகை, பழியை எதிர்த்து மீண்டு வந்தானா என்பதை சொல்லும் கதைதான் அசுரன். எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக வைத்து திரைக்கதையாக்கியுள்ள இயக்குநர் வெற்றிமாறனும், எழுத்தாளர் சுகாவும் நிஜ மனிதர்களை மறக்க முடியாத கதாபாத்திரங்களாக்கி உள்ளனர்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல் மற்றவருக்கு தாங்கவியலாத துயரையும், ஒருவரின் பேராசை இன்னொருவரின் வாழ்வாதாரத்தை சிதைப்பதும் என இங்கு ஆண்டாண்டு காலம் நடந்தேறி வருகிறது. அதைக் கண்டும் காணாமல் நகரும் இன்னொரு கூட்டமும் இங்குதான் உள்ளது. சமூக அநீதி என்கிற அசுரன் மனிதர்களின் குருதியை உறிஞ்சியபடி வெளிப்படையாக மிருகத்தனத்துடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. பின்னொரு காலகட்டத்தில் அது உள்முகமாக மாறியது. வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் புகைந்தபடி இருக்கும் சாதீயம் எனும் அவ்வுணர்வு பலரிடம் இன்னுமிருக்கிறது என்பது உண்மை. அன்பு, சமத்துவம் எனும் மகாசக்தி அதை முற்றிலும் வேரோடு பிடுங்கி எறிய இன்னும் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டுமோ என்ற அலுப்பும், வெறுப்பும்தான் பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற படைப்புகள் உருவாகக் காரணம். திரையில் நாம் காண்பது நம் நினைவுகளின் நிஜமும், நிஜங்களின் நிழல்களும்தான்.  

மாஸ் ஹீரோ என்ற பிம்பத்தை உடைத்து எறிந்து தனுஷ் ஒரு நல்ல நடிகராக பரிணாமம் அடைந்த படம் அசுரன். அவரது நடிப்பாற்றலுக்கு சரியான விருந்தாக படம் நெடுகலும் பல காட்சிகளைச் சொல்லலாம். படத்தின் துவக்கக் காட்சியில் இரவில் தனது வயற்காட்டிற்கு காவலனாக, சாவகாசமாக மகன்களிடம் பேசியபடி போதையிலும். உறக்கச் சடவிற்குள்ளும் இருந்தவர், பன்றி தன் காட்டில் புகுந்துவிட்டது என்று தெரிந்ததும், விழித்தெழுந்து ஈட்டியுடன் அதைத் துரத்தும் காட்சியில் துவங்கிய தனுஷின் துவந்தம் கடைசிக் காட்சியில் நீதிமன்ற வாசலில் மகனிடம் நெகிழ்ச்சியாக பேசுவது வரை அட்டகாசம், யதார்த்த காட்சிகளிலும் சரி, வீரமாக சண்டையிடும் காட்சிகளிலும் சரி கண்களில் கனக் தெறிக்கவிடுகிறார் இந்த நடிப்பு அசுரன். அவருக்கு இணையாக மஞ்சு வாரியரும், பசுபதியும் மிகையற்ற நடிப்பை வழங்கியிருக்கின்றனர். இயக்குநர் பாலாஜி சக்திவேல் முதல் பிரகாஷ் ராஜ் வரை இப்படத்தில் தோன்றிய அத்தனை கதாபாத்திரங்களும் நிறைவான பங்களிப்பு செய்துள்ளனர். குறிப்பாக தனுஷுக்கு இளைய மகனாக நடித்தவரின் (கென் கருணாஸ்) கோபம் திரையைத் தாண்டி நம் மனங்களில் நிலைக்கிறது. தந்தையின் இயலாமையைச் சாடும் போதும் சரி, பழிவாங்கும் எண்ணத்தை மனதிற்குள் ஊறப்போட்டுவிட்டு அமைதியாக எதுவும் தெரியாதவனாக வலம் வரும்போதும் சரி, அசத்தியிருக்கிறார். கென் தமிழ் திரையுலகிற்கு மற்றுமொரு நல்வரவு. 

கடந்த ஆண்டுதான் வடசென்னை வெளியானது. குறுகிய காலத்தில் மீண்டுமொரு சிறந்ததொரு படைப்பை வழங்குவது என்பது நிச்சயம் இமாலய சாதனைதான். நடிகர் தனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி என்பதை நான்காவது முறையாக அசுரன் மூலம் நிரூபித்துள்ளனர் இந்த இணையர். இத்தனை தரமான ஒரு படத்தை சுவாரஸ்யம் குறையாமல் திரையாக்கம் செய்துள்ள வெற்றிமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு படத்தை ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சிவரை உயிரோட்டமாக வைத்திருப்பது அதன் திரைக்கதைதான். கரிசல் பூமியொன்றில் முந்தைய தலைமுறைகளில் (இன்றும் கூட) நடந்த / நடந்து கொண்டிருக்கும் பல உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கதையை, அதன் உண்மைத்தன்மை துளியும் சிதைக்காமல், வலுவான திரைக்கதையாக்கி இருப்பது இப்படத்தின் முதல் வெற்றி. திரைப்படத்துக்காக சில சம்பவங்களைக் கோர்த்து, சதுரங்கக் கட்டத்தில் காய்களை நகர்த்துவது போன்று சுவாரஸ்யமாக அமைத்திருந்ததால், பிடிப்பு சற்றும் தளராமல் ரசிகனை இருக்கையில் கட்டிப்போட்டுவிட்டது. வேல்ராஜின் ஒளிப்பதிவும், ராமரின் படத்தொகுப்பும், ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான இசையும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

காதலிக்கும் பெண்ணுக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கித் தந்துதான் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. தனக்குரியவர்களுக்கு எவ்வித குறையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கும் மனம்தான் முக்கியம். தான் நேசிக்கும் பெண்ணொருத்திக்கு எளிமையான அந்தக் காதலன் தேர்ந்தெடுத்தது ஒரு ஜோடி செருப்பைத்தான். ஆனால் அந்தச் செருப்பு, சுற்றியிருக்கும் சிலரின் வெறுப்பை பெறச்செய்து, இறுதியில் பெருந்தீயாக உருவெடுத்து மரணக் குழியில் தள்ளிவிடும் என்பதை அறியாதவனாக, சுற்றி இயங்கும் ஊரும் மனிதர்களும் பலவிதமான அற்பத்தனங்கள் நிறைந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான் அவன். இறுதியில் வெகு தாமதமாக புரிந்து கொள்ளும் சமயத்தில், அவன் கொடுத்த விலை மிக மிக அதிகம். செருப்பு என்பது இப்படத்தின் ஒரு குறியீடாகவே படத்தின் முக்கியமான கட்டங்களில் வந்து போகிறது. காலணி என்பதில் தொடங்கி காலனி (colony) வரை பிரித்து வைத்த ஒரு சமூகத்தின் ஆன்மாவில் அடிக்கப்பட்ட ஆணிகள்தான் அசுரன் போன்ற திரைப்படங்கள்.

தோழர்கள் கொல்லப்படுவதும், குடிசைகள் தீவைக்கப்படுவதும், எளியவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுவதும், ஆண்டை-அடிமை தொழில்முறை தொடர்வதும் என இந்தச் சமூகத்தில் அநீதிகள் அன்றுமுதல் இன்று வரை தொடர்ந்தே வருகின்றன. பூனைக்கு மணி கட்டிய அந்த முதல் மனிதர்களின் வீரத்தைப் பேசும் கதைகள் இன்னும் எழுதப்பட வேண்டும், அல்லது எழுதப்பட்டவை காட்சிக்குக் கிடைக்க வேண்டும். ஒரு கதை வலுவான ஊடகத்தால் சற்று மிகைப்படுத்திக் காண்பிக்கப்பட்டாலும் கூட, அது மனங்களைக் கலங்கடிக்கச் செய்துவிடும். காதலிலும், வன்முறையிலும் புதையுண்டுப் போய்க் கிடக்கும் திரைத்துறை, இதுபோன்ற உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து படமாக்குவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

கல்வி மற்றும் விழிப்புணர்வால் இன்று பல மாற்றங்கள் வந்துவிட்டாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆதிக்கவாதிகளாகவும் இருந்துவிட்டால், அவர்களிடம் சிக்கிக் கொண்ட மனிதர்களின் நிலை முன்னேற வழியின்றித் திகைத்துவிடும். திகைத்துக் கிடந்தவர்களின் தோள்களைத் தட்டவும், தனக்கான உரிமைக்கு குரல் கொடுக்கவும் எவன் ஒருவன் எழுந்து நிற்கிறானோ அவன்தான் அவர்களுக்கான தேவன். அவன் அசுரனாக இருந்தாலும்கூட.

காட்டுமிராண்டித்தனமான பழக்க வழக்கங்களால் இந்த சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லாமல், சாதியென்றும், பகையென்றும், பழிவாங்குதலுக்காகவும் ஆயிரம் ஆண்டு பின் தங்கிப் போய்விட்டதன் காரணம் தேவையில்லாத அடையாளங்களை உயிரென பிடித்துக் கொண்டு உயிரைவிட்டர்களின் அறியாமைதான். சாதியை காரணம் காட்டி கண்ணுக்குத் தெரியாத பல கொடூர சட்ட திட்டங்களை வகுத்த அந்த முதல் சாதிவெறியன் யாரோ, அவனுடைய கடைசி சந்ததியர் இருக்கும் வரை அந்தப் பழியிலிருந்து எளிதில் மீளமுடியாது.

இந்த நிலமெங்கிலும் சிந்திய குருதியின் சுவடுகள் காய்ந்திருக்கலாம். ஆனால் அது விளைவித்த கொடூரமும், துயரமும், இன்னும் மறையவில்லை என்பதை ரத்தமும் சதையுமாக உணர்வுபூர்வமாக அசுரனில் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் வெற்றிமாறன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com