இவ்வளவும் பேசிவிட்டு இறுதிச்சுற்றில் எப்படிப் பங்கேற்பது?: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் கவின்!

இவ்வளவும் பேசிவிட்டு கூச்சமே இல்லாமல் இறுதிச்சுற்று மேடையில் நிற்கமுடியாது. என் எண்ணங்களுக்கு நான் நேர்மையாக இருக்கவேண்டும்...
இவ்வளவும் பேசிவிட்டு இறுதிச்சுற்றில் எப்படிப் பங்கேற்பது?: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் கவின்!

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து எதிர்பாராதவிதத்தில் நடிகர் கவின் வெளியேறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறினார் நடிகர் கவின். இந்தப் போட்டியில் ஒருவர் மட்டும்தான் வெற்றி பெற்று ரூ. 50 லட்சத்தைப் பெறமுடியும். இதனிடையே ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு இந்த வீட்டை விட்டு இன்றே வெளியே செல்லும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது என்று போட்டியாளர்களிடம் சில நாள்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தான் வெளியேறுவதாக அறிவித்தார் கவின். இதைக் கண்டு அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தார்கள்.

ரூ.5 லட்சம் பணத்துக்காக அவர் வெளியேறவில்லை, இந்த முடிவை எடுக்கவில்லை என்பது அவருடைய பிரியாவிடைப் பேச்சில் இருந்து தெரிந்தது. லாஸ்லியா, சாண்டி ஆகிய இருவரும் கண்ணீருடன், இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தபிறகும் தன் முடிவில் இருந்து கவின் மாறவில்லை. 

இப்படியொரு வாய்ப்பு வழங்கப்படும்போது வெளியேற வேண்டும் என்று முன்பே முடிவு செய்துவிட்டேன். நானும் சாண்டி அண்ணனும் நன்றாகப் பேசி பல நாள்களாகிவிட்டன. அப்போதிருந்து இதை முடிவு செய்துவிட்டேன். 50 நாள்களுக்குப் பிறகு தனித்தனியாக விளையாடுவது எப்படிச் சரியாக இருக்கும் என்று கமல் சாரிடம் கேட்கிறேன். பிறகு கதவைத் திறந்து வையுங்கள், நான் வெளியேறுகிறேன் என்று என்னை நிரூபிக்கிறேன். இவ்வளவும் பேசிவிட்டு கூச்சமே இல்லாமல் இறுதிச்சுற்று மேடையில் நிற்கமுடியாது. என் எண்ணங்களுக்கு நான் நேர்மையாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன் என்று தன் நண்பர்களிடம் விளக்கம் அளித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com