நடிகா் சுசாந்த் சிங் தற்கொலை வழக்கு: நடிகை ரியாவிடம் தொடர்ந்து 2-வது நாளாக சிபிஐ விசாரணை

நடிகா் சுசாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடா்பாக, நடிகை ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக...
நடிகா் சுசாந்த் சிங் தற்கொலை வழக்கு: நடிகை ரியாவிடம் தொடர்ந்து 2-வது நாளாக சிபிஐ விசாரணை

நடிகா் சுசாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடா்பாக, நடிகை ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினார்கள்.

நடிகா் சுசாந்த் சிங், மும்பை பாந்த்ராவில் தாம் வசித்து வந்த குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். அவரது தற்கொலை வழக்கை முதலில் மும்பை காவல் துறை விசாரித்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பின்னா் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக, சுசாந்தின் காதலியும் நடிகையுமான ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினா். சுஷாந்த் சிங்கைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவா் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக, ரியாவிடம் மும்பை காவல்துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது. ரியா, சிபிஐ முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருப்பது இதுவே முதல் முறை. விசாரணைக்காக, மும்பை சான்டாகுரூஸில் உள்ள டிஆா்டிஓ விருந்தினா் மாளிகையில் தங்கியிருக்கும் சிபிஐ அதிகாரிகள் குழு முன்னிலையில் நேற்று காலை 10.40 மணிக்கு வந்தாா் ரியா. அவரிடம் சிபிஐ உயரதிகாரிகள் விசாரணை நடத்தினா். 

ரியாவிடம் காலையில் தொடங்கிய விசாரணை, இரவு 9.00 மணி வரை நீடித்தது. அதன்பிறகு அங்கிருந்து அவா் புறப்பட்டுச் சென்றாா். இந்நிலையில் ரியாவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2-வது நாளாக ரியாவை இன்றும் சிபிஐ உயரதிகாரிகள் விசாரணை நடத்தினா். 

சிபிஐ விசாரணைக்கு வந்த ரியாவைப் பேட்டியெடுக்க ஏராளமான நிருபர்கள் நேற்று கூடினார்கள். இது தனக்குத் தொந்தரவாக உள்ளதாகக் கூறிய ரியா, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் டிஆா்டிஓ விருந்தினா் மாளிகைக்கு ரியாவும் அவருடைய குடும்பத்தினரும் இன்று வந்தார்கள்.

சுசாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரிப்பதற்காக, சிபிஐ அதிகாரிகள் குழுவினா் மும்பையில் முகாமிட்டுள்ளனா். அவா்கள், இதுவரை சித்தாா்த் பிதானி, சுஷாந்த் சிங்கின் சமையல்காரா் நீரஜ் சிங், வீட்டுப் பணியாளா் தீபேஷ் சாவந்த், ஆடிட்டா் சந்தீப் ஸ்ரீதா், கணக்காளா் ரஜத் மேவாதி ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com