ரஜினி நடித்த அண்ணாமலை படத்தை இயக்காதது ஏன்?: காரணத்தை வெளிப்படுத்திய இயக்குநர் வஸந்த்!

ஏன் சார் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த அண்ணாமலை படத்தை இயக்கும் முடிவில் இருந்து பின்வாங்கினீர்கள்...
ரஜினி நடித்த அண்ணாமலை படத்தை இயக்காதது ஏன்?: காரணத்தை வெளிப்படுத்திய இயக்குநர் வஸந்த்!

ரஜினி, குஷ்பு நடிப்பில் தேவா இசையமைப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி 1992-ல் வெளியான படம் - அண்ணாமலை. இந்தப் படத்தின் வெற்றி ரஜினியின் நட்சத்திர அந்தஸ்த்தை மேலும் பெரிதாக்கியது. எனினும் இந்தப் படத்தை முதலில் இயக்கவிருந்தவர் ஆசை படத்தை இயக்கிய வஸந்த். கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த படம் என்பதால் கே.பி.யின் சீடரான வஸந்துக்கே அந்த வாய்ப்பு முதலில் வந்தது. ஆனால் படப்பிடிப்புக்குச் செல்வதற்குச் சில நாள்களுக்கு முன்பு அப்படத்தை இயக்குவதிலிருந்து விலகினார் வஸந்த். 

இந்நிலையில் வஸந்த் சமீபத்தில் இயக்கி, பல்வேறு சர்வதேசப் படவிழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளை வாங்கி வரும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் குறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் வசந்த பாலன். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஃபுகோகா சர்வதேசத் திரைப்பட விழாவில் இயக்குநர் வஸந்த் இயக்கிய சிவரஞ்சனியும் சில பெண்களும் என்ற திரைப்படம் சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது. தொடர்ந்து உலகின் உயரிய திரைப்பட விழாக்களுக்கு உலா சென்று வருகிறது. வாழ்த்துகள் வஸந்த் சார். விருதுகள் குவியட்டும்.

நான் பள்ளிச் சிறுவனாக இருக்கும்போது கேளடி கண்மணி திரைப்படத்தை உறைந்து போய் பார்த்தேன். அந்த வயதில் என்னை ஏதோ செய்தது. கதாநாயகப் படங்கள் பார்த்து பழகிற மனதை உடைத்தது. ஆசை திரைப்படத்தின் பாடல்கள் என் பதின் பருவத்தில் வந்த திரைப்படம். கொஞ்ச நாள் பொறு தலைவா பாடலை என்னையறியாமல் நான் உச்சரித்து கொண்டே இருப்பேன். ரிதம் படத்தின் கதையும் பாடல்களும் இன்னும் ஒலித்துகொண்டேயிருக்கும். பாடல்களை இசையமைப்பாளர்களிடமிருந்து கேட்டுப் பெறுவதிலும் , அதைப் படமாக்குவதிலும் வஸந்த் சார் ஒரு நிபுணன்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நான் திடீரென்று வஸந்த் சாருக்கு போன் செய்து...

"ஏன் சார் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த அண்ணாமலை படத்தை இயக்கும் முடிவில் இருந்து பின்வாங்கினீர்கள்? " என்றேன். "அதுவும் படத்தின் செட் உட்பட அனைத்தும் முடிவாகி படப்பிடிப்பு துவங்கும் இருக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு ஏன் விலகினீர்கள்?" என்றேன்.

தொலைப்பேசியில் பத்து நிமிடம் அமைதி காத்தார். வெகுநேர தாமதத்திற்குப் பிறகு "இன்னைக்கு இருக்கிற வஸந்த் உனக்கு பிடிச்சிருக்குது தானே" என்று கேட்டார். "ஆமா" என்றேன்.

"அதுக்கு தான்" என்று தொலைப்பேசி இணைப்பை துண்டித்துக் கொண்டார்.

ஒரு மனிதன் தன்னை துண்டித்துக் கொள்வதற்கும் விலகிக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

பணத்தைத் தாண்டி மனம் இங்கே முக்கியமாகப் படுகிறது. காலம் எல்லா காயங்களையும் அழித்து விட்டு நமக்கு புதிய ஒரு விடையை காண்பிக்கும். இந்த விடை முன்பே தெரிந்து இருந்தால் அந்த விடையைத் தேர்வு செய்திருக்க மாட்டோமே என்று மனம் கிடந்து அலறும்.

என்ன செய்ய வாழ்க்கை எதிர்பாராமல் தானே நடக்கிறது. அதில் தானே சுகம், திருப்பம், அழுகை, கண்ணீர், மகிழ்ச்சி,கொண்டாட்டம் எல்லாமே என்று எழுதியுள்ளார்.

வஸந்த் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில் பார்வதி, காளீஸ்வரி, லக்‌ஷ்மி ப்ரியா, கருணாகரன் போன்றோர் நடித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com