ஒரே வாரத்தில் ரூ. 200 கோடி வசூலித்து சாதனை செய்துள்ள வார் படம்!

2019-ல், இந்தியாவில் வேகமாக ரூ. 200 கோடி வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது வார் படம்
ஒரே வாரத்தில் ரூ. 200 கோடி வசூலித்து சாதனை செய்துள்ள வார் படம்!

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்- வார். இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த வாரம் வெளியானது. முதல் நாளிலேயே இந்தியா முழுக்க ரூ. 53.35 கோடி வசூலித்தது. அதாவது ஹிந்தியில் ரூ. 51.60 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.75 கோடியும் வசூலாகக் கிடைத்தன. இதன்மூலம் முதல் நாளன்று இந்தியாவில் அதிகமாக வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றது. (பாகுபலி 2 படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 121 கோடி வசூலித்தது. ஹிந்தியில் ரூ. 41 கோடியும் தெலுங்கு + தமிழ் + மலையாளம் ஆகிய மொழிகளில் ரூ. 80 கோடியும் வசூலித்தது.)

இந்நிலையில் 2019-ல், இந்தியாவில் வேகமாக ரூ. 200 கோடி வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது வார் படம். வெளியான நாள் முதல் தினமும் இந்தியா முழுக்க குறைந்தபட்சம் ரூ. 20 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான வார் படம் முதல் 7 நாள்களில் ரூ. 217 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. வார் படம் போலவே சஞ்சு, சுல்தான், டைகர் ஜிந்தா ஹை ஆகிய ஹிந்திப் படங்களும் முதல் ஏழு நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளன. (பாகுபலி 2 ஹிந்திப் படம் முதல் ஆறு நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்து சாதனை செய்தது. ஏழு நாள்களில் ரூ. 247 கோடி வசூலித்தது.)

2019-ல் வெளியான ஹிந்திப் படங்களில் இந்தியாவில் அதிகம் வசூலித்த 3-வது படம் என்கிற நிலையைத் தற்போது அடைந்துள்ளது வார் படம். முதல் இரு இடங்களில் உள்ள கபீர் சிங், உரி ஆகிய படங்களின் வசூலை விரைவில் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ரூ. 200 கோடியைத் தாண்ட கபீர் சிங் படத்துக்கு 13 நாள்களும் உரி படத்துக்கு 28 நாள்களும் தேவைப்பட்டன. ஆனால் 7 நாள்களில் ரூ. 200 கோடி வசூலைத் தொட்டதால் வார் படம் மேலும் பல சாதனைகள் புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வார் படத்தாலும் பாகுபலி 2 ஹிந்திப் பதிப்பு செய்த சாதனையை வீழ்த்த முடியாது எனத் தோன்றுகிறது. பாகுபலி 2 ஹிந்திப் பதிப்பு இந்தியாவில் முதல் 10 நாள்களிலேயே 300 கோடி வசூலை எட்டி மகத்தான சாதனை புரிந்தது. அந்தச் சாதனையை வீழ்த்த இதுவரை எந்த ஹிந்திப் படத்தாலும் முடியவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com