வலியில்லாத மரணம்: கூகுளில் தேடிய சுசாந்த் சிங்

கூகுள் இணையத்தளத்தில் சுசாந்த் சிங் தேடிய வார்த்தைகள் என்னென்ன என்று மும்பைக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வலியில்லாத மரணம்: கூகுளில் தேடிய சுசாந்த் சிங்

கூகுள் இணையத்தளத்தில் சுசாந்த் சிங் தேடிய வார்த்தைகள் என்னென்ன என்று மும்பைக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) கடந்த ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

சுசாந்தின் நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்ரபோர்தி, சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தார். 

நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பாட்னா காவல்துறையில் சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகார் அளித்துள்ளார். சுசாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரியா மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகாரில் கூறியுள்ளதாவது: சுசாந்த் சிங்குக்குச் சொந்தமான ரூ. 1.5 கோடி அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. சுசாந்திடமிருந்த லேப்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ரியாவும் அவருடைய குடும்பத்தினரும் திருடி விட்டார்கள். மேலும் சுசாந்தின் மருத்துவ அறிக்கைகளை வெளியில் சொல்வதாக மிரட்டியுள்ளார்கள் என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பாட்னா காவல்துறை பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை ரியா மனு செய்துள்ளார். சுசாந்த் சிங் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்புப் பதிலைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் இணையத்தளத்தில் என்னென்ன வார்த்தைகள் கொண்டு சுசாந்த் சிங் தேடியுள்ளார் என்கிற தகவலை மும்பைக் காவல்துறை கூறியுள்ளது. கூகுளில் தன்னுடைய பெயரைக் கொண்டு என்னென்ன செய்திகள் வெளியாகியுள்ளன என்று தேடியுள்ளார் சுசாந்த். வலியில்லா மரணம் (painless death), இருதுருவ நோய் என்கிற மனநலக் குறைபாடு (bipolar disorder), மனச்சிதைவு (schizophrenia) ஆகிய வார்த்தைகளைக் கொண்டு கூகுளில் தேடியுள்ளார். இத்தகவலை மும்பை காவல் ஆணையர் பரம் பிர் சிங் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com