தொழிலாளர்களுக்குப் பெரிய அளவில் உதவும் பாலிவுட், தெலுங்கு நடிகர்கள்: கோலிவுட் பிரபலங்களுக்கு செல்வமணி மீண்டும் கோரிக்கை

வேலையின்றி அவதிப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவும்படி பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்...
தொழிலாளர்களுக்குப் பெரிய அளவில் உதவும் பாலிவுட், தெலுங்கு நடிகர்கள்: கோலிவுட் பிரபலங்களுக்கு செல்வமணி மீண்டும் கோரிக்கை

கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி அவதிப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவும்படி பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்தார்கள். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார். அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

கரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் உறுப்பினர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரே‌‌ஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவச பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும். எங்கள் வேண்டுகோளை ஏற்று நல்ல இதயம் கொண்டவர்கள் இதுவரை ரூ.1 கோடியே 59 லட்சத்து 64 ஆயிரமும், அரிசி மூட்டைகளும் வழங்கி இருக்கிறார்கள். இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை.

25,000 தொழிலாளர்கள் உள்ள ஹிந்தித் திரையுலகில் சல்மான் கான், ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 5000 உதவிப்பணம் என ரூ. 13 கோடியை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பிரபாஸ் ரூ. 4 கோடியும் பவன் கல்யாண் ரூ. 2 கோடியும் நாகார்ஜுனா ரூ. 1 கோடியும் கொடுத்துள்ளார்கள்.

தமிழ் திரைப்பட துறையில் நல்ல நிலைமையில் இருக்கிற நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையின் அனைத்து பிரிவினரும் திரைப்பட தொழிலாளர்களை காப்பாற்ற நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com