சினிமா வாழ்க்கை எனக்கு ஏராளமான நட்பையும் பிரியங்களையும் அள்ளித் தந்துள்ளது!

குற்றப் பரம்பரை' படம் பற்றி இப்போது சர்ச்சை செய்திகள்தான் உலவுகின்றன
சினிமா வாழ்க்கை எனக்கு ஏராளமான நட்பையும் பிரியங்களையும் அள்ளித் தந்துள்ளது!


ஒரு போன் செய்தால் 'செளக்கியமா?''.... அந்திக்கு மேல அந்தப் பக்கம் வருவேன் சந்திக்கலாமா.... என்கிற அளவுக்கு எளிமை. எப்படி இருக்கீங்க.. என்று கேட்டால், 'அடுத்த நொடி நிச்சயமில்லை. இந்த நொடி தீவிரமா, ஆழமா, சந்தோஷமா இருக்கிறேன்' என வரவேற்கிறார் நடிகர் வேல ராமமூர்த்தி.

ஒரு நடிகனுக்கு எப்போதாவதுதான் நல்லப் படம் அமையும் என்பது சினிமா விதி....இருப்பதையெல்லாம் நல்ல சினிமா என்று சொல்லுகிற அளவுக்கு கொண்டு வந்து விடுகிறீர்கள் 

இயக்குநர்கள்தான் காரணம். அவர்கள் நினைப்பதை என் மூலம் கொண்டு வருகிறார்கள். அவ்வளவுதான். இதில் என் பங்கு என்பது குறைவுதான். ஆனாலும் இப்படி வந்து விழுகிற வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. சினிமாவை நான் ஏற்றுக் கொண்டு வந்தவனில்லை. அதுவாகவே நடந்தது. ராணுவத்தில் வேலை. பின்னர் அஞ்சல் துறையில் வேலை எனப் பெரும் அனுபவங்களைக் கொண்டது என் வாழ்க்கை. எல்லாம் போதும் என அஞ்சல் துறையில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கி கொண்டு அமர்ந்த நேரம்தான், "மதயானை கூட்டம்' படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமார் வந்தார். 

ஒரு கதை சொன்னார். பிடித்திருந்தது. ஆனால்,  என்னால் நடிக்க முடியாது என்றேன். இருந்தும், விடாப்பிடியாக என்னைச் சினிமாவுக்குள் அழைத்து வந்தார். முதல் படமே தேசிய விருது பரிந்துரை வரையிலும் போய் வந்ததில் பெரும் நம்பிக்கை. அதன் பின் தொடர்ச்சியாகக் 'கிடாரி' மாதிரியான நல்ல படங்கள் அமைந்து வேறு ஒரு தளத்துக்கு என்னை கொண்டுச் சென்றது. தொடர்ச்சியாக நல்லப் படங்களில் இருப்பது எனக்கே ஆச்சரியம். ரசிகர்களின் நம்பிக்கை, இயக்குநர்களின் பொறுப்பு எல்லாவற்றையும் இன்னும் உணர வேண்டும் எனத் தோன்றுகிறது.  

பொதுவாகச் சினிமாவில் ஹிட் ஆனவர்கள், அடுத்தடுத்து பயணமாவார்கள்... நீங்கள் மட்டும் ஒரு சில கதாபாத்திரங்களில் விடாப்பிடியாக இருப்பது போல் தெரிகிறது

எல்லாமே இலக்குகள்தான். சினிமாவில் நான் மட்டுமே தனித்து இயங்க முடியாது. இயக்குநர்கள்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. என்னைத் தாழ்த்துவதும், உயர்த்திப் பிடிப்பதும் அவர்களின் கைகளில்தான் உள்ளது. நான் என்ன செய்ய முடியும்.  புதிய நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் அடைந்திருக்கிறேன். எழுத்து, சினிமா, சமூகம் எல்லாவற்றுக்குமான பயணங்களில் உங்களை அடைவதே என் நிரந்தர சந்தோஷம்.

தெளிந்த ஊற்றைப் போல இப்போது இருக்கிறது மனம். ஒரு எழுத்தோ, சினிமாவோ வாசிக்கிறவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் என்பது நான் கண்டடைந்த உண்மை.  சில கதாபாத்திரங்கள் மூலம் நீங்கள் என்னையே எனக்குக் கற்றுத்தந்துவிட்டீர்கள். திருப்பித் தந்துவிட்டீர்கள். "உன்னில் இருந்தே தொடங்குகிறது உலகம்' இல்லையா..? அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த உலகத்தை அடைந்திருக்கிறேன் நான். 

எனக்கான உலகத்தை நீங்களும் உங்களுக்கான உலகத்தை நானும், ஏதோ ஓர் புள்ளியில் வந்தடைந்துவிடுவோம்.  சினிமா வாழ்க்கை எனக்கு ஏராளமான நட்பையும் பிரியங்களையும் அள்ளித் தந்திருக்கிறது. எல்லாத் திசைகளில் இருந்தும் கடல் கடந்தும் எத்தனை எத்தனை முகங்கள்... குரல்கள்... சிநேகங்கள். ஒவ்வொரு படத்திலும்  தங்களை ஏதோ ஒரு விதத்தில் என் நடிப்பு மீட்டெடுத்ததாக யார் யாரோ சொல்லும்போதுதான், நான் அர்த்தப்பட்டேன். எவ்வளவோ கொண்டாட்டங்களும், பொழுதுபோக்குகளும், வேலைகளும் இறைந்துகிடக்கும்போது... இந்த எளிய மகன் உங்களைப் பாதித்தது சந்தோஷம். சக மனிதர்களுக்கான கவனிப்பை, ஈரத்தை  உங்களுக்குள் நான் கொஞ்சம் விதைத்திருந்தால், அது போதும்.  இந்த நொடி வாழ்க்கை... அதைச் சரியாக வாழ்ந்திட வேண்டும். அவ்வளவுதான். 

ரகுவரன், நாசர்,  பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லா கேரக்டரிலும் நடிக்கிற ஆர்ட்டிஸ்ட் அடுத்து வரவே இல்லை, என்கிற ஒரு ஆதங்கம் இங்கே இருக்கிறது...

நிறையப் பேர் அந்த இடத்தை நோக்கி வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதிதாக உள்ளே வருகிறார்கள். சில உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமா இருக்கும். அதற்கு நடிகர்கள் தயாராக இருக்க வேண்டும். எனக்கும் அந்த இடம்தான் ஆசை. என் முகம் எல்லோருக்கும் தெரிகிறது. என்னை நம்பினால், இவர் கதைக்குத் துணையாக இருப்பார்  என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். இதுதான் அந்த இடத்துக்கு என்னைக் கொண்டு செல்லும் விஷயம். 

நடிகன் என்பதை விட, இந்த இடத்தில் இருக்கும் நடிகன் என்ற பெயரே முக்கியமானது. சிலர் பார்த்த முகமாக இருக்கே என்று யோசிக்கிறார்கள். இதனால நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால "நல்ல கேரக்டர் என்றால் நான் நடித்து தருகிறேன்' என்று நான் கத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது.   நான் மட்டும் அல்ல, எந்த ஒரு நடிகனின் எதிர்காலமும் உத்தரவாதமாக இருக்க வேண்டும் என்றால், அது யார் கையில் இருக்கிறது தெரியுமா? எப்படியாவது வெற்றிப்படம் தர வேண்டும் என்ற வெறியோடு கதை தயார் செய்கிற உதவி இயக்குநர், ஒரு கேரக்டரை யோசிக்கும் போது,  வேல ராமமூர்த்தி மாதிரி  என நினைத்து கதை செய்கிறார்.... அவர் கையில் இருக்கிறது. 

அப்படி யாராவது யோசிக்கிற வரைக்கும் நடிகனாக எனக்கு எந்தக் குறையும் வராது. உதவி இயக்குநர்கள் சிந்தனையில் நான் இல்லாமப் போய் விட்டால், இன்னொருத்தர் அந்த இடத்துக்கு வந்து விட்டால், என் பங்களிப்பு போதவில்லை என யாரும் சொல்லாமலேயே எனக்குப் புரிந்து விடும். சம்பளம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அந்த மாதிரி ஒரு கதை கிடைத்தால் போதும். முழு மனதோடு  போய் நிற்பேன்.  அந்த மனநிலையை என்றைக்கும் நான் தொலைக்க மாட்டேன்.

"குற்றப் பரம்பரை' படம் பற்றி இப்போது சர்ச்சை செய்திகள்தான் உலவுகின்றன...

பாரதிராஜா, பாலா எல்லோருமே வேண்டப்பட்டவர்கள்தான். ஆனால், என் கதை கிடப்பில் கிடக்கும் வரை எனக்குக் கவலைதான். ஏதாவது ஒரு சினிமாவில் காட்சிகளின் சாயல் வரும் போது, வருத்தமாக இருக்கும். அதனால் விரைவில் நல்ல செய்தி வரும். 

சினிமா கனவோடு இருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு உங்க அறிவுரை என்ன...?

அறிவுரை சொல்கிற  அளவுக்கு நான் இன்னும் சினிமா கற்றுக் கொள்ளவில்லை.  ஆனால், ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளலாம். "தூங்கும்போது வருவது கனவு இல்லை. உன்னைத் தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு' என்று அப்துல் கலாம் சொல்லியிருக்காரே... சினிமா வெறும் ஆசையாகவோ, கனவாகவோ மட்டும் இருந்தால் போதாது.  இது அறிவுரை இல்லை. என் அனுபவம். 

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com