கைதி விறுவிறுப்பான படம்தான் ஆனால் கதை?

இந்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டே படங்கள் தான் வெளியாகின. விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடிப்பில் கைதி. 
கைதி விறுவிறுப்பான படம்தான் ஆனால் கதை?

இந்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டே படங்கள் தான் வெளியாகின. விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடிப்பில் கைதி. 

‘மாநகரம்' படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ‘கைதி'யுடன் களம் இறங்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஒரே இரவு, ஒரு சாலை, அன்றுதான் விடுதலையான கைதி, அவன் சிக்கிக் கொண்ட ஒரு சூழல் இதுதான் கைதி படத்தின் ஒருவரிக் கதை.

தீபாவளி ரேஸில் முதல் ஆளாக இடம் பிடித்த ‘கைதி’ கதாநாயகி இல்லாமல் முழுவதும் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி உள்ளது. இப்படத்தின் டீசஸருக்கு இணையத்தில் ஏக வரவேற்பு. அதே போல் படத்தின் ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களுக்கு ரிகர்சல் கொடுக்கிற மாதிரி, இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு, படத்தின் தொழில்நுட்ப குழுவுக்கு ஒருநாள் ரிகர்சல் நடந்துள்ளது. அதையும் ஒரு படப்பிடிப்பு மாதிரியே நடத்தி ஐந்து நிமிட அளவுக்கான விடியோவாக எடுத்து, அதை எடிட் செய்து, அதற்குப் பின்னணி இசை சேர்த்து முழுமையான விடியோவாக தயார் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு படப்பிடிப்புக்கு தயாராவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை.

இந்த விடியோ மூலமாக கதை எந்த எல்லைக்குள் பயணிக்கப் போகிறது என்ற மனநிலையை படக்குழுவுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். ‘தீரன் அதிகாரம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு என்பதால் கிடைத்த வெளிச்சத்திலேயே அழகான காட்சி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல், சண்டைக் காட்சிகளில் எல்லாக் காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடித்திருக்கிறார் கார்த்தி. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இந்தப் படத்தில் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள காட்சிகளில் அனல் தெறிக்கிறது. பின்னணி இசையில் சாம் சி.எஸ்ஸும் படத்தொகுப்பில் பிலோமின் ராஜும் தங்களுடைய பங்கை நேர்த்தியாக கொண்டு வந்துள்ளார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் தென்மலை பகுதியில் நடந்துள்ளது. கடுமையான குளிரில்தான் படப்பிடிப்பு. குழுவில் எல்லோரும் கம்பளி போர்த்திக் கொண்டுதான் வேலை பார்த்திருக்கிறார்கள். கார்த்திக்கு காட்சிகளுக்கான ஆடை மட்டும்தான். அதனால் குளிரில் பயங்கரமாக சிரமப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் திருடன் போலீஸ் கதை பெரும்பாலும் வெற்றிக்கான கதைக்களன். ஆடு புலி ஆட்டம் போல இது ஒரு சுவாரஸ்யமான கட்டம். இந்தப் படத்துக்கான கட்டங்கள் வெகு கச்சிதமாக போடப்பட்டு இருந்தது. 

இவையெல்லாம் சரி, படம் ஆரம்பித்தலிருந்து இறுதி காட்சி வரை க்ரிப்பாக இருந்ததும் உண்மைதான். படத்தின் மேக்கிங்கில் ஒரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு இறுக்கமாக இருந்ததும் சிறப்பு. ஆனால் கதையைப் பொருத்தவரை இன்னும் சற்று மெனக்கிட்டிருக்கலாம் என்பதுதான் உண்மை. ஹாஃப் வே ஓபனிங்கில் கதை தொடங்குகிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை சீஸ் செய்கிறார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியான பிஜாய் (நரேன்) மற்றும் அவருடன் இணைந்து வேலை செய்யும் நான்கு போலீஸ்காரர்கள். அடையாளம் தெரியாத வில்லன் (ஹரீஷ் உத்தமன்) அவனுடைய தம்பி இருவர்தான் அந்த போதை பொருட்களைக் கடத்தியவர்கள். டிப்ஸ் என்பவனின் தலைமையில் அவர்களுக்கு வேலை செய்யும் ஒரு கூட்டம். தங்களுடைய சரக்கு போலீஸிடம் சிக்கியதால் கோபம் அடைந்த தம்பி (அன்பு) தன்னுடைய டீமிடம் மட்டுமல்லாமல் ஊரில் உள்ள ரெளடிகளை அழைத்து அவர்களிடம் அந்த ஐந்து போலீஸ்காரர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக அறிவிக்கிறான். இந்நிலையில் கமிஷ்னரிடம் கடத்தல் பொருட்களை பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டதாக கூறும் பிஜாயிடம், அவர் அன்று இரவு முக்கியமான போலீஸ் அதிகாரிகளுக்கு பார்டி தருவதாகவும் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் அதன் பிறகு இதற்கொரு முடிவை எடுக்கலாம் என்று கூறவே, கையில் அடிபட்ட நிலையில் அந்த பார்ட்டியில் கலந்து கொள்கிறான் பிஜாய். இந்நிலையில் பிடிபட்ட சரக்கைப் போலீஸ் எங்கே வைத்திருக்கிறார்கள், அது வேண்டுமானால் நான் சொல்வதைச் செய்ய வேண்டும் என்று ஒரு ஃபோன் கால் வரவே, அன்பு அவர் சொல்வதைக் கேட்கலாம் என்று அவர் சொன்ன டீலிங்கிற்கு ஒத்துக் கொள்கிறான். 

இது ஒரு பக்கம் இருக்க, போலீஸ் கையாளாக செயல்படும் ஒருவன் அந்த பார்ட்டியில் அனைவரின் சரக்கிலும் அபாயகரமான ஒரு போதை மருந்தை கலக்கி அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி, அந்த ஐந்து பேரை கடத்திவிட முடிவு செய்கிறான். பார்ட்டி ஆரம்பித்த சில மணி நேரங்களில் ஒவ்வொருவரும் மயங்கிச் சரிய, கமிஷ்னரும் மயங்கிவிடுகிறார். கையில் அடிபட்டதால் மது அருந்தாத பிஜாய் மிகவும் பதற்றமாகிறான். மயக்கம் அடைவதற்கு முன்னால் கமிஷ்னர் 'இங்கு நடந்த விஷயம் வெளியே மீடியாவுக்குத் தெரிந்தால் பிரச்னை என்னுடைய ரிடையர்மெண்ட் பாதிக்கப்படும் எப்படியாவது எல்லாரையும் சத்தமில்லாமல் காப்பாத்துங்க’ என்று சொல்லியபடி மயங்க, மிகப் பெரிய சவால் அவன் முன்னால் உருவாகிறது. அங்கிருந்த ஒரு லாரியில் அனைவரையும் தனக்குத் தெரிந்த ஒரு மருத்துவரிடம் நிலைமையைச் சொல்லி அழைத்து வருவதாகக் கூற, அவரும் தயார் நிலையில் இருப்பதாகச் சொல்கிறார். 

அந்த லாரியை யார் ஓட்டுவது என்றபோது சந்தேகக் கேஸில் ஒரு போலீஸ் பிடித்து வந்த அன்றுதான் சிறையிலிருந்து வெளிவந்த டில்லியை (கார்த்தி) மிரட்டியும் கெஞ்சியும் உதவக் கோருகிறார். முக்கியமான ஒரு விஷயத்துக்காக மறுநாள் காலை ஓரிடத்துக்குச் செல்ல வேண்டிய டில்லி ஏற்கனவே போலீஸ் தன்னைப் பிடித்து வைத்து கைவிலங்கு போட்டு வைத்ததில் மிகவும் கோபமாக இருக்க பிஜாய் கோரிக்கையை மறுக்கிறான். ஆனால் வேறு வழியின்றி அந்தச் சூழலில் சிக்கிக் கொள்கிறான். கதையை இப்படி ஸ்பாய்லர் போல சொன்னாலும் படத்தில் பார்க்கும் போது விறுவிறுப்பாகவே இருக்கும். இந்தக் கதை சில போல் ஃபுல் ஸ்பீடாக பயணிக்கிறது. 

பல லாஜிக் மீறல்கள், தேய்வழக்குகள், போலீஸில் கருப்பு ஆடு இருப்பது போல், அண்டர் கவர் போலீஸ் ஒருவர் வில்லன்களுடன் இருந்து இன்ஃபார்மராக இருப்பது எல்லாம் ஹைதர் அலி காலத்து கதைதான் என்றாலும் படத்தில் பார்க்கும் போது சுவாரஸ்யமாகவே பின்னப்பட்டிருக்கிறது. கதையைத் தாங்கிப் பிடிப்பது கார்த்தியின் நடிப்பு. அலட்சியமாக ஒரு பக்கெட் பிரியாணியை மொத்தமாக ஒரு பெரிய தட்டில் கொட்டி சாப்பிடத் தொடங்குவது முதல், தன்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லும் நரேனைப் பற்றி ‘அவன் நல்ல மனுஷன்தான்’என்று சொல்வது வரை, மகளைப் பற்றி பேசுகையில் நெகிழ்ந்து கரைந்து கண்ணீர் விடுவது வரை அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். ஆனால் தனி ஆளாக வில்லன்களை கொசு மருந்து அடித்து அழிப்பது போல ஜெயன்ட் சைஸ் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது அதிகப்படியான  ஹீரோயிஸம்தான். மொத்த படத்திலும் துப்பாக்கி சத்தம் மிக அதிகம். நெப்போலியன் எனும் கதாபாத்திரத்தில் தோன்றிய ஜார்ஜ் மரியான் படத்தில் எதார்த்தமான நடிப்பை அளித்துள்ளார். படம் விறுவிறுப்பாக இருந்தாலும், ஏதோ ஒன்று குறைவதாகவே தோன்றுவதற்கான காரணம் கதையில் ஆழமின்மை. மேலும் படத்தின் சில முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாமல் அந்தரத்தில் தொங்குவதால், இதன் அடுத்த பாகம் வெளியாகும் என்று தோன்றுகிறது. சாதாரண கதையை திரைக்கதையாலும் படமாக்கம் செய்த விதத்திற்காகவும் இயக்குனரைப் பாராட்டலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com