புதிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு: பிகில் பட வெளியீட்டில் இனி எந்தச் சிக்கலும் இல்லை!

பிகில் படத்தின் கதை மீது உரிமை கோரி அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
புதிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு: பிகில் பட வெளியீட்டில் இனி எந்தச் சிக்கலும் இல்லை!

பிகில் படத்தின் கதை மீது உரிமை கோரி அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. நாளை வெளியாகிறது. பிகில் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி என சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் செல்வா தாக்கல் செய்த மனுவில், நடிகர் விஜய் நடித்து இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாடுவது பற்றிய இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது ஆகும். எனவே, இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் இயக்குநர் அட்லீ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இது பதிப்புரிமை தொடர்புடையது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறவும், புதிதாக மீண்டும் வழக்குத் தொடரவும் அனுமதி கோரி, உதவி இயக்குநர் செல்வா சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், இந்தத் திரைப்படம் தொடர்பாக புதிதாக வழக்கு தொடர அனுமதிக்க முடியாது என்ற நிபந்தனையுடன் வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிகில் திரைப்படத்தின் பதிப்புரிமை தொடர்பாக  மனுதாரர் செல்வா, கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார். மேலும், மனுதாரர் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் பிகில் படத்தின் கதை மீது உரிமை கோரி சூளைமேட்டைச் சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது பிரேசில் கதை மற்றும் அட்லியின் பிகில் கதை ஆகிய இரண்டையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கவேண்டும். தனது கதையைப் பயன்படுத்தியதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் நிறுவனம் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதையடுத்து அஜ்மல் மீரான் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிகில் பட வெளியீட்டு தொடர்பான அனைத்து சிக்கல்களும் தீர்ந்துள்ளன. பிகில் படம்  நாளை எவ்வித சிக்கலின்றி வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com