சஞ்சய் தத்துக்கு மும்பையில் சிகிச்சை: மனைவி அறிக்கை

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மும்பையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக...
சஞ்சய் தத்துக்கு மும்பையில் சிகிச்சை: மனைவி அறிக்கை

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மும்பையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவருடைய மனைவி தகவல் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஞ்சய் தத்துக்குச் சமீபத்தில் மூச்சுத்திணறலும் லேசான நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் உதவியால் ஓரிரு நாள்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன் என்று தகவல் தெரிவித்தார் 61 வயது சஞ்சய் தத். பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினார். 

இதையடுத்து, நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்பட நிபுணர் கோமல் நடா ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று ட்வீட் செய்தார். 

எனினும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து சஞ்சய் தத் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவருடைய மனைவி மான்யதா கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் சஞ்சய் தத்தின் உடல்நிலை குறித்து மான்யதா கூறியதாவது:

தன் வாழ்க்கையில் ஏராளமான ஏற்ற இறக்கங்களை சஞ்சய் தத் சந்தித்துள்ளார். உங்கள் அன்பினாலும் ஆதரவினாலும் அவர் அனைத்தையும் கடந்துள்ளார். இதற்காக நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இப்போது எங்களுக்கு இன்னொரு சவால் ஏற்பட்டுள்ளது. உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவினால் இதையும் கடந்து செல்வோம்.

மும்பையில் ஆரம்பக்கட்ட சிகிச்சையை மேற்கொள்வோம். கரோனா அச்சுறுத்தல் விலகிய பிறகு வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்வது பற்றி பரிசீலிப்போம். தற்போது, சிறந்த மருத்துவர்களின் கைப்பிடியில் சஞ்சய் தத் உள்ளார். 

அவருடைய உடல்நலக்குறைவு பற்றி எதுவும் யூகிக்க வேண்டாம். அவருடைய உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல் அளிப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com