Enable Javscript for better performance
Bigg Boss 3 Madhumitha interview in detail|இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை! பிக் பாஸ் மதுமிதா பேட்டி!- Dinamani

சுடச்சுட

  

  நான் தமிழ் பொண்ணு இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை! பிக் பாஸ் மதுமிதா பேட்டி!

  By சக்திவேல்  |   Published on : 14th September 2019 02:22 PM  |   அ+அ அ-   |    |  

  madhumitha-suicide-attempt

   

  பிக் பாஸ் சீசன் 3 போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் மதுமிதா போலீஸில் புகார் அளித்தார். பிக் பாஸ் நிர்வாகமும் அவர் மீது அதற்கு முன் ஒரு புகாரை அளித்திருந்தது. 

  'இந்த பேட்டிக்கு முன்னால் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்பறேன். பிக் பாஸ் வீட்டைப் பொருத்த வரைக்கும் நடக்காத எந்த ஒரு விஷயத்தை நான் மட்டும் இல்லை, பங்கேற்பாளர்கள் யாரும் சித்திரிக்க முடியாது. ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுட்டுத்தான் அங்க இருக்க நாங்க ஒப்புக் கொண்டோம்’ என்றார் மதுமிதா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று, வெளியே வந்த பின் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலின் ஒரு பகுதி:

  உங்களுக்கும் விஜய் டிவிக்கும் உள்ள பிரச்னை தீர்ந்துவிட்டதா?

  பிரச்னைன்னு சில மீடியா மிகைப்படுத்தி போட்டுட்டாங்க. உள்ள என்ன நடந்ததுன்னு விளக்கம் தரக் கூடிய ஒரு இண்டர்வ்யூவை வெளியே வந்து இத்தனை நாட்களாகவும் ஏன் தர விடலைங்கறதுதான் என்னுடைய புகார். மத்தபடி எனக்கு வர வேண்டிய அமவுண்ட்டை எல்லாம் செட்டில் பண்ணிட்டாங்க. வீட்டுக்கு வந்த பின், பேமெண்ட் தந்த அன்னிக்கு ஈவ்னிங் இண்டர்வ்யூ தரலாம் சானல் தரப்பில சொல்லியிருந்தாங்க. ஆனால் அப்படி நடக்கலை. அதான் போலீஸ் மூலமா அதை செஞ்சேன். நானும் சரி காவல் நிலையிலிருந்தும் சரி அவங்களை தொடர்பு கொண்ட போது, விஜய் டிவியை சேர்ந்த லீகல் பெர்சன் பிரசாத் என்பவர் போனை எடுக்கலை. பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு எந்த பிரச்னையும் இல்லாம வெளியில வந்தவங்களுக்கே மன அழுத்தம் அதிகமா இருக்கும். நார்மல் ஆக சில நாட்கள் ஆகும். எனக்கு இவ்வளவு பெரிய பிரச்னை நடந்திருக்கு. எனக்கு எப்படி இருந்திருக்கும்? மக்கள்கிட்ட அங்க என்ன நடந்ததுன்னு பகிர்ந்துக்கணும்னு நான் நினைச்சேன். ஆனால் வீட்டுக்குள்ளயே எத்தனை நாள் முடங்கியிருப்பேன்? அப்பறம் சானல் தரப்பிலேர்ந்து சொன்னாங்க, இதைப் பத்தி நீங்க எப்பவும் எதுவும் பேசக் கூடாதுன்னு, அதான் எனக்கு கோபம் வந்துச்சு. 

  ஜாலியா மத்தவங்களை சந்தோஷப்படுத்தும் நீங்கள் ஏன் இப்படி சிக்கினீர்கள்? 

  எல்லா மனிதர்களுக்கும் நகைச்சுவை உணர்வு இருக்கும். ஆனால் அது நாம இருக்கும் இடமும், அங்கு நடக்கும் விஷயங்களையும் பொருத்ததுதான் அது செயல்படும். என்னைப் பொருத்தவரைக்கும் என்னைச் சுத்தி தப்பா என்ன நடந்தாலும் கேள்வி கேட்பேன். மத்தவங்க நம்மகிட்ட நடந்துக்கற விதத்தைப் பொருத்து என் உணர்வுகள் மாறும். எல்லா நேரத்துல சிரிச்சிட்டு இருந்தா பைத்தியம்தான். என்னை சக போட்டியாளர்கள் துன்புறுத்தி இருக்காங்க. அங்க இருந்த எட்டு பேரும் சேர்ந்து ஒரு கேங் ராகிங் மாதிரி செஞ்சிருக்காங்க. அவங்க முகத்தை நான் பார்க்க விரும்பவில்லை. என் மனதை பாதித்த விஷயம் அது. எவிக்ட் ஆக சமயத்துல, அடிபட்ட அந்த நொடியில் கூட என்னை அறியாமல் நான் சிரிச்சிருக்கேன்.

  நீங்க எவிக்ட் ஆன அன்னிக்கு என்னதான் நடந்தது?

  அந்த எபிசோடைப் பார்திருப்பீங்கன்னு நினைக்கறேன். அந்தப் போட்டியில் ஒரு விஷயம் நடந்தது. வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது போல் நீங்க வைக்கனும்ங்கறதுதான் அந்த ஹலோ மெசேஜ் டாஸ்க். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகறதுக்கு முன்னாடியும் சரி, அப்பறமும் சரி தினமும் மழைக்காக வேண்டுகிறேன். அந்த உணர்வுலதான் டாஸ்க்குக்காக ஒரு வரி கவிதை எழுதினேன். அதுல எந்த இடத்திலும் அரசியல் இல்லை. ஆனால் அதை அரசியல் ஆக்கிவிட்டாங்க அந்த எட்டு பேரும். அப்பறம் கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரம் விவாதம்...நான் சானல் முடிவு பண்ணட்டும்னு என்றேன். கஸ்தூரி மேடமும் சேரன் சார் மட்டும்தான் என் மீது தப்பு இல்லை என்றார்கள். அவளுக்கு கருத்து சுதந்திரம் உண்டுன்னு சொன்னாங்க கஸ்தூரி. அதுக்கப்பறம் சானல்லேர்ந்து ஒரு கடிதம் வந்தது. அரசியல் பேசாதீர்கள் அது டெலிகாஸ்ட் பண்ணப் பட மாட்டாதுன்னு அதுல இருந்தது. அது வரைக்கும் கேலி கிண்டல் பண்ணிட்டிருந்த அந்த எட்டு பேருக்கும் அல்வா சாப்பிட்டது போல ஆகிடுச்சுது அந்த ந்யூஸ். என் மனநிலை முழுவதும் பாதிக்கப்பட்டது. உடனே என் கையை நான் கட் பண்ணிட்டேன். அப்பறம் அந்த எட்டு பேர்கிட்டயும் பேசினேன். என்ன பேசினேன்னு எனக்கு சரியா நினைவு இல்லை. கையிலிருந்து ரத்தம் கொட்டுது. அதில சில பேர் அப்போதும் கிண்டல் செய்தார்கள். சீன் போடறீங்கன்னு சொன்னாங்க. ஒரு பெண் என்றும் பாராமல் எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ செஞ்சாங்க. 

  எனக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்கிற ஆர்வத்திலதான் அப்படி ஒரு வரி எழுதினேனே தவிர, வேற எந்த உள்நோக்கமும் இல்லை. இதை மக்களுக்குத் தெளிவா சொல்லணும்னு நான் நினைக்கிறேன். ஒரு 8 பேர் சேர்ந்து கேங் ராகிங் செய்யறாங்க, அதை ஏன் செய்யறாங்க, எதுக்கு செய்கிறாங்கன்னு புரிஞ்சுக்கங்க. என் மாநிலத்தில் நடக்கும் விஷயத்தைச் சொல்லும் போது நீங்க என்னையே அவமானப்படுத்தறீங்க. நீங்க எல்லாரும் இந்த ஊர்லதானே இருக்கீங்க. இங்க வந்து பொழைச்சிட்டு அதைப் பத்தி உணர்வு இல்லாம இருக்கறது சரியா? சரி இதை ஆதரிக்க வேண்டாம். ஆனா அதுக்காக அதைப் பத்தி பேசறவங்களை கீழ்த்தரமாக நடத்தாம இருந்திருக்கலாம் இல்லையா? அந்த உணர்வுக்காக வெளிப்பட்டதுதான் அந்த நிகழ்வு.

  நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்கிறோம். இந்த ஷோவை இருப்பவர்கள் இளைஞர்கள்தான். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் என்ன செய்திருக்கணும்?  முந்தின நாள் நடந்த விஷயத்தைப் பத்தின எந்தவித குற்றவுணர்வும் இல்லை அவங்களுக்கு. பாதிக்கப்பட்ட பெண் நிற்கிறேன். யாரோட முகத்திலும் குற்றவுணர்வு இல்லை. மன்னிப்பு கேட்கும் பண்பும் இல்லை. இந்த மாதிரி இளைஞர்கள் சமூகத்துக்கும் சரி குடும்பத்துக்கும் சரி என்ன செய்யப் போறாங்க? அவங்க ஜாலியா இருக்காங்க. சமுதாயத்தின் மீது அக்கறையோ, குடும்பத்தின் மீதும் அக்கறை இல்லைன்னு தெளிவா தெரிஞ்சிடுச்சு.

  இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டும் இல்லை. சமுதாய சிந்தனை சமுதாய உணர்வு இருக்கும் நிகழ்ச்சி என்றார்கள். ஆனால் ஒருவரிடமும் அந்த உணர்வை நான் பார்க்கவில்லை. என்னுடைய உணர்வும், சேரன் அவர்களும் தவிர யாரும் அதைப் பற்றி பேசினது கூட இல்லை. அவங்க மேல புகார் கொடுப்பீங்களான்னு கேட்டிங்கன்னா மாட்டேன்னு தான் சொல்வேன். மக்களே தண்டனை கொடுப்பார்கள். சானல் மீதும் எனக்கு கோபம் இல்லை. அவர்கள் இண்டர்வ்யூ டிலே பண்ணியதால் வருத்தம் இருந்தது. அதன் பின் அவர்கள் இந்த இண்டர்வ்யூவிற்கு ஏற்பாடு செய்தார்கள்.

  கஸ்தூரி கொடுத்த இண்டர்வ்யூ?

  கையில் ரத்தம் வந்த போது, எனக்காக அந்த ரத்தத்தைப் பார்த்து அவங்க அழுதாங்க. மனிதாபிமானத்துக்கும் மேலாக அவர்கள் இருந்தார்கள். கஸ்தூரி மேடமிற்கும் சேரன் சாருக்கும் நன்றி சொல்றேன்.

  kattana sevai